Local

இலங்கையின் 9 ஆவது நாடாளுமன்றத்தில் 70 வயதைக் கடந்த எம்.பிக்கள்!

 

9 ஆவது நாடாளுமன்றத்தின் முதலாவது அமர்வு ஆரம்பமான வேளையிலேயே நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற 70 வயதுக்கு மேற்பட்ட எம்.பிக்கள் .இவர்களில் சிலர் உயிரிழந்துவிட்டனர். ஒரு சிலர் இம்முறை தேர்தலில் போட்டியிடாமல் இருக்கும் முடிவை எடுத்துவிட்டனர்.

9 ஆவது நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்த 70 வயதைக் கடந்த எம்.பிக்கள் பற்றிய விபரம் கீழ் தரப்படுகின்றது. இவர்களில் முக்கிய தலைவர்கள் நாடாளுமன்ற அரசியலுக்கு விடை கொடுத்துள்ளனர்.

1. மஹிந்த ராஜபக்ச – 1970 ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை மாவட்டம், பெலியத்த தொகுதியில் இருந்து நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். 1977 இல் நடைபெற்ற தேர்தலில் தோல்வி அடைந்தார்.

1989 தேர்தலில் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் வெற்றிபெற்றார். 1994 தேர்தலிலும் வெற்றிபெற்றார். அமைச்சு பதவியை வகித்தார். எதிர்க்கட்சி தலைவராகவும் செயற்பட்டார். பிரதமர் பதவியையும் வகித்துள்ளார்.

2005 ஜனாதிபதி தேர்தலில் வெற்றிவாகை சூடினார். 2010 ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றிபெற்றார்.

1978 அரசமைப்பின் பிரகாரம் நபரொருவர் இரு தடவைகள் மாத்திரமே நிறைவேற்று அதிகாரம்கொண்ட ஜனாதிபதி பதவியை வகிக்க முடியும். எனினும், அந்த சரத்தை
மாற்றியமைத்து 2015 தேர்தலில் மூன்றாவது முறையும் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

2015 பொதுத்தேர்தலில் போட்டியிட்டு நாடாளுமன்றம் வந்தார். ஜனாதிபதி பதவியை வகித்த ஒருவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாக வந்த முதல் சந்தர்ப்பம்.

2020 பொதுத்தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் குருணாகலை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்று சாதனையும் படைத்தார். மீண்டும் பிரதமர் பதவிக்கு தெரிவுசெய்யப்பட்டார். மஹிந்தவின் தற்போதைய வயது 78.

2. ரணில் விக்கிரமசிங்க – 1977 ஆம் ஆண்டு தேர்தலில் கம்பஹா மாவட்டம், பெலியத்த தேர்தல் தொகுதி ஊடாக நாடாளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்தார்.

அத்தேர்தலில் பியகம தொகுதியில் போட்டியிட்டு 22 , 045 வாக்குகளைப்பெற்று வெற்றிபெற்றார். 28 ஆவது வயதில் பிரதி வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

1977 ஒக்டோர் 05 ஆம் திகதி அமைச்சரவைக்கு உள்வாங்கப்பட்டு இளைஞர் விவகார மற்றும் தொழில் அமைச்சராக ரணில் நியமிக்கப்பட்டார்.

1980 பெப்ரவரி 14 கல்வி அமைச்சு பதவி கையளிக்கப்பட்டது. 9 ஆண்டுகள் அப்பதவியில் அவர் நீடித்தார்.

1993 மே 17 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்றார்.
1994 இல் ஐ.தே.க. தலைவராக ரணில் விக்கிரமசிங்க நியமிக்கப்பட்டார்.

1999 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க முதன்முறையாக போட்டி.

2005 நவம்பர் 17 ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாவது ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்கவே போட்டியிட்டார்.

2015 ஜனவரி 9 ஆம் திகதி பிரதமராக ரணில் பதவியேற்றார்.

2020 பொதுத்தேர்தலில் ஐதேகவுக்கு தோல்வி ஏற்பட்டது. தேசியப் பட்டியல் ஊடாக ஒரு ஆசனம் கிடைத்தது. அந்த வாய்ப்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கு வழங்கப்பட்டது. ஒருவராக வந்து ஜனாதிபதியும் ஆனார்.

2024 ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்தார். இனி பொதுத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அறிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய வயது – 75.

3. இரா. சம்பந்தன் – இலங்கையின் 2ஆவது தமிழ் எதிர்க்கட்சி தலைவர் பதவியை வகித்தவர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழு தலைவராக பதவி வகித்தவர். இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைமைப்பதவியையும் அலங்கரித்தார். 9 ஆவது நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும்போதே 91 ஆவது வயதில் உயிரிழந்துவிட்டார்.

4. சிவி விக்னேஸ்வரன் – வடக்கு மாகாண முதல்வராக பதவி வகித்த ஓய்வுநிலை நீதியரசர் சிவி விக்னேஸ்வரன், 2020 பொதுத்தேர்தலில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி சார்பில் யாழ். மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றம் தெரிவானார். இம்முறை தேர்தலில் போட்டியிடபோவதில்லை என அறிவித்துள்ளார். அவரின் தற்போதைய வயது 83.

5. திஸ்ஸ வித்தாரன – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்பில் தேசிய பட்டியல் வாய்ப்பு வழங்கப்பட்டது. ஸ்ரீலங்கா சமசமாஜக் கட்சியின் தலைவர் பதவியை வகித்துள்ளார். இம்முறை போட்டியிடப்போவதில்லை. தற்போதைய வயது – 90.

06. வாசுதேவ நாணயக்கார். – ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரான வாசுதேவ நாணயக்கார 1970 ஆம் ஆண்டு முதல் நாடாளுமன்ற உறுப்பினராக செயற்படுகின்றார். கடந்த முறையும் இரத்தினபுரி மாவட்டத்தில் மொட்டு கூட்டணியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். தற்போது நோய்வாய் பட்டுள்ளார். செயற்பாட்டு அரசியலுக்கு விடை கொடுத்துள்ளார். கட்சி தலைவர் பதவியையும் துறந்துள்ளார். இம்முறை தேர்தலில் போட்டியிடப்போவதில்லை. வாசுவின் தற்போதைய வயது – 85.

07. ஜோன் செனவிரத்ன – ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவர். கடந்த பொதுத்தேர்தலில் மொட்டு கட்சி சார்பில் இரத்தினபுரி மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். முக்கிய அமைச்சு பதவிகளை வகித்துள்ளார். இம்முறை தேர்தலில் போட்டியிடமாட்டார் என தெரியவருகின்றது .ஜோன் செனவிரத்னவின் தற்போதைய வயது – 83.

08. – சமல் ராஜபக்ச – மஹிந்தவின் அண்ணன், அம்பாந்தோட்ட மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர். இம்முறை அவர் தேர்தலில் களமிறங்கமாட்டார். சமல் ராஜபக்சவின் தற்போதைய வயது – 81.

09. தினேஷ் குணவர்தன – மஹஜன எக்சத் பெரமுன கட்சியின் தலைவர், மொட்டு கூட்டணியின் முக்கிய பங்காளிக் கட்சி தலைவர். பிரதமர் பதவியை வகித்துள்ளார். ராஜபக்ச ஆட்சியில் மிக முக்கிய அமைச்சர். இம்முறை பொதுத்தேர்தலில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. தினேஷ் குணவர்தனவின் தற்போதைய வயது – 75.

10. லக்ஷ்மன் கிரியல்ல – ஐக்கிய மக்கள் சக்தியின் சிரேஷ்ட தலைவர்களில் ஒருவர், சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சிகளிலும் இருந்துள்ளார். எதிரணி பிரதம கொறடா. கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர். இம்முறை அவர் போட்டியிடாமல், தனது மகளை களமிறக்கவுள்ளார். கிரியல்லவின் தற்போதைய வயது – 76

11.பஸில் ராஜபக்ச – ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர். ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்ற பிறகு, தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் வந்தார். நிதி அமைச்சர் பதவியையும் வகித்தார். பின்னர் எம்.பி. பதவியை இராஜினாமா செய்தார்.

11. நிமல் சிறிபாலடி சில்வா,

12. புளொட் சித்தார்த்தன்,

13. ராஜித சேனாரத்ன, எஸ்.பி. திஸாநாயக்க, காமினி லொக்குகே ஆகியோரும் 70 வயதைக் கடந்தவர்கள். இவர்களும் இம்முறை போட்டியிடவுள்ளனர். கடந்த நாடாளுமன்றத்தில் 70 வயதைக் கடந்த எம்.பியாக செயற்பட்ட குமார வெல்கம இன்று காலமானார்.

அதேவேளை 60 – 70 இற்கு இடைப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 இற்கு மேற்பட்டோரும் சபையில் அங்கம் வகித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading