உயிருக்கு அச்சுறுத்தல் எனில் நாட்டைவிட்டு வெளியேறுக! – கோட்டாவுக்கு பொன்சேகா சாட்டையடி

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்குக் கூடுதல் பாதுகாப்பு தேவையில்லை தெரிவித்துள்ளார் அமைச்சரும் முன்னாள் இராணுவத் தளபதியுமான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.

வவுனியாவில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

“எனக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை விடவும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு அதிகம்.

எனக்கு, 17 பேர் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டுள்ளனர். ஆனால், கோட்டாபய ராஜபக்ஷவுக்கு, இராணுவம், விசேட படை, கொமாண்டோக்களை உள்ளடக்கிய 25 பேர் பாதுகாப்புக்காக வழங்கப்பட்டிருந்தனர் என்பது எனக்குத் தெரியும்.

ஓர் ஆர்ப்பாட்டத்தின்போது, அவருக்கு விசேட அதிரடிப்படையினர் பாதுகாப்பு வழங்குவதைப் பார்த்தேன். இராணுவப் பாதுகாப்பு விலக்கப்பட்ட பின்னர், அவருக்குப் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது பற்றி எனக்குத் தெரியாது. ஆனால், அவருக்குப் போதிய பாதுகாப்பு உள்ளது.

போரின்போது, அவரது பாதுகாப்புக்காக 500 படையினர் ஈடுபடுத்தப்பட்டனர். ஆனால், இப்போது,  அதற்கு அவசியமில்லை. ஏனென்றால்,  நாட்டின் நிலைமை மாறி விட்டது.

முன்னாள் பாதுகாப்புச் செயலர் ஒரு சாதாரண குடிமகன்தான். அவர் அரசிலோ அல்லது வேறெந்த பொறுப்பிலுமோ உள்ள ஒருவரல்லர்.

நாட்டின் அதிபருக்கோ, பிரதமருக்கோ வழங்கப்படுவது போல, அவருக்கு அமைச்சர்கள் பாதுகாப்புப் பிரிவின் பாதுகாப்பு தேவையில்லை.

நான் அறிந்தவரையில் எந்தவொரு செயலருக்கும் ஓய்வுபெற்ற பின்னர் பாதுகாப்பு அளிக்கப்படவில்லை.

இந்த நாட்டில் பலருக்கு மரண அச்சுறுத்தல் இருக்கின்றது. அவர்கள் எல்லோருக்கும் குண்டுதுளைக்காத வாகனங்களை வழங்கி பாதுகாப்பு அளிக்க நாட்டில் நிதி இல்லை.

கோட்டாபய ராஜபக்ஷ தனது உயிர் பற்றி அச்சம் கொண்டிருந்தால்,  நாட்டை விட்டு வெளியே போகலாம். அவர் ஓர் அமெரிக்க குடியுரிமை பெற்றவர்தானே” என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *