நல்லாட்சியின் அமைச்சுப் பதவிகளைக் கையிலெடுங்கள்! – கூட்டமைப்புக்கு விஜயகலா அழைப்பு

“அரசைக் குறை கூறி எந்த விதத்திலும் நாங்கள் சாதிக்க முடியாது. எனவே, அரசுடன் இணைந்து நாங்கள் பயணிக்க வேண்டும். அதற்கென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொள்ள வேண்டும். இல்லாவிடின் நல்லாட்சி அரசின் அமைச்சுப் பதவிகளைக் கையில் எடுக்கவேண்டும்.”

– இவ்வாறு முன்னாள் இராஜாங்க அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான விஜயகலா மகேஸ்வரன் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணம் – பருத்தித்துறையில் நேற்று நடைபெற்ற ஜனாதிபதி மக்கள் சேவையின் உத்தியோகபூர்வ பணி நடமாடும் சேவையில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, ஈ.சரவணபவன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஜனாதிபதி மக்கள் சேவையின் உத்தியோகபூர்வ பணி நடமாடும் சேவையின் கீழ் பருத்தித்துறை பிரதேச செலயகத்துக்குட்பட்ட மக்கள் நேற்றுப் பயன்பெற்றனர்.

பருத்தித்துறை வடமராட்சி இந்து மகளிர் கல்லூரியில் நடைபெற்ற இந்த நிகழ்வில், வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டதுடன், ஏனைய சேவைகளும் இதன்போது முன்னெடுக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *