அட…இப்படியும் பந்தயமா? நீங்களும் தயாரா?
பந்தயம் நடத்துவதற்கு நம்மவர்கள் பல வித்தியாசமான யோசனைகளை கடைபிடித்து வருகின்றனர். எந்தவிதத்தில் பந்தயம் நடத்த வேண்டுமோ அனைத்து முறைகளிலும் நடத்தி விட்டார்கள்.
இப்போது ஒரு புதிய முறையில் பூசணியை துளையிட்டு அதனை துடுப்பை பயன்படுத்தி செலுத்தும் விசித்திரமான போட்டியொன்றை ஜெர்மனியில் புதன்கிழமை நடத்தியுள்ளார்கள்.
மூன்றாவது ஆண்டாக க்ரிவேல்ஷோஃபர் (Krewelshofer) ஏரியின் மீது நடத்தப்பட்ட இந்த போட்டியில், ஒரு நபர் அமரக்கூடிய அளவில் நடுவில் வெட்டப்பட்ட பெரிய பூசணிகளை பயன்படுத்தி போட்டியாளர்கள் பந்தயத்தை கலந்து கொண்டனர்.
பங்கேற்பாளர்கள் மிகவும் கடினமான முயற்சியை மேற்கொண்டு, துடுப்பை மாத்திரம் பயன்படுத்தி பூசணி ஓடத்தை செலுத்தி 35 மீட்டர் தூர வெற்றியிலக்கை அடைய வேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிரம்மாண்ட பூசணிக் காய்கள் இந்த பந்தயத்திற்காகவே விசேடமாக வளர்க்கப்படுவதுடன், அவை குறைந்தபட்சம் 250 கிலோகிராம் எடை இருக்க வேண்டும் என்பது போட்டியின் விதியாகும்.
மிக கனமான போட்டியாளரும், நல்ல எடையுடைய பூசணிக்காயும் இந்த போட்டிக்கு அவசியம். அதேவேளை இந்த போட்டியில் பங்குபற்றும் ஒவ்வொரு போட்டியாளரும் தமது சொந்த பூசணிகளை எடுத்து வர வேண்டும்.
தமது அணியைச் சேர்ந்த போட்டியாளர்கள் வரும் போது அவர்களுக்கு முன்னுரிமை வழங்கி எதிர் அணியை தோற்கடிப்பதற்கு ஒத்துழைக்க வேண்டும்.
எட்டு ஆண் போட்டியாளர்களும், எட்டு பெண் போட்டியாளர்களும் அணிகளாக பிரிந்து போட்டியில் ஈடுபடலாம். காலிறுதிப் போட்டிக்கு தெரிவான பின்னர் நொக் அவுட் முறையில் போட்டியாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள், அதன் பின்னர் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளை கடந்து வெற்றிபெறும் அணிக்கு 200 யூரோக்கள் பரிசாக வழங்கப்படும்.
அத்துடன், அணியில் வேகமாக பூசணி ஓடத்தை செலுத்திய போட்டியாளருக்கு சிறப்பு பரிசாக 300 யூரோக்கள் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.