மௌலவி ஆசிரியர் நியமன வயதெல்லை 45 ஆக அதிகரிப்பு! – அமைச்சர் பைசர் பாராட்டு

நாடளாவிய ரீதியிலிருந்து மெளலவி ஆசிரியர் நியமனத்திற்காக விண்ணப்பிக்கும் மௌலவி ஆசிரியர்களின்  வயதெல்லையை,  45 ஆக அதிகரிக்க கல்வி அமைச்சு  தீர்மானித்திருப்பதையிட்டு மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் ஆகியோருக்கு, தனது நன்றிகளையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளார்.

மௌலவி ஆசிரியர் நியமன வயதெல்லையை, அரசுஅதிகரிக்கவுள்ளமை தொடர்பில் அமைச்சர் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:-

“மிக நீண்ட காலத்திற்குப் பிறகு,  கல்வி அமைச்சினால் சமய ஆசிரியர்களுக்கான விண்ணப்பங்கள்  கோரப்பட்டுள்ளன. எனினும், இந்த நியமனங்களின் வயதெல்லை 35 ஆகக்  காணப்பட்டது.  இதற்கு முன்பிருந்த  அரசின் காலத்தில் வழங்கப்பட்ட நியமனத்தில் காணப்பட்ட குளறுபடிகளினால்  பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட பலர், இந்த நியமன வயது எல்லைக்குள்  விண்ணப்பிக்க முடியாத சூழ்நிலையில்  காணப்படுகின்றனர்.

இந்நிலையில், 35 ஆக உள்ள  வயதெல்லையை 45 ஆக அதிகரிக்குமாறு,  இலங்கை இஸ்லாமிய ஆசிரியர் சங்கம் உள்ளிட்ட உலமாக் கட்சி மற்றும் பல சிவில் அமைப்புக்கள், கல்வி அமைச்சரிடம் இது குறித்த  கோரிக்கைகளை முன்வைத்திருந்தன. இதன் பின்னணியில்,  குறித்த வயதெல்லையை 45 ஆக அதிகரிக்க, கல்வி அமைச்சு நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன், இது தொடர்பிலான வர்த்தமானி அறிவித்தலையும் விரைவில் வெளியிடவுள்ளது.

இது தொடர்பாக, கல்வி அமைச்சின் கண்காணிப்பு நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரானும் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்திடம் தொடர்ச்சியான வேண்டுகோள்களையும்  விடுத்திருந்தார். இவரது  வேண்டுகோளுக்கமைவாகவும் இந்த நியமனத்துக்கான வயதெல்லை 45 ஆக அதிகரிக்கத்  தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவரது முயற்சிகளுக்கும் இவருக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *