சம்பந்தனின் விஸ்வரூபம் – 2

மித மிஞ்சிய நிதானம், அளவு கடந்த பொறுமை ஆகிய அம்சங்களுடன் அரசியல் தளபதியாகப் பவனிவரும் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன், விரைவில் அதிரடி அறிவிப்பொன்றை விடுக்கவுள்ளார் என உள்வீட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பந்தன் ஐயாவிடமிருந்து வீட்டின் சாவிக்கொத்தை எப்படியாவது கைப்பற்றிவிடவேண்டும் என்பதில் குறியாக இருக்கும் சில புள்ளிகளுக்கு இந்த அறிவிப்பானது இனிப்புத் தடவிய கசப்பு மாத்திரையாக அமையும் என்றே அரசல் புரசலாகக் கதை அடிபடுகின்றது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம் அதன் தலைவர் சம்பந்தன் ஐயா தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதன்போது வடக்கு, கிழக்கு மாகாண சபைகளுக்கு கூட்டமைப்பின் சார்பில் களமிறங்கும் வேட்பாளர்கள் யார் என்ற விபரத்தை பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் சம்பந்தனிடம் கேட்டுள்ளனர்.

இதற்குப் புன்னகையை மாத்திரமே சம்பந்தன் பதிலாக வழங்கியுள்ளார். அத்துடன், சுரேஷ் அணியையும் கூட்டமைப்புக்குள் உள்வாங்கவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும், இந்தக் கூட்டம் முடிவடைந்து நான்கு நாட்களுக்குப் பின்னர், கூட்டமைப்பின் முக்கிய எம்.பியொருவர், சம்பந்தன் ஐயாவை பிரத்தியோகமாகச் சந்தித்துள்ளார். இதன்போது இரு மாகாணங்களுக்கான (வடக்கு, கிழக்கு) முதன்மை வேட்பாளர்கள் பற்றியும் வினவியுள்ளார்.

“உரிய நேரத்தில், உரிய வகையில் உரிய முடிவு அறிவிக்கப்படும்” என்ற பதிலை மாத்திரமே சம்பந்தன் வழங்கியுள்ளார். எதிர்வரும் 24 ஆம் திகதிக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *