விக்கி ஒரு நிலைப்பாட்டு வந்த பின்னரே அவர் பற்றி கூட்டமைப்பு கருத்துரைக்கும்!

“வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று ஒரு கருத்தைச் சொல்கிறார், நாளைக்கு ஒரு கருத்தைச் சொல்கிறார், நாளைமறுதினம் வேறொரு கருத்தைச் சொல்கிறார். இவை எல்லாத்தையும் ஞாபகத்தில் வைத்து அவருக்குப் பதில் சொல்வது இயலாத காரியம். ஆகவே, அவர் ஒரு குறித்த நிலைப்பாட்டுக்கு வந்த பின்னர் நாங்கள் பதிலளிப்பதுதான் சிறப்பாக இருக்கும்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்திலுள்ள அவரது இல்லத்தில் நேற்று நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைக் கூறினார்.

”எனது செயற்பாடுகள் தொடர்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் உள்ள சிலர் மகிழ்ச்சியடையவில்லை என்பது எனக்குத் தெரியும். நான் திரும்பத் திரும்ப, ஒரு நாடாளுமன்ற உறுப்பினரால் விமர்சிக்கப்படுகிறேன். முரண்பாட்டு அரசியலைத் தொடர நான் விரும்பவில்லை” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சண்டே ரைம்ஸின் நேற்றைய வெளியிட்டுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பில் செய்தியாளர் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

“வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன், கூட்டமைப்பின் முதலமைச்சராக ஐந்து ஆண்டுகள் பங்கேற்றுள்ளார். வடக்கு மாகாண சபைத் தேர்தல் காலத்தையும் எடுத்துக்கொண்டால் 5 ஆண்டுகளுக்கு மேலாக அவர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடைய உறுப்பினராகவும் உத்தியோகபூர்வமாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினராகவும் இருந்துள்ளார்.

இந்த ஐந்து ஆண்டுகளில் இப்போதுதான் முதன்முறையாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்யவேண்டும் என்ற கருத்தை அவர் சொல்கிறார். இந்த ஐந்து ஆண்டு காலமும் இந்த யோசனை அவருக்கு ஏன் வரவில்லை என்று எனக்குத் தெரியாது” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

தமிழரசுக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பைப் பதிவு செய்யவிடாது என்றும் தேர்தலில் வாக்குப் பெறும் இயந்திரமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழரசுக் கட்சி பயன்படுத்துகின்றது என்றும் சுரேஸ் பிரேமச்சந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளாரே? என்று செய்தியாளரால் கேள்வி எழுப்பப்பட்டது.

“சுரேஸ் பிரேமச்சந்திரனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலே ஓர் அங்கத்துவக் கட்சியாக இருந்தவர். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் மக்களால் மிக மோசமாக நிராகரிக்கப்பட்ட பிறகு அவர் தனது கட்சியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையே விமர்சிக்கத் தொடங்கினார். பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நேரம் அவரோடு இவரோடு சேர்ந்து தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து விலகிப் போட்டியிடுவதாகப் போய் இறுதியில் ஆனந்தசங்கரியுடன் சேர்ந்து போட்டியிட்டு அதிலையும் பாரதூரமான தோல்வியைச் சந்தித்தவர். ஆகையால் தங்களை மக்கள் நிராகரிப்பதற்கான காரணங்களை மற்றவர்கள் மீது சுமத்துவது அவருடைய பழக்க தோசமாக இருக்கிறது. அவரைப் பற்றி நான் வேறு ஒன்றும் சொல்ல விரும்பவில்லை” என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பதிலளித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *