பாலைதீவை இராணுவம் வைத்திருக்கவே முடியாது! – வடக்கு முதலமைச்சர் விக்கி காட்டம்

கிளிநொச்சி, பூநகரிப் பிரதேசத்துக்கு உட்பட்ட பாலைதீவு கடற்பகுதி தொடர்ந்தும் இலங்கைப் படையினரின் கட்டுப்பாட்டில் காணப்படுவதை அனுமதிக்க முடியாது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற உலக சுற்றுலா தின நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கைக்கு மிக கூடிய வருவாயை தேடித்தருகின்ற சுற்றுலாத்துறையின் அபிவிருத்திப் பணிகள் குறிப்பிடத்தக்க அளவு வளர்ச்சி அடைந்துள்ள நிலையிலும் வட பகுதிக்கான சுற்றுலா அபிவிருத்திச் செயற்பாடுகள் இங்கொன்றும் அங்கொன்றுமாகச் சிறு சிறு அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவேயன்றி மற்றையபடி அதன் வளர்ச்சி தடைப்பட்ட நிலையிலேயே தொடர்ந்திருப்பது கவலையளிக்கின்றது.

வடபகுதியின் சுற்றுலா அபிவிருத்தி வளர்ச்சியடையாமைக்கு இப் பகுதியில் இடம்பெற்ற நீண்டகால யுத்தம் ஒரு காரணமாக காட்டப்படுகின்ற போதிலும் யுத்தம் நிறைவுக்கு வந்து 9 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் சுற்றுலாத்துறையின் வளர்ச்சியானது எது வித முன்னெடுப்புகளும் இன்றி முடங்கிக் கிடப்பது வருத்தத்திற்குரியது. இதற்கு போதுமான நிதி வசதிகள் மத்திய அரசால் வழங்கப்படாமை ஒரு காரணம். அடுத்து சுற்றுலா பற்றி எம்மிடையே போதிய அறிவும் ஆற்றலும் அனுபவமும் இல்லாதிருந்து வந்தமையும் ஒரு காரணம்.

வடமாகாணத்தில் பல்வேறு சுற்றுலா மையங்கள், தொல்பொருள் அடையாளங்கள், மிகச் சிறந்த மணற்பாங்கான கடற்கரை மையங்கள், காலனித்துவ ஆட்சிக்கு முற்பட்ட காலத்தில் இருந்தே இப் பகுதிகளின் நாகரீக வளர்ச்சி மேலோங்கி இருந்தமையை எடுத்துக் காட்டும் புராதன அடையாளங்கள், கோட்டை கொத்தளங்கள் மற்றும் புராதன கோவில்கள், தேவாலயங்கள் ஆகியன சுற்றுலா மையங்களாக அடையாளப்படுத்தியும் அவை அபிவிருத்தி செய்யப்படாது சிதறிக் கிடக்கின்றன.

உதாரணமாக வடபகுதியில் காணப்படுகின்ற தீவுக் கூட்டங்களிடையே காணப்படும் ஊர்காவற்றுறை வடபகுதியின் புராதன வர்த்தக மையமாகத் திகழ்ந்து வந்துள்ளது. இது காலனித்துவ ஆட்சிக்காலத்திலும் அதற்கு முன்பும் செழிப்பு வாய்ந்த ஒரு பிரதேசமாக, வர்த்தக மையமாக விளங்கியமைக்கான எண்ணற்ற அடையாளங்கள் இப் பகுதிகளில் நிறைந்து காணப்படுகின்றன.

மேலும் தீவுகளை அண்டிக் காணப்படும் வெள்ளை மணற்பாங்கான மணற்திட்டிகள், கடல் நீர், போதிய சூரியவெளிச்சம் ஆகியன சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கான பிரதான காரணிகளாக காணப்படுகின்றன. இலங்கை ஒரு சிறிய தீவாக காணப்படுவதால் போதும் இதனைச் சுற்றிவர உள்ள அழகும் வனப்பும் மிக்க கடற்கரைகள் சுற்றுலாப் பயணிகளை பெரிதும் கவர்ந்துள்ளன.

வடமாகாணத்தைச் சுற்றி பல்வேறு அழகான, தூய்மையான கடற்கரைகள் காணப்படுகின்றன. கசூரினா கடற்கரை, சாட்டி கடற்கரை, அக்கரை கடற்கரை, மணற்காடு கடற்கரை, மணித்தலை, முல்லைத்தீவு மேலும் நெடுந்தீவு, பேசாலை கடற்கரைகள் ஆகியனவற்றை குறிப்பிட்டு கூற முடியும்.

இக் கடற்கரைகளை அபிவிருத்தி செய்து சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடிய வகையில் நல்ல மலசலகூட வசதிகள், குடி தண்ணீர் வசதிகள், அமர்ந்திருக்கக்கூடிய கல்லினாலான இருக்கைகள், வெய்யில் காலத்தில் ஓய்வெடுக்கக்கூடிய சிறு சிறு குடில்கள், சுற்றுலாப் பயணிகள் தங்குவதற்கான அறைகள் ஆகியனவற்றை அமைப்பதன் மூலம் இவற்றை விருத்தி செய்ய முடியும்.

பாரிய சுற்றுலா உணவகங்கள் எம் சுற்றாடலின் எளிமையையும் அமைதியையும் பாதிப்பன என்பது எமது கருத்து. வலுவான திட்டமிடலின் பின்னரே பாரிய உணவகங்கள் கரிசனைக்கு எடுக்கலாம். கிழக்கில் பாசிக்குடா போன்ற இடங்களை மாவட்டத்திற்கு வெளியில் இருந்து வந்து முதலீட்டாளர்கள் கபளிகரம் செய்தமையை நாம் கருத்துக்கு எடுக்க வேண்டும். தெற்கில் ஹிக்கடுவ போன்ற இடங்களுக்குஏற்பட்ட சமூகப் பாதிப்பு எம்மால் கவனத்திற்கு எடுக்கப்பட வேண்டும்.

நீச்சல் பழகுவதற்கும் மற்றும் சுழியோடக் கற்றுக்கொள்ளல், படகுச்சவாரி மற்றும் இன்னோரன்ன நீர் சார்ந்த விளையாட்டுக்களை மேம்படுத்துவதற்கு ஏற்றதான ஒரு கடற்கரையாக பாலைதீவு கடற்கரையை நாம் கொள்ளலாம். பூநகரிப் பிரதேசத்திற்கு உட்பட்ட பள்ளிக்குடாவிலிருந்து சுமார் 20 கி.மீ. தூரத்தில் அமைந்திருக்கும் இந்த பாலைதீவு கடற்பகுதி தற்போது முற்றுமுழுதாக இலங்கையின் பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இதனைத் தொடர்ந்து ஏற்க முடியாது. இப்பகுதிகளை விடுவித்து சுற்றுலாத்துறை அபிவிருத்தியில் ஆர்வமுடைய வடமாகாண முதலீட்டாளர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் கையளிப்பதன் மூலம் பாலைதீவுக்கும் பள்ளிக்குடாவிற்கும் இடையே படகு சேவைகள்,பாதை சேவைகள் மற்றும் குளிரூட்டப்பட்ட உல்லாசப் படகுகள் போன்ற சேவைகளை வழங்கமுடியும்.

யாழ்ப்பாணம் மாநகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கூட பல்வேறு சுற்றுலா மையங்கள் இருக்கின்றன. நல்லூர் கோவில், யாழ்ப்பாணக் கோட்டை, யாழ்ப்பாண இராஜதானி, யாழ் மணிக்கூட்டுக் கோபுரம், பழைய பூங்கா, சுப்பிரமணியம் பூங்கா, யாழ்ப்பாணம் பழைய கச்சேரிக் கட்டடங்கள், மந்திரி மனை, சங்கிலியன் தோரணவாயில், நாகவிகாரை, புல்லுக்குளம், ஆரியகுளம், பண்ணைக்கடற்கரை எனப் பல்வேறு சுற்றுலா மையங்கள் விரிந்து கிடக்கின்றன. இவற்றில் சில புனரமைக்கப்பட்டு மக்களின் பொழுதுபோக்கு மையங்களாக இப்பொழுது திகழ்கின்றன. யாழ்ப்பாணத்தின் மத்திய பகுதியில் காணப்படுகின்ற டச்சுக் கோட்டைப் பகுதி அழகுபடுத்தப்படவேண்டும். இதற்கு நெதர்லாந்து அரசு எமக்கு போதிய உதவிகளைச் செய்யக் காத்துக் கிடக்கின்றது. கோட்டை பற்றிய தெளிவான விளக்கங்களை வீடியோ காட்சிகள் மூலம் அக் கோட்டை அண்டிய பகுதிகளிலும் கோட்டைக்குள்ளும் காட்சிப்படுத்துவதன் மூலம் அதன் சரித்திரத்தை வெளிநாட்டிலிருந்து வருகின்ற சுற்றுலாப் பயணிகளும் பார்த்து தெளிவுறுவதற்கு ஏற்றதாக அமையும்.

அதே போன்று பாரம்பரிய உணவு விற்பனை மையங்கள், சுதேச மருத்துவம் போன்றவை எம்மிடம் இருக்கும் சமையல் திறமைகளையும் மருத்துவப் பாரம்பரியங்களையும் எடுத்துக்காட்டகூடியவாறு அபிவிருத்திகள்அமையலாம். மற்றும் நெடுந்தீவுக் கிராமம் ஒரு சுற்றுலாக் கிராமமாக புனரமைப்புச் செய்யப்படலாம். யாழ்ப்பாணத்திலிருந்து சுமார் 30கி.மீ. தொலைவில் காணப்படுகின்ற இக் கடல் கிராமத்திற்கு வருடாந்தம் பல்வேறு நாடுகளிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகைதருகின்ற போதும் அதனை ஒரு சுற்றுலாத்தீவாக மாற்றுவதற்கு முயற்சிகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

சுற்றுலா அபிவிருத்தியுடன் எமது சூழல் பாதுகாப்பு, பாரம்பரிய கலாசாரப் பாதுகாப்பு, கிராமிய மக்கள் நலப் பாதுகாப்பு என்பனவற்றையும்இணைத்து திட்டங்களை வகுத்து சுற்றுலாவை ஒழுங்கு செய்வதன் மூலம் வடபகுதியை ஏனைய பகுதிகளில் உள்ள சுற்றுலாமையங்களுக்கு ஒப்பான ஒரு பகுதியாக மாற்ற முடியும்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *