‘ஒன்லி லேடீஸ்’னு ஆறு மனைவிகளும் போட்டி மீட்டிங் நடத்துவோம்!” – ப்ரீத்தி சஞ்சீவ்

சின்னத்திரை நட்சத்திரத் தம்பதி, சஞ்சீவ் – ப்ரீத்தி. நடிப்பிலிருந்து பிரேக் எடுத்த ப்ரீத்தி,  தற்போது பாப் கட் ஹேர் ஸ்டைலில் இருக்கிறார். மீண்டும் நடிக்க தயாராகி வருகிறார். இவருடனான உரையாடலிலிருந்து….

“தற்போதைய பாப் கட் ஹேர் ஸ்டைலுக்கு சிறப்புக் காரணம் இருக்கிறதா?”

“ஆமாம்! என் சின்ன வயசுல இருந்து, ஆதரவற்ற ஹெச்.ஐ.வி மற்றும் புற்றுநோய் உள்ளவங்களைச் சந்திச்சு ஆறுதல் சொல்வேன்; என்னாலான உதவி செய்வேன். சில மாதங்களுக்கு முன்பு வரைஇ ரொம்ப நீளமான முடியை வெச்சிருந்தேன்.

புற்றுநோய் நோயாளிகளுக்கு உதவ, முடியை டொனேட் செய்யலாம்னு நினைச்சேன். கணவரும் சம்மதிச்சார். உடனே பாப் கட் பண்ணிட்டு, என் முடியை அடையார் புற்றுநோய் நிறுவனத்துக்கு விக் செய்யக் கொடுத்துட்டேன். சினிமா துறையில் இருந்தாலும்-  பாப் கட்ல இருக்கிறதால வருத்தப்படலை.

என் குழந்தைகளுக்காக நடிப்பிலிருந்து கொஞ்சம் பிரேக் எடுத்தேன். இப்போ மறுபடியும் நடிக்கத் தயாராகிட்டேன்.”

 

“கணவரின் நடிப்புப் பயணம் எப்படிப் போயிட்டு இருக்கு?”

“சீரியல்ல நடிச்சுகிட்டு இருந்தார். அதனால அவரால் சினிமாவில் கவனம் செலுத்த முடியலை. இப்போ ‘சாமி 2’ படத்தில் நடிச்சார். என் கணவரும் விஜய் அண்ணாவும் நெருங்கிய நண்பர்கள்னு எல்லோருக்கும் தெரியும். அவங்க இருவரும் சேர்ந்து நடிச்சு நீண்ட வருடங்களாகுது. இப்போ விஜய் அண்ணாவின் அடுத்தப் படத்தில் இவரும் நடிக்க பேச்சுவார்த்தைப் நடக்குது.

இன்னும் உறுதியாகலை. ‘திருமதி செல்வம்’ செல்வமாகத்தான் இப்போதும் மக்கள் மனசுல இருக்கிறார். அந்த சீரியலுக்குப் பிறகு ‘யாரடி நீ மோகினி’ சீரியல்ல நடிச்சார். ஒருகட்டத்துல கொடுத்த வாக்குறுதிபடி அவரின் கதை நகரலை. அதனால் அவருக்கு வருத்தம். அதனால் முன்கூட்டியே சொல்லிட்டுதான்இ அந்த சீரியல்ல இருந்து விலகினார். பிறகு உடனேயே சன் டிவியில ‘கண்மணி’ என்ற புதிய சீரியல்ல கமிட்டானார்.

பிரம்மாண்டமான அந்த சீரியலுக்காகஇ வெளிநாடுகள்ல அதிகம் ஷூட்டிங் போய்கிட்டிருக்கு. சன் டிவியில அடுத்த மாதத்திலிருந்து அந்த சீரியல் ஒளிபரப்பாகப்போகுது.”

 

“நடிகர் விஜய் குடும்பத்தினருடனான, உங்க குடும்ப நட்பு பற்றி…”

“நானும் என் கணவரும் காதலிச்சுகிட்டு இருந்த நேரம். ‘விஜய்யை மீட் பண்ண வர்றேன். அப்படியே உன்னைவந்து பார்த்துட்டுப் போறேன்’னு ஒருநாள் சஞ்சீவ் சொன்னார். ‘எந்த விஜய்?’னு கேட்டேன். ‘நீ என்ன பச்சக்குழந்தையா இருக்க. நடிகர் விஜய்யும் நானும் குளோஸ் ஃப்ரெண்ட்ஸ்’னு சொன்னார்.

‘இளைய தளபதி விஜய்யா? உண்மையாவா?’னு கேட்டேன். ‘ஆமாம்!’னு சொன்னார். எனக்குப் பெரிய இன்ப அதிர்ச்சி. எங்க கல்யாணம் முடிந்த பிறகு, முதல் விருந்து விஜய் அண்ணா வீட்டில்தான். அவரே எங்களுக்கு உணவுப் பரிமாறினதை எப்போதும் மறக்க முடியாது. விஜய் அண்ணா, என் கணவர் உள்பட ஆறு பேர் ரொம்ப குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். அவங்க அடிக்கடி மீட் பண்ணிப்பாங்க. மகிழ்ச்சியா இருப்பாங்க.

விஜய் அண்ணா, என் கணவர், ஶ்ரீநாத் ஆகிய மூவர் சினிமா துறையிலும், மத்த மூணு பேர் பிசினஸூம் பண்றாங்க. தங்கள் துறைச் சார்ந்த விஷயங்களை அவங்களுக்குள் ஷேர் பண்ணிப்பாங்க. அவங்க நட்பில், நாங்க ஆறு பேரும் தலையிடமாட்டோம். அவங்க மட்டும்தான் ஃப்ரெண்ட்லியா, கலாச்சுப்பாங்களா என்ன? நாங்க ஆறு பேரும் குளோஸ் ஃப்ரெண்ட்ஸ். எங்களுக்குள்ளும் கேலி, கிண்டல் எல்லாம் நடக்கும். ஆண் நண்பர்கள் மட்டும் மீட் பண்ணிக்கிற மாதிரி, ‘ஒன்லி லேடீஸ் மீட்டிங்’னு சொல்லி அவங்களுக்குப் போட்டியா நாங்க ஆறு பேரும் மீட் பண்ணிப்போம்.

ஆறு குடும்பத்தின் எந்த நிகழ்ச்சியானாலும் நாங்க எல்லோரும் குழந்தைகளுடன் கலந்துப்போம். விஜய் அண்ணா வீடும், எங்க வீடும் நீலாங்கரையில் பக்கத்துப் பக்கத்து வீதியில்தான் இருக்கு. ஓய்வுநேரமும், தகுந்த சூழலும் அமையும்போது நாங்க விஜய் அண்ணா வீட்டுக்குப் போவோம். அவங்க எங்க வீட்டுக்கு வருவாங்க.

 

கல்யாணமான புதிதில், எல்லாத் தம்பதிக்குள்ளும் சில கருத்து வேறுபாடுகள் வரும். அப்படி எனக்கும் சஞ்சீவுக்கும் சண்டைகள் வந்தபோது, ‘ப்ரீத்தி சொல்றதுதான் சரி’னு விஜய் அண்ணா எனக்கு சப்போர்ட் பண்ணுவார். சங்கீதா, நடுநிலையான கருத்துச் சொல்வாங்க. அப்புறம் சஞ்சீவுக்கும் எனக்கும் நல்ல புரிதல் உண்டாகி, குடும்ப வாழ்க்கை நல்லா போய்ட்டிருக்கு. போன்ல நானும் சங்கீதாவும் அடிக்கடிப் பேசிப்போம். சமையல், குழந்தைகள், வீட்டு நிர்வாகம்னு எல்லா விஷயங்களையும் பேசுவோம். அவங்க வீட்டு ஸ்பெஷல் உணவுகள் எங்க வீட்டுக்கும், எங்க வீட்டு ஸ்பெஷல் உணவுகள் அவங்க வீட்டுக்கும் போகும்.

எங்களை, ‘அங்கிள்-ஆன்டி’னுதான் இருவீட்டுக் குழந்தைகளும் கூப்பிடுவாங்க. விஜய் அண்ணா ரொம்ப அமைதினு சொல்லுவாங்க. எங்க ஃபேமிலி வட்டாரத்தில் அவர் ரொம்பவே கலகலப்பா இருப்பார். அவர் வீட்டுக்குப் போனால், அண்ணாவின் குழந்தைகள் இருவரும் ரொம்ப மரியாதையோடு பேசுவாங்க. குழந்தைகளை அவ்வளவு பொறுப்போடு வளர்க்கிறாங்க.”

 

நன்றி விகடன்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *