வீடு புகுந்து ஐவர் மீது வாள்வெட்டு! பெற்றோல் குண்டுத் தாக்குதல்!! – கைதடியில் பயங்கரம்
யாழ். கைதடிப் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்து கும்பல் ஒன்று நடத்திய தாக்குதலில் 5 பேர் படுகாயமடைந்த நிலையில் சாவகச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் இன்று புதன்கிழமை அதிகாலை 4 மணியளவில் இடம்பெற்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
கைதடி ஏ-9 நெடுஞ்சாலையிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 15 இற்கும் மேற்பட்ட நபர்கள், பெற்றோல் குண்டுத் தாக்குதலை மேற்கொண்டும் கூரிய ஆயுதங்களால் வீட்டிலுள்ளவர்களைத் தாக்கியும் அட்டூழியத்தில் ஈடுபட்டனர்.
இந்தச் சம்பவத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் சாவகச்சேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் எனக் கூறப்பட்டது.
தாக்குதலை நடத்தியவர்கள் முகத்தைத் துணியால் மறைத்துக் கட்டியிருந்தனர் என்று முறைப்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
உறவினர்களுக்கு இடையேயான தகராறு காரணமாகவே இந்தத் தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
ஆவா குழுவைச் சேர்ந்தவர்களே தாக்குதலை மேற்கொண்டனர் என்று ஆரம்ப விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர் என்று பொலிஸார் கூறினர்.