பொலிஸ்மா அதிபருக்கு எதிராக விசாரணைகள் இன்று ஆரம்பம்!

பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தரவுக்கு எதிராக விசாரணைகள் இன்று ஆரம்பமாகிவிட்டன என்று சட்டம், ஒழுங்கு பிரதி அமைச்சர் நளின் பண்டார தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“பொலிஸ்மா அதிபரின் நடத்தை தொடர்பில் பலரும் பலகோணங்களில் விமர்சனங்களையும், முறைப்பாடுகளையும் முன்வைத்தனர். இவை குறித்து விசாரணை நடத்துவதற்காக சட்டம், ஒழுங்கு அமைச்சால் உயர்மட்ட அதிகாரிகள் தலைமையிலான குழுவொன்று அமைக்கப்பட்டது.

இக்குழுவின் முன்னிலையில் இன்று ஆஜராகி பொலிஸ்மா அதிபர் வாக்குமூலம் அளித்துள்ளார். எனவே, சட்டத்தின் பிடியிலிருந்து எவரும் தப்ப முடியாது. நல்லாட்சியில் அதற்கு இடமும் அளிக்கப்படாது.

அதேவேளை, பிரதிப் பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா தொடர்பில் சி.ஐ.டியினர் விசாரணை நடத்துவார்கள். அது சி.ஐ.டியினருக்குரிய பணியாகும். இதில் நாம் தலையிடமாட்டோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *