காணாமல்போன கிழக்குப் பல்கலை பெண் விரிவுரையாளர் சடலமாக மீட்பு! – மரணத்தில் சந்தேகம்

கிழக்குப் பல்கலைக்கழகத்தின் திருகோணமலை வளாகத்தின் பெண் விரிவுரையாளர் ஒருவர் திருகோணமலை நகர கடலில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். கர்ப்பிணியான இவரின் மரணத்தில் சந்தேகம் நிலவுகின்றது எனத் தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றுமுன்தினம் மதியம் கடமைகளை முடித்து விட்டு பல்கலைக்கழகத்தில் இருந்து வீடு சென்ற அவர் பிற்பகல் 2.30 மணியளவில் இருந்து காணாமல்போயுள்ளார். இந்நிலையில், நேற்று அவரது பாதணிகள் திருகோணமலை கடற்கரையிலிருந்து கண்டெடுக்கப்பட்ட நிலையில், நேற்றுப் பகல் சடலம் கடற்கரையில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா, ஆசிக்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் விரிவுரையாளரின் உயிரிழப்பில் சந்தேகம் இருக்கின்றது எனவும், உயிரிழப்புக்கான காரணம் இதுவரை தெரியவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் நேற்றுமுன்தினம் மதியம் தனது கணவனுக்குத் தொலைபேசி மூலம் அழைத்து திருகோணமலைக்கு வருமாறு உயிரிழந்த பெண் கூறியுள்ளார் என்று கணவன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *