இராணுவத்தினர் மீதுள்ள கரிசனையை அரசியல் கைதிகளிடமும்காட்டுங்கள்! – ஜனாதிபதியிடம் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை
போர்க்குற்றச்சாட்டின்போது ஜனாதிபதி எவ்வாறு இராணுவத்தைப் பாதுகாப்பதில் அக்கறை காட்டினாரோ அதேபோன்று, அரசியல் கைதிகள் விடுதலை தொடர்பிலும் அக்கறை செலுத்தவேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளைப் பார்வையிட்ட பின்னர் அங்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடக்கு – கிழக்கில் ஆயிரம் பௌத்த விகாரைகளை அமைக்கவும், மகாவலி என்ற பெயரில் வடக்கில் சிங்களக் குடியேற்றங்களை கொண்டுவரவும் பெருந்தொகையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் மக்களின் கோரிக்கைகள், தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை மற்றும் காணாமல்போனவர்கள் விடுதலை தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடுவதாகவும், அரசியல் கைதிகளில் பிரச்சினைக்குத் தீர்வைப் பெற்றுத் தருவதாகவும் கூறி எம்மை ஏமாற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போர்க்குற்றம் தொடர்பில் இராணுவத்தினர் மீது காட்டும் அக்கறையை, தமிழ் அரசியல் கைதிகள் விடயத்திலும் செலுத்தி அவர்களுக்கான விடுதலையையும் உறுதி செய்ய வேண்டும்” – என்றார்.