Lead News

உண்மைகளைக் கண்டறியாமல் படையினருக்குப் பொதுமன்னிப்பா? – ஏற்கவே முடியாது எனச் சீறுகின்றது கூட்டமைப்பு

“போர்க்காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போன்றவை தொடர்பில் முறையான நீதி விசாரணைகள் நடைபெற்று முதலில் உண்மைகள் கண்டறியப்பட்டு வெளிப்படுத்தப்பட வேண்டும். படையினரில் யார், யார், எத்தகைய குற்றங்களை இழைத்தார்கள் என்பது வெளிப்படுத்தப்பட வேண்டும். அதன் பின்னரே பொதுமன்னிப்பு பற்றி ஆராயவோ, பரிசீலிக்கவோ முடியும். முகம் தெரியாத குற்றவாளிகளுக்கு பொதுமன்னிப்பு அளிப்பதாகப் பிரகடனப்படுத்துவதன் மூலம் போர்க்குற்றங்களை மூடி மறைத்து, நீதியான விசாரணைகளைப் புறந்தள்களும் செயற்பாட்டுக்கு நாம் இணங்கவே மாட்டோம். அந்த முயற்சியை வன்மையாக எதிர்ப்போம்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார் அதன் பேச்சாளரும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தென்னாபிரிக்கா போன்ற நாடுகளில் போரின் பின்னர் நல்லிணக்கத்தை ஏற்படும் நடவடிக்கையாக பொதுமன்னிப்பு அளிக்கப்பட்டது உண்மையே. ஆனால், அங்கு உண்மைகள் முழுமையாகக் கண்டறியப்பட்டு, நீதி நிலைநாட்டப்பட்டு, குற்றமிழைத்தோர் அடையாளப்படுத்தப்பட்ட பின்னரே அந்தப் பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.

இங்கும் விடுதலைப்புலிகள் தரப்பில் அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடினார்கள் என்று குற்றம் சுமத்தப்பட்ட போராளிகள் உட்பட அனைவரும் அதற்காகக் கைதுசெய்யப்பட்டனர். விசாரிக்கப்பட்டனர். உண்மைகள் கண்டறியப்பட்டன. அதன் பின்னரே சுமார் பன்னீராயிரம் போராளிகள் மன்னிப்பு அளித்து விடுவிக்கப்பட்டார்கள். புனர்வாழ்வு என்ற வகையில் கூட அவர்கள் தடுப்பை எதிர்கொண்ட பின்னரே விடுவிக்கப்பட்டனர்.

பெரிய குற்றங்களை இழைத்தோர் அதற்காக விசாரிக்கப்பட்டார்கள். தண்டிக்கப்பட்டனர். சிறை வைக்கப்பட்டனர். இன்னும் சிறையில் இருக்கின்றனர். தடுப்புக் காவலில் வாடுகின்றனர்.

அப்படி எல்லாம் இருக்கையில் ஒட்டுமொத்தமாகப் படையினருக்கும் பொதுமன்னிப்பு என்ற துளாவல் அறிவிப்பு மூலம் அவர்கள் இழைத்த குற்றங்களையும், குற்றவாளிகளையும் மூடிமறைக்கும் எத்தனத்துக்கு நாம் இடமளிக்க மாட்டோம்.

இலங்கை அரச தரப்பின் அத்தகைய மூடி மறைப்பு ஏற்பாட்டுக்கு சர்வதேச சமூகம் ஒருபோதும் உடன்படாது என்று நம்புகின்றோம்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading