கண்டபடி படையினரை விமர்சிக்க வேண்டாம்! – கெஞ்சுகிறார் யாழ். தளபதி

“இராணுவத்தினர் மேற்கொள்ளும் செயற்பாடுகளை இங்குள்ள ஊடகங்கள் கண்டபடி விமர்சிக்கின்றன. நாங்கள் மக்களுக்கு நல்லதைச் செய்தாலும் அதைத் தவறாக விமர்சிக்கிறார்கள். அவ்வாறு செய்யவேண்டாம் என்று நான் கோருகிறேன்.”

– இவ்வாறு தெரிவித்தார் யாழ். மாவட்டக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி.

பலாலி இராணுவத் தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்:-

“இராணுவம் செய்யும் உதவிகளை மக்கள் விருப்பத்துடன் ஏற்றுக்கொண்டாலும் சிலர் அதை விமர்சிக்கும் நிலை உள்ளது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் மக்களுக்காகவே நாம் உதவிகளைச் செய்து வருகின்றோம்.

நாம் மக்களுக்கு உதவிகள் செய்வதன் மூலம் இங்கு தேர்தல்களில் போட்டியிடப்போவதில்லை. அவ்வாறான எண்ணம் எமக்கில்லை.

இரானுவம் அரசியல்வாதிகளுடன் சேர்ந்து உதவிகளைச் செய்வதில்லை. ஏனெனில் அந்த உதவிகள் அரசியலாகக் கூடாது என்பதற்காகவே. அதனால் இராணுவம் தனியாகவே மக்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றது.

ஜனாதிபதியும் பிரதமரும் வடக்கு – கிழக்கில் உள்ள மக்களுக்கு உதவிகளைச் செய்து இனங்களுக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்த மிகுந்த ஆர்வமாக உள்ளனர்.

இந்த ஆட்சிக் காலத்தில் அதிக தடவைகள் இந்தப் பிரதேசங்களுக்கும் அவர்கள் வருகை தந்திருக்கின்றனர். கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கூட வடக்கு-கிழக்கு அபிவிருத்திச் செயலணியையும் உருவாக்கியிருக்கின்றனர். அதேபோன்று எதிர்காலத்திலும் பலவற்றைச் செய்ய இருக்கின்றனர்.

இராணுவம் மக்கள் நலன் சார்ந்து செய்யும் உதவிகளை அல்லது வேலைகளை ஊடகங்கள் திரிவுபடுத்தி வேறு விதமாகப் பிரசுரம் செய்கின்றன. இவ்வாறு செயற்படும் சில ஊடகங்களைப் பார்க்கின்றபோது கவலையளிக்கின்றது.

மக்களுக்குப் பிழையானதைக் கொடுக்காதீர்கள். சரியான விடயங்களைக் கொடுங்கள். நாங்கள் செய்வதில் ஏதாவது தவறு என்றால் அதைச் சொல்லுங்கள். இராணுவம் எங்காவது தவறு இழைத்தால் அதற்கு ஆதரம் இருக்குமாயின் கட்டாயம் நடவடிக்கை எடுப்போம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *