நாமல் குமாரவால் அதிர்கின்றது இலங்கை! – மைத்திரி நாடு திரும்பிய கையோடு கூடுகின்றது பாதுகாப்பு சபை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பிய கையோடு தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தை கூட்டுவார் என நம்பகரமான வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

ஐ.நா. பொதுச் சபையின் 73 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த ஜனாதிபதி மைத்திரி அங்கு முக்கிய சந்திப்புகளை நடத்தியுள்ள நிலையில் விரைவில் நாடு திரும்பவுள்ளார்.

எதிர்வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்னர் அவர் கொழும்பு திரும்புவார் என்றும், அதன்பின்னர் முக்கியத்துமிக்க சந்திப்புகள் இடம்பெறவுள்ளன என்றும் அரச வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும், பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபயராஜபக்ஷவையும் படுகொலைசெய்வதற்கு சூழ்ச்சி வகுக்கப்பட்டது எனவும், அதன்பின்னணியில் பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவர் செயற்படுவதாகவும் அம்பலமாகியுள்ள தகவல்களால் தெற்கு அரசியல் களத்தில் பெரும் பரபரப்பும் கொந்தளிப்பும் ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பில் பலகோணங்களில் கருத்துகள் முன்வைக்கப்பட்டுவருவதுடன், பரபரப்புக்கு பஞ்சமில்லாத வகையில் நாளுக்கு நாள் தனியொரு நபரால் பல தகவல்கள் அம்பலப்படுத்தப்பட்டு வருகின்றன.

பயங்கரவாத தடுப்பு விசாரணைப் பிரிவுக்குப் பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா என்பவரே – பாதாளக் குழுவின் உதவியுடன் கொலை சூழ்ச்சியை நடைமுறைப்படுத்த இருந்தார் என்று நாமல் குமார என்பவர் அம்பலப்படுத்தியுள்ளார்.

அதுமட்டுமல்ல லண்டனிலுள்ள நபர் ஒருவர் குறித்தும், கைதாகியுள்ள இந்தியப் பிரஜை சம்பந்தமாகவும் வெளியாகியுள்ள தகவல்களால் இது சர்வதேச மட்டத்திலிருந்து வழிநடத்தப்படும் சூழ்ச்சியாக இருக்குமோ என்ற சந்தேகம் வலுத்துள்ளது.

இவ்வாறானதொரு பின்புலத்திலேயே பாதுகாப்பு சபையின் ஆலோசனைக்குழுக் கூட்டத்தை ஜனாதிபதி கூட்டவுள்ளார்.

பாதுகாப்புப் படைகளின் பிரதானி, முப்படைத் தளபதிகள், பொலிஸ்மா அதிபர் உட்பட உயர்மட்ட அதிகாரிகள் பலரும் இதில் பங்கேற்கவுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *