ஜனநாயகத்தை பலப்படுத்தும் தகவல் அறியும் சட்டம்! இலங்கையில் கடந்துவந்த பாதை!!

செப்டம்பர் 20ம் திகதி அனுஷ்டிக்கப்படுகின்ற சர்வதேச தகவல் தினம் மற்றும் இலங்கையின் தகவல் அறியும் உரிமை சட்டத்துக்கு ஒரு வருடம் பூர்த்தியாவதை முன்னிட்டு இந்த கட்டுரை எழுதப்படுகின்றது.

ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பிக்கப்பட்டு ஏழு தசாப்தங்களுக்கும் மேலாகின்றது. ஐக்கிய அமெரிக்கா, பிரித்தானியா, ரஷ்யக் குடியரசு மற்றும் சீனா ஆகிய நாடுகள் இணைந்து 1944ம் ஆண்டு தயாரித்த கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக 1945ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 24ம் திகதி ஐக்கிய நாடுகள் சபை ஆரம்பிக்கப்படுகின்றது. அன்று உலக நாடுகளில் 51 நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்றிருந்தது.

குறித்த சபை உருவாக்கப்பட்டு ஒரு வருடத்தினை கடந்த நிலையில் இவ்வமைப்பானது பொதுமக்களுக்கு தகவல்களை தேடியறிவதற்கும், பெற்றுக் கொள்வதற்குமான உரிமையினை உறுதிப்படுத்துவதற்கான ஆவணம் ஒன்றை வெளியிட்டது. பின்னர் மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச பிரகடனமும் வெளியிடப்பட்டது. அதன் 19வது பிரிவான Article 19  இன் மூலம் கருத்தொன்றை கொண்டிருத்தல், வெளியிடல், தகவல்களை பெற்றுக் கொள்ளல், தகவல் பகிரங்கப்படுத்துதல் ஆகிய உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டன.

ஐக்கிய நாடுகள் அமைப்புடன் இணைந்த மேலும் சில அமைப்புக்கள் பிற்காலத்தில் ஆரம்பிக்கப்பட்டன.

ஐக்கிய நாடுகள் அமைப்பின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாச்சார அமைப்பு என்று கூறப்படுகின்ற யுனெஸ்கோ அமைப்பானது 1946ம் ஆண்டு பரிஸ் நகரில் ஆரம்பமானது. செய்தி பகிர்ந்தளிப்பு தொடர்பில் யுனெஸ்கோ அமைப்பானது மேற்கொண்ட ஆய்வு இங்கு குறிப்பிடத்தக்கது. செய்தி பகிர்ந்தளிப்பு நடவடிக்கைகளில் செய்தி முகவர்கள் முக்கியத்துவம் பெறுகின்றனர்.

மேற்கத்தேய கோட்பாடுகளை பிரச்சாரம் செய்யும் முயற்சியில் ஈடுபடுவதாக செய்தி முகவர் நிலையங்கள் மீது குற்றம் சுமத்தப்படுகின்றது. அதன் விளைவினால் மூன்றாம் உலக நாடுகள் மேற்கத்தேய மோகம் கொண்ட செய்தி முகவர் நிலையங்களை சாட ஆரம்பித்தது.

மூன்றாம் உலக நாடுகள் நாடுகள் மேற்கத்தேய மோகம் கொண்ட செய்தி முகவர் நிலையங்கள் மீது வெளிக்காட்டுகின்ற எதிர்பலைகளை யுனெஸ்கோ நிறுவனம் கவனத்திற் கொள்ள வேண்டி இருந்தது.

ஆசிய செய்திச் சேவை மற்றும் ஆப்பிரிக்க செய்தி சேவை என்பவை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் அதுவரை காலமும் மேற்கத்தேய செய்தி முகவர் நிலையங்கள் பக்கச்சார்பாக செய்தி அறிக்கையிடலில் ஈடுபடுவதை உணர்ந்த யுனெஸ்கோ அமைப்பானது 1974ம் ஆண்டு பரிஸில் நடைபெற்ற தனது 18ஆவது பொதுக்கூட்டத்தொடரில் நடுநிலையாக செய்தி அறிக்கையிடல் தொடர்பில் ஆழமாக கலந்துரையாடியது.

1976ம் ஆண்டு தொடர்பாடல் பிரச்சினைகள் தொடர்பில் அவதானத்தினை செலுத்தி மெக்பிரைட் ஆணைக்குழுவினை ஆரம்பிப்பதற்கும் யுனெஸ்கோ அமைப்பு அடித்தளமிட்டது.

சமாதானத்திற்கான நோபல் விருது மற்றும் சமாதானத்திற்கான லெனின் விருது ஆகியவற்றினை பெற்றுக் கொண்ட அறிஞரான மெக்பிரைட்டின் தலைமையில் செயற்பட்ட ஆணைக்குழுவின் அறிக்கையானது ‘MANY VOICE ONE WORLD’ எனும் பெயரில் வெளியானது.

ஐக்கிய அமெரிக்க குடியரசு, சோவியத் ரஷ்யா, இந்துனேஷியா, கொலொம்பியா, யப்பான், நைஜீரியா, யூகோஸ்லாவியா, எகிப்து, இந்தியா, சிலி உட்பட 15 நாடுகளின் பங்களிப்புடன் இவ்வறிக்கை தயாரிக்கப்பட்டது.

நல்லெண்ணத்துடன் எதிர்காலத்தில் ஏற்படுகின்ற கலந்துரையாடலின் ஊடாக மனித வர்க்கத்தின் நன்மைக்காக இவ்வாணைக்குழுவானது செயற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. பல்வகைமைகளுக்கு மதிப்பளித்தல் அதன் அடிப்படையாகும். அதனடிப்படையில் இங்கு பல்வகைமை கவனத்திற் கொள்ளப்பட்டுள்ளது.

ஏற்கனவே வரையப்பட்ட மாதிரிகளுக்கு இவ்வுலகில் நிரந்தர இடமில்லை எனும் நிலைப்பாட்டில் நின்று கொண்டு அதாவது மேலைத்தேய செய்தி முகவர்களுக்கு இவ்வுலகில் நிரந்தர இடமில்லை என்பதை உணர்ந்து கொண்டு மெக்;பிரைட் ஆணைக்குழுவானது தமது அறிக்கையினை 1980ம் ஆண்டில் வெளியிட்டது.

தொடர்பாடல் என்பது அடிப்படை மனித உரிமை என்பதுடன் அனைத்து பிரஜைகளுக்கும், இனத்தவர்களுக்கும் அவசியமான உரிமை எனும் அடிப்படையிலேயே குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தகவல்களை பெற்றுக் கொள்ளும் சுதந்திரம், விசேடமாக தகவல்களை தேடியறியும் சுதந்திரம், தகவல்களை வேண்டி நிற்றல் என்பன அடிப்படை மனித உரிமைகளாகும்.

அடிப்படை மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகத்திற்கு இடையில் காணப்படுகின்ற இணைப்பு தொடர்பில் தொடர்ச்சியாக பேசப்படுகின்ற யுகத்தில் தனித்துவமான அடிப்படை உரிமையாக கருதப்படுகின்ற தகவல் அறிந்து கொள்ளும் உரிமையானது இலங்கையர்களுக்கு கிடைத்ததன் பின்னர் அனு~;டிக்கப்படுகின்ற தகவல் அறிந்து கொள்ளும் சர்வதேச தினத்தில் ஒன்றிணைவதற்கு இலங்கையர்களுக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

உலகத்தில் தற்போது காணப்படுகின்ற சிறந்த மூன்றாவது தகவல் அறியும் சட்டத்திற்கு உரிமையானவர்கள் நாங்களே. ஊழல், மோசடி, வீண்விரயத்திற்கு எதிராக குரல் எழுப்புவதற்கு வாய்ப்பற்றிருந்த பொதுமக்களுக்கு தற்போது சட்ட ரீதியாக அவ்வுரிமை கிடைத்துள்ளது.

எமது அயல் நாடும், வலயத்தின் பலம் பொருந்திய நாடுமான இந்தியாவானது 2005ம் ஆண்டில் தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தினை சட்டமாக்கிக் கொண்டதுடன் அதன் பின்னணியில் எம்மை விடவும் வித்தியாசமான கதையொன்று உண்டு. ஊழல், மோசடி, வீண்விரயம் என்பன இந்தியாவில் மலிந்து காணப்பட்டது. சிவில் அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் வீதியில் இறங்கி அதற்கு எதிராக போராட ஆரம்பித்தனர். முறையான சமூகத்துக்கு தகவல் அறிந்து கொள்ளும் சட்டத்தின் தேவை அங்கு உணரப்பட்டதுடன், சமூக கலந்துரையாடல்களும் இடம்பெற்றன.

இச்சட்டத்தினை செயற்றிறனாக பயன்படுத்துகின்ற ஊடகவியலாளர்களும், பொதுமக்களும் இந்தியாவில் இருப்பது குறிப்பிட்டு கூறக்கூடிய அம்சமாகும்.
இந்தியாவினை தொடர்ந்து நேபாளம், பங்களாதேசம், மாலைத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகள் தகவல் அறிந்து கொள்ளும் உரிமையினை பொதுமக்களுக்கு பெற்றுக் கொடுத்தது.

இற்றைக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் அதாவது 1766ம் ஆண்டு தகவல் உரிமையினை அந்நாட்டு மக்களுக்கு வழங்கிய நாடு சுவீடனாகும். 1994ம் ஆண்டிலிருந்து பல தடவைகள் இங்கு தகவல் அறிந்து கொள்ளும் உரிமையினை சட்டமாக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் கைகூடவில்லை.

எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக கரு ஜயசூரிய =தகவல் அறியும் உரிமைத் தொடர்பில் தனிப்பட்ட யோசனையொன்றாக பாராளுமன்றில் முன்வைத்த போதும், அன்று ஆட்சியிலிருந்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பானது, குறித்த யோசனைகளை விடவும் பலமான சட்டமொன்றை கொண்டு வருவதாக கூறி அதனை மழுங்கடித்தது.

2002ம் ஆண்டு அன்றைய பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்க  அமைச்சரவை அங்கீகாரத்தினை பெற்றுக் கொண்ட யோசனைகளை செயற்படுத்தும் சந்தர்ப்பம் திடீரென்ற தேர்தலினால் கை நழுவிப்போனது.

2015ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் வாக்குறுதியாக இருந்த தகவல் அறிந்து கொள்ளும் சட்டமானது நல்லாட்சி அரசாங்கமானது ஆட்சி பீடம் ஏறியவுடன் நனவாகியது. அன்றைய ஊடகத்துறை அமைச்சர் கயந்த கருணாதிலக்க, அன்றைய ஊடகத்துறை அமைச்சின் செயலாளராக கடமை புரிந்த கருணாரத்ன பரணவிதான ஆகியோர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் காட்டிய முயற்சிகள் குறித்து குறிப்பிடப்பட வேண்டியவை. 2016ம் ஆண்டு 12ம் இலக்க தகவல் அறிந்து கொள்ளும் உரிமை தொடர்பான சட்டம் 2016ம் ஆண்டு 04ம் திகதி சட்டமாக்கப்பட்டது.

தகவல் அறிந்து கொள்ளும் சட்டமானது அமுல்படுத்தப்படுவதுடன் அது அடிப்படை உரிமையாக ஏற்றுக் கொள்ளப்படுகின்றது. ஒரு கிலோ மா, ஒரு கிலோ அரிசி விலை தொடர்பில் மாத்திரம் உணர்ச்சி வசப்படுகின்ற பொதுமக்கள் மற்றும் அரசியல் வாதிகள் வசிக்கின்ற நாட்டில் குறித்த சட்டம் தொடர்பில் பொதுமக்களிடத்தில் அறிவுறுத்துவது பாரியதொரு சவாலாக உள்ளது.

கிராமத்தின் பாதைகள், வாவிகள் அமைக்கும் போது சந்தேகம் அல்லது நம்பிக்கையின்மை ஏற்பட்டால் எழுத வாசிக்க தெரியாத பண்டாக்களுக்கும் இச்சட்டத்தின் ஊடாக தெளிவு பெறக் கூடிய அவகாசம் கிடைக்கின்றது. ஊடகத்துறை அமைச்சருக்கு குறித்த சட்டத்தின் மூலம் வழங்கப்படுகின்ற அதிகாரத்தினை பயன்படுத்தி இன்று தகவல் அறியும் உரிமை சட்டம் தொடர்பில் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

தகவல் அறியும் உரிமை சட்டத்தினை முறையாக பயன்படுத்தும் போது ஊழல், மோசடிகளுக்கு வேலி போடப்படுகின்றது. தகவல் அறிந்து கொள்ளும் உரிமையானது அடிப்படை உரிமையாக கருதப்படுவதனால் பாதிக்கப்படுகின்ற பொதுமகனுக்கு நீதியைப் பெற்று உயர் நீதிமன்றத்துக்கும் செல்லலாம்.

அனைத்து அரச நிறுவனங்களிலும் தகவல் அதிகாரி ஒருவர் இருப்பதுடன் எழுத்து மூலமாகவோ அல்லது வாய் மூலமாகவோ வினவப்படுகின்ற தகவல்களை பெற்றுக் கொடுப்பதற்கு அவர்கள் இனங்கியுள்ளனர். ஏதேனுமொரு தகவல் அதிகாரி தகவல்களை தருவதற்கு மறுக்கும் போது தகவல் ஆணைக்குழுவிற்கு செல்ல முடியும். அங்கும் ஏதேனுமொரு காரணத்தினால் குறித்த வேண்டுகோள் மறுக்கப்படும் போது நீதியை வேண்டி உயர் நீதிமன்றத்துக்கு சென்று நீதியினை நிலைநாட்டிக் கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கின்றது.

தனிப்பட்ட தகவல்கள், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட தகவல்கள், வங்கி நடவடிக்கைகள் அல்லது கடன், வர்த்தக ஒப்பந்தங்கள் தொடர்பில் தகவல்களை கேட்காதிருப்பது உகந்தது. தகவல்களை வேண்டி நிற்கும் நபரின் உண்மை நிலையும் இங்கு கவனத்திற் கொள்ளப்படல் வேண்டும். தகவல்களை மறைக்கும் கலாச்சாரத்துடன் தொடர்புபட்ட சமூகத்திற்கு தகவல் அறிந்து கொள்ளும் உரிமையானது தேவையற்ற தலையிடியாக அமைய வாய்ப்புள்ளது. குறிப்பாக அரச அதிகாரிகள் தமது பணிகளை அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளதுடன், அதிகாரியின் பொடுபோக்கு தன்மையினையும் இங்கு அகற்றிக் கொள்ள வேண்டி ஏற்படுகின்றது.

உண்மையான தகவல்களை பெற்று ஊடகங்களின் வாயிலாக முன்வைக்கின்ற செய்திகளின் பெறுமதியும் இவ்வுரிமையின் மூலம் பாதுகாக்கப்படுகின்றது.
ஜனநாயகமானது பலப்படுத்தப்படுவது வாக்களிப்பின் ஊடாக மாத்திரம் என்று எண்ணுகின்ற ஆட்சியாளர்களுக்கும், ஜனநாயகம் என்பது வாக்களிப்பது மாத்திரம் என்று எண்ணுகின்ற பிரஜைகளுக்கும் தகவல் அறிந்து கொள்ளும் உரிமை சட்டத்தின் மூலம் பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ள உரிமையானது ஜனநாயகத்தின் அர்த்தத்தினை விரிவு படுத்துவதற்கு கிடைத்த வரப்பிரசாதம் என்பதை உணர்வதற்கு இன்னும் காலம் தேவைப்படுகின்றது.

நன்றி – பவாஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *