தமிழகம் – மலைநாடு உறவு மேலும் வலுவாக வேண்டும்

தமிழ்நாட்டுக்கும், மலையகத்துக்குமிடையிலான உறவை – தொடர்பை மேலும் வலுப்படுத்துவதற்கு இருநாடுகளினதும் மத்திய அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் கோரிக்கை விடுத்தார்.
கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (16) நடைபெற்ற புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரின் இரண்டாம் நூற்றாண்டு ஆரம்ப விழாவில் வரவேற்புரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் கூறியவை வருமாறு,

“ மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும், அது முடிந்தபின்னாலும் பேச்சிருக்கும், உள்ளம் என்றொரு ஊர்இருக்கும், அந்த ஊருக்குள் எனக்கோர் பேரிருக்கும்” என்று சினிமாவில் எம்.ஜி.ஆர். கூறியிருந்தாலும் அக்கருத்து இன்று உண்மையாகியுள்ளது. எம்.ஜி.ஆர். என்ற நாமமானது இன்னும் எம்முள் வாழ்ந்துக்கொண்டுதான் இருக்கின்றது. எனவே, அவருக்கு விழாஎடுப்பதையிட்டு கண்டி மண் பெருமைகொள்கின்றது.
தென்னிந்தியாவில் சினிமாவிலும், அரசியலிலும் உச்சம்தொட்ட அவர் எம்கண்டி மண்ணில் பிறந்தவர் என்பதை நினைக்கையில் ஆனந்த அலைகள் என்மனதை முட்டிமோதிச்செல்கின்றன. பிறந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று இருந்துவிடாது, தனது கடின உழைப்பால் உயர்வின் உச்சம்தொட்ட எம்.ஜி.ஆர், இலங்கைவாழ் தமிழ் மக்களுக்காக பலவழிகளிலும் உதவிகளை வழங்கியுள்ளார் என்பதை இவ்விடத்தில் நினைவூட்ட விரும்புகின்றேன்.
அதேவேளை, தமிழகத்துக்கும், மலையகத்துக்குமிடையிலான உறவு என்பது உணர்வுப்பூர்வமானது என்பதுடன் அது உயிருடன் தொடர்புபட்டது. கடல்தாண்டி இருந்தாலும் என்றும் சங்கமித்திருப்பவர்களாகவே உணர்ந்துவாழ்கின்றோம். தமிழகத்தின் கலைகலாசாரங்களை பின்பற்றிவருகின்றோம். அந்நாட்டு கலைகளே மலையகத்தில் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் ஆழமாக வேரூண்டியுள்ளது.
ஆகவே, எமதுதொப்புள்கொடி உறவான தமிழ்நாட்டு மக்களுடனான உறவு, தொடர்பு மேலும் வலுப்படுத்தப்படவேண்டும். வெளிவிவகாரங்களை மத்திய அரசுகளின் வெளிவிவகார அமைச்சே கையாகும். எனவே, இலங்கை, இந்தியா ஆகிய நாடுகளின் வெளிவிவகார அமைச்சுகள் இதுவிடயத்தில் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.
அதேவேளை, எம்.ஜி.ஆரின் இரண்டாம் நூற்றாண்டு விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு ஒத்துழைத்த அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிப்பதுடன், நிகழ்வில் பங்கேற்றுள்ள அதிதிகளையும் வரவேற்கின்றேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *