தமிழின அழிப்புச் செய்த இராணுவத்துக்கு ஓர் அங்குலம் நிலத்தைக்கூட வழங்காதீர்! – தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்து

“வடக்கில் பொதுமக்களின் காணிகளில் உள்ள இராணுவம் அதிலிருந்து வெளியேறுவதற்குப் பணம் தரவேண்டும் என நிபந்தனை விதிப்பது ஜனநாயகத்தைத் குழி தோண்டிப் புதைக்கும் செயற்பாடு” என்று தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, தமிழ் மக்களை இனவழிப்புச் செய்த இராணுவத்துக்குக் கோட்டையை மட்டுமல்ல ஓர் அங்குல நிலம் கூட வழங்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளது.

யாழ்.மாவட்டத்தில் படையினர் வசமிருக்கும் காணிகளை விடுவிப்பதற்கு அரசு பணம் வழங்கவேண்டுமென்றும், யாழ்ப்பாணக் கோட்டையைப் படையினருக்குத் தந்தால் மக்களின் காணிகள் பலவற்றையும் விடுவிக்க முடியுமெனவும் யாழ். மாவட்ட இராணுவத் தளபதி வெளியிட்ட கருத்து தொடர்பாகக் கேட்டபோதே மேற்படி கட்சியின் செயலாளர் செல்வராஜா கஜேந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கு – கிழக்கில் தமிழ் மக்களது காணிகளில் உள்ள இராணுவம் ஒட்டுமொத்தமாக வெளியேறவேண்டும் என்பதுவே அனைத்துத் தமிழ் மக்களதும் கோரிக்கையா உள்ளது. இதனையே தமிழ்த் தலைமைகள் வலியுறுத்தி வருகின்றன. இவ்வாறான நிலையில் மக்களது கோரிக்கைகளுக்கு ஏற்ப காணிகளிலிருந்து வெளியேற வேண்டியதே இராணுவத்தின் கடமையாகும்.

தாம் வெளியேறப் பணம் தரவேண்டும் என்றெல்லாம் நிபந்தனைகள் விதித்து மக்களை அச்சுறுத்துவதானது ஜனநாயகத்தைக் குழி தோண்டிப் புதைக்கும் செயலாகும். அத்துடன் வடக்கு – கிழக்கு அபிவிருத்திக்கு ஒதுக்கும் பணத்தை இராணுவத்திற்கு வழங்கவும் கூடாது.

யாழ்.கோட்டை என்பது தொல்லியல் சான்றாகும். அதனை இராணுவத்துக்கு வழங்க முடியாது. கோட்டை மாத்திரமல்ல ஓர் அங்குலம் எமது நிலத்தைக் கூட தமிழர்களை இனவழிப்புச் செய்த இராணுவத்துக்கு வழங்கமுடியாது” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *