தமிழ் அரசியல் கைதிகளுக்காக யாழில் வெடித்தது போராட்டம்!

தமது விடுதலையை வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக யாழ்ப்பாணத்தில் இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பு ஏற்பாடு செய்த இந்தக் கவனவீர்ப்புப் போராட்டம் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்துக்கு முன்பாக நடைபெற்றது.

தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் அரசும் தமிழர் தரப்புப் பிரதிநிதிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என இதன்போது வலியுறுத்தப்பட்டது.

அத்துடன் அரசியல் கைதிகளுக்குப் பொது மன்னிப்பையோ அல்லது குறுகிய காலப் புனர்வாழ்வை வழங்கியோ விரைவில் அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் இந்தப் போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

இந்த விடயம் தாமதிக்கப்படும் பட்சத்தில் வடக்கு மாகாணம் தழுவிய போராட்டங்கள் எதிர்வரும் நாட்களில் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள அரசியல் கைதிகளின் உறவினர்கள் மற்றும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *