தமிழ் மக்களின் பிரச்சினைகளை எந்த அரசுமே தீர்க்கவே இல்லை! – திருமலையில் ஜனாதிபதி ஆதங்கம்

“1947 முதல் ஆட்சியமைத்த அனைத்து அரசுகளும் தங்களது இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக மட்டுமே வடக்கு – கிழக்கு மக்களின் பிரதிநிதிகளைப் பயன்படுத்திக் கொண்டார்களே தவிர, அந்த மக்களின் பொருளாதார மற்றும் அபிவிருத்திப் பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய அரசியல் பின்புலத்தை அமைக்கவில்லை.”

– இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

வடக்கு – கிழக்கு இனப் பிரச்சினைக்குப் பல விடயங்கள் அடிப்படையாக இருந்தபோதிலும் தகுந்த அரசியல் தலைமை அந்தப் பிரதேசங்களில் பிரதிபலிக்காதது முக்கிய காரணமாக அமைந்துள்ளதென்றும் அவர் குறிப்பிட்டார்.

திருகோணமலை மாவட்டத்தில் அபிவிருத்தியை ஏற்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘சிறிசர பிவிசும’ அபிவிருத்திச் செயற்திட்டத்தின் ஊடாக நிறைவு செய்யப்பட்ட பல செயற்திட்டங்கள் நேற்று வியாழக்கிழமை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபது மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

“ஒரு மாகாணத்தை அபிவிருத்தியை நோக்கிக் கொண்டு செல்வதற்கு அந்த மாகாணத்தில் குறைந்தபட்சம் ஒரு அமைச்சரவை அமைச்சுப் பதவியாவது வழங்கப்படவேண்டும். நாட்டைப் பிளவுப்படுத்தாத அதிகாரப் பகிர்வு எனப்படும் எண்ணக்கரு அப்போதே யதார்த்தமாகும்.

யுத்தத்தின் பின்னர் அப்போதைய அரசு சரிவர கடமைகளை நிறைவேற்றாததன் காரணமாகவே 2015 ஜனவரி 08 ஆம் திகதி நாட்டின் மக்கள் என்னை ஜனாதிபதியாக தேர்தெடுத்தார்கள். கடந்த மூன்றரை வருடங்களாக அந்தப் பணிகளை மேற்கொள்வதற்கு தற்போதைய அரசு அர்ப்பணிப்புடன் செயற்படுகிறது.

யுத்தம் நிலவிய பிரதேசங்களில் மக்களிடையே நிலவும் அச்சத்தை தீர்க்கும் முகமாக இன, மத ரீதியான நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு அரசு பாரிய பங்காற்றியுள்ளது.

அதனூடாக மீண்டும் ஒரு யுத்தம் ஏற்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம்” -என்றார்.

‘சிரிசர பிவிசும’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட கோமரங்கடவல பக்மீகம குளத்தை மக்களிடம் கையளித்தல், நீண்டகாலமாக இருந்துவரும் யானைகளுக்கும் மனிதர்களுக்குமிடையிலான மோதலுக்குத் தீர்வை வழங்கும் வகையில் கோமரங்கடவல பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள 30 கிலோ மீற்றர் நீளமான யானை வேலியைத் திறந்து வைக்கும் நிகழ்வுகளும் நேற்று ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்றன.

இந்த நிகழ்வுகளில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம், திருகோணமலை தொகுதி அமைப்பாளர் ஆரியவதி கலப்பதி உள்ளிட்ட கிழக்கு மாகாண மக்கள் பிரதிநிதிகள் பலரும் பங்குபற்றினர்.

இதனிடையே திருகோணமலை பத்திரகாளி அம்பாள் கோவிலுக்கும் நேற்றுக் காலை விஜயம் செய்த ஜனாதிபதி, அங்கு இடம்பெற்ற சமய வழிபாடுகளில் கலந்துகொண்டு ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார்.

கோயிலுக்கு விஜயம் செய்த ஜனாதிபதியை கோவிலின் தலைமை குருக்கள் சோ.ரவிச்சந்திர சிவாச்சாரியார் வரவேற்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *