இறுதிக்கப்பட்டப்போரின்போது இந்தியா ஆசிர்வதித்ததேதவிர எவ்வித அழுத்தங்களையும் பிரயோகிக்கவில்லை என்று போரின் இறுதிக்கட்டத்தில் இலங்கை இராணுவத்தை வழிநடத்திய தளபதியான அமைச்சர் பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேனா நேற்று தெரிவித்தார்.
வடக்கிலிருந்து படைமுகாம்களை அகற்றுவது குறித்து அரசு ஆழமாக சிந்திக்கவேண்டும் எனவும் அவர் கூறினார்.
சிங்கள தொலைக்காட்சியொன்றில் நேற்றுமாலை ஒளிபரப்பாகிய அரசியல் நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே பொன்சேகா மேற்கண்டவாறு கூறினார்.
“ போரின் இறுதிகட்டம் குறித்து யார் தவறான கருத்துகளை வெளியிட்டாலும் – உண்மை நிலைவரத்தை தெளிவுபடுத்த நான் தயங்கமாட்டேன். போர்காலத்தில் பாதுகாப்பு அமைச்சைவிட பலம்பொருந்திய நபராகவே கோட்டாபய ராஜபக் ஷ இருந்தார். எனவேதான் பாதுகாப்பு அமைச்சராக  இருந்தவர் வெளிநாடு சென்றிருக்ககூடும்.
போரின்இறுதிகட்டத்தில் இந்தியா எவ்வித அழுத்தங்களையும் கொடுக்கவில்லை. போரை முடிப்பதற்கான ஆசிர்வாதத்தையே அந்நாடு வழங்கியது.
நான் யாரிடமும் இதுவரை மன்னிப்பு கேட்டதில்லை. அவ்வாறு கேட்கும் வகையில் நடந்துகொண்டதும் இல்லை. இனியும் கேட்கப்போவதுமில்லை. உண்மையை பேசுவதற்காகவே  அரசியலுக்கு வந்தேன். ஆகவே, என்னால் கைகட்டி வேடிக்கை பார்த்து ஆமாம்சாமி போடமுடியாது. அவ்வாறான நபரெனில் மஹிந்த தரப்புடனேயே இருந்திருப்பேன். தவறுகள் இடம்பெற்றதால்தான் அவற்றை சுட்டிக்காட்டி வெளியேறினேன்.
அரசுக்குள் இருப்பவர்களே காலைவார முற்படுகின்றனர். என்னால் இரட்டைவேடம்போட முடியாது. அதனால்தான் வெளிப்படையாக பேசிவருகின்றேன்.
அதேவேளை, சட்டம், ஒழுங்கு அமைச்சுப் பதவி எனக்கு வழங்கப்பட்டிருக்குமானால் குற்றவாளிகளுக்கு நிச்சயம் தண்டனை கிடைத்திருக்கும்.
வடக்கில் காணிகள் விடுவிக்கப்பட்டுவருகின்றன. எனினும், படைமுகாம்களை விடுவிப்பது குறித்து ஆழமாக சிந்திக்கவேண்டும். அதை அரசியல் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் கணிப்பிடக்கூடாது. கடந்தகாலங்களில் சிற்சில குறைப்பாடுகள் நடந்துள்ளன” என்றார்.