முல்லைத்தீவு மாவட்டத்தை வாட்டி எடுக்கின்றது வறட்சி! 8,103 குடும்பங்களுக்கு குடிதண்ணீர்; 14,999 விவசாயிகளுக்கு உலருணவு

“முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவும் கடும் வறட்சி காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 8103 குடும்பங்களுக்கு குடிதண்ணீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வறட்சி நிவாரணம் முதல் கட்டமாக 6,824 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக 7,296 குடும்பங்களுக்கு அது வழங்கப்படவுள்ளது. வறட்சி தொடருமாக இருந்தால் பயிர்ச்செய்கைகள் மோசமாகப் பாதிக்கப்படும்.”

– இவ்வாறு முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் திருமதி ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவில் நிலவும் கடும் வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களீன் நிலைமைகள் தொடர்பில் நேற்று முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“முல்லைத்தீவு மாவட்டத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள 8,103 குடும்பங்களுக்கான குடிதண்ணீர் விநியோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 390 குடும்பங்களுக்கும், புதுக்குடியிருப்பு பிரதேச செயலர் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 3129 குடும்பங்களுக்கும், துணுக்காய் பிரதேச செயலர் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 222 குடும்பங்களுக்கும், ஒட்டுசுட்டான் பிரதேச செயலர் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 1895 குடும்பங்களுக்கும், வெலிஓயா பிரதேச செயலர் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 1996 குடும்பங்களுக்கும், மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவில் பாதிக்கப்பட்டுள்ள 471 குடும்பங்களுக்குமாக மொத்தம் 8,103 குடும்பங்களுக்கு குடிதண்ணீர் விநியோகத்தை அனர்த்த முகாமைத்துவ அமைச்சின் நிதியியூடாக மேற்கொள்கின்றோம்.

இதுவரை குடிதண்ணீர் விநியோகத்துக்கான நீரைப் பெறுவதில் பிரச்சினைகள் இல்லை. ஆயினும், மாந்தை கிழக்குப் பிரதேசத்தில் பிரதேச செயலாளர், பிரதேச சபையினர் தகவல் படி குடிதன்ணீர் விநியோகத்துக்கான நீரைப் பெற்றுக் கொள்வதற்குக் கிணறுகளை ஆழப்படுத்தவேண்டிய தேவை உள்ளது. இதற்கான நிதியை பெற்றுக்கொள்ள இடர் முகாமைத்துவ அமைச்சுக்கு விடயத்தைத் தெரியப்படுத்தியுள்ளோம்.

அத்தோடு வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கான வறட்சி நிவாரணம் (உலருணவு) வழங்கும் நடவடிக்கை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களாக 14,999 குடும்பங்கள் கணக்கிடப்பட்டுள்ளன. அதில் முதல் கட்டமாக 6,824 விவசாயிகளுக்கு உலருணவு விநியோகம் இடம்பெற்றுள்ளது. இரண்டாம் கட்டமாக 7,296 விவசாயிகளுக்கு உலருணவு விநியோகம் செய்துள்ளோம்” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *