கொடிகாமத்தில் கடத்தப்பட்ட பொலிஸ் வாகனம் மீட்பு! – நான்கு பேர் கைது

ஆயுதங்களுடன் கடத்தப்பட்ட கொடிகாமம் பொலிஸாரின் வாகனம் மீட்கப்பட்டது எனவும், வாகனம் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக நான்கு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நால்வரும் இன்று காலை கைதுசெய்யப்பட்டனர் என கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.

யாழ். கொடிகாமம், பாலாவி பகுதியில் நேற்று இந்தக் கடத்தல் சம்பவம் இடம்பெற்றிருந்த நிலையில், சாவகச்சேரி மற்றும் கொடிகாமத்திலிருந்து மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணை தீவிரப்படுத்தப்பட்டது.

பாலாவி பகுதியில் நேற்று திருமண விருந்து உபசார நிகழ்வில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து பொலிஸ் அவசர சேவைப் பிரிவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மோதலில் ஈடுபட்டவர்களை கைதுசெய்ய முற்பட்டபோது அங்கிருந்தவர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்டது.

அதன்போது அங்கு நின்றிருந்த ஒருவர் பொலிஸாரின் வாகனத்தை எடுத்துச் சென்றுள்ளார். அதன்போது வாகனத்தில் பின்னிருக்கையில் இருந்த பொலிஸ் அதிகாரி வாகனத்திலிருந்து குதித்து வானத்தை நோக்கித் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளார். ஆனால், அதனைப் பொருட்படுத்தாது குறித்த நபர் வாகனத்துடன் தப்பிச் சென்றுள்ளார்.

பின்னர் சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளான நிலையில் பொலிஸ் வாகனத்தை அவர் விட்டுச் சென்றுள்ளார்.

இதனை அடுத்து இன்று காலை நடத்தப்பட்ட தேடுதலில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *