கட்சிபேதம் மறந்து 23 இல் களம் குதிப்போம்! ஸ்ரீதரன் அழைப்பு

தலவாக்கலையில் எதிர்வரும் 23 ஆம் திகதி இடம் பெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டானது தொழிற்சங்க பேதமின்றிய தொழிலாளர்களின் ஒற்றுமைப் போராட்டமாகும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.


தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வை வலியுறுத்தி பெருந்தோட்டக்கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இடம்பெறவுள்ள கவனயீர்ப்புப் போராட்டம் குறித்து தொழிலாளர் தேசிய சங்கத்தின் வட்டவளை பிரதேச தோட்டக்கமிட்டி தலைவர்களுக்கான கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய போதே இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அம்பகமுவ பிரதேச சபை உறுப்பினர் சசிகலா தலைமையில் இடம்பெற்ற இந்தக்கூட்டத்தில் வட்டவளை அமைப்பாளர் சங்கரலிங்கம் , மாவட்டத்தலைவர் சுதாகர் , ரொசல்ல வட்டார நிழல் உறுப்பினர் ஏ.பிரபு உட்பட தோட்டக்கமிட்டித்தலைவர்கள் கலந்து கொண்டனர்.

சோ.ஸ்ரீ;தரன் தொடர்ந்து பேசுகையில் கூறியதாவது :

பெருந்தோட்டத் தொழிற்துறையில் பெருந்தோட்டக்கம்பனிகள் பெருத்த இலாபத்தை ஈட்டி வருகின்றன. எனினும் கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடும் காலங்களில் மாத்திரம் உலக சந்தையில் தேயிலை குறைந்துள்ளதென்று காரணம் காட்டி தொழிலாளர்களின் சம்பளத்தை நியாயமான வகையில் அதிகரிக்காது பெருந்தோட்டக்கம்பனிகள் கபட நாடகம் நடத்தி வருகின்றன.

தற்போது தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படைச்சம்பளமாக 500 ரூபாவும் கொடுப்பனவாக 230 ரூபாவும் வழங்கப்படுகின்ற போதும், இந்த 230 ரூபாய் கொடுப்பனவுகள் நிபந்தனைகள் அடிப்படையில் வழங்கப்படுவதால் சகல தொழிலாளர்களுக்கும் இந்தக் கொடுப்பனவுகள் கிடைப்பதில்லை. இதனால் தோட்டக்கம்பனிகளே இலாபமடைகின்றன.

இவ்வாறானதொரு பின்னணியில் தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படைச்சம்பளத்தில் நியாயமான அதிகரிப்பைப் பெற்றுக்கொள்ளும் வகையில் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களுக்குச் சாதகத்தை ஏற்படுத்தும் வகையில் பெருந்தோட்டக்கம்பனிகளுக்கு அழுத்தம் கொடுப்பதற்கே கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதனால் மலையகத்தில் உள்ள எந்தவொரு தொழிலாளியும் இந்தப்போராட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்போவதில்லை.

எனவே தொழிற்சங்க பேதங்களைத் துறந்து சகல தொழிலாளர்களும் இந்தப்போராட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *