முகவரி கேட்பதுபோல் முதியவரிடம் செல்போன் பறிப்பு- 100 மீட்டர் இழுத்துச் சென்ற கொடூரம்

தமிழகத்தின் வளசரவாக்கத்தில் முதியவரிடம் முகவரி கேட்பது போல் நடித்த இளைஞர்கள் அவரிடமிருந்து செல்போனை பறித்து தப்பிக்கும்போது மோட்டார் சைக்கிளை அவர் பிடிக்க 100 மீட்டர் தூரம் அவரை இழுத்துச் சென்ற கொடூரம் நிகழ்ந்துள்ளது.

கண்காணிப்பு கேமராக்கள் அதிகளவில் நிறுவப்படுவதால் செயின், செல்போன் பறிப்பு குற்றவாளிகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆனாலும் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கிறது.

அப்படி நடந்த ஒரு நிகழ்வில் முதியவர் ஒருவரின் செல்போனை பறித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிக்க அவர் அந்த இரு சக்கர வாகனத்தை பிடிக்க முயல வாகனத்துடன் இழுத்துச் செல்லப்படும் காட்சி சிசிடிவியில் பதிவாகியுள்ளது.

சென்னை நெற்குன்றம் மேட்டுக்குப்பத்தைச் சேர்ந்தவர் ஜெயபாண்டியன் (66). இவர் நேற்று வளசரவாக்கம் மெஜஸ்டிக் காலனியில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் வீட்டுக்கு திரும்புவதற்காக சாலையில் நின்றிருந்த தனது இருசக்கர வாகனத்தை எடுக்க வந்தார்.

அப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அவரிடம் முகவரி கேட்பது அருகில் நெருங்கி கேட்கின்றனர். அவர்களுக்கு முதியவர் முகவரியை கூறும்போதே அவர் எதிர்பாராத நேரத்தில் திடீரென அவரது சட்டைப் பையில் இருந்த செல்போனை எடுத்துள்ளனர்.

எடுத்த வேகத்தில் இருசக்கர வாகனம் வேகமெடுக்க முதியவர் அவர்களை துரத்தி பிடிக்க எண்ணி அவர்கள் வாகனத்தின் பின்பக்க கம்பியை பிடிக்க அவர்கள் நிறுத்தாமல் சென்றதில் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சாலையில் இழுத்துச் செல்லப்பட்டதில் முதியவர் ஜெயபாண்டியன் உடல் முழுதும் சிராய்ப்புகள், காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. இதுகுறித்து போலீஸில் முதியவர் ஜெயபாண்டியன் அளித்த புகாரின்பேரில் சிசிடிவி காட்சியை சேகரித்த போலீஸார் 3 இளைஞர்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும் காட்சிப்பதைவை சேகரித்து வழிப்பறி நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *