Local

அனுர குமார இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பாரா, சீனா பக்கம் சாய்வாரா?

 

சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதால், ஜனாதிபதி கோத்தபய ராஜபகக்சவுக்கு எதிராக மக்கள் போராடினர்.

இதைத் தொடர்ந்து 2022-ம் ஆண்டு மே மாதம் பதவியை விட்டு விலகிய ராஜபக்ச வெளிநாட்டுக்கு தப்பியோடினார். புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றார்.

ரணில் பதவிக்காலம் நவம்பரில் முடிவதால், இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தேர்வு செய்ய சனிக்கிழமை தேர்தல் நடந்தது. வாக்குப் பதிவு முடிந்ததும், அன்று மாலையே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

தேர்தல் களத்தில் மொத்தம் 38 பேர் இருந்தனர்.  ரணில் விக்ரமசிங்க, ஐக்கிய சக்தி முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாச.

தேசிய மக்கள் சக்தித் தலைவர் அனுர குமார திசநாயக, இலங்கை பொதுஜன பெரமுன கட்சி வேட்பாளர் நாமல் ராஜபக்ச ஆகிய 4 பேர் இடையே போட்டி நிலவியது.

மட்டக்களப்பு முன்னாள் எம்.பி. அரியநேந்திரன், தமிழ்ப் பொதுக் கூட்டமைப்பு என்ற பெயரில், சில தமிழ் அமைப்புகளின் சார்பில் தமிழர்களுக்கான பொது வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

இலங்கை அரசியல் சட்டப்படி 50 சதவீத வாக்குகளைப் பெறுபவரே வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். ஆனால் 50 சதவீத வாக்குகளை யாரும் பெற முடியவில்லை.

முதல் கட்ட வாக்கு எண்ணிகையில், அனுர குமார திசநாயக 42 சதவீத வாக்குகளையும், சஜித் பிரேமதாச 32 சதவீத வாக்குகளையும் பெற்றனர்.

முதல் கட்டத்தில் 50 சதவீதத்துக்கும் மேல் வாக்குகளை பெறாத காரணத்தால், 2-வது விருப்ப வாக்கு எண்ணிக்கையை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.

முதல் இரண்டு இடங்களுக்குள் வரத்தவறியதால், ரணில் உள்ளிட்ட 36 பேர் இரண்டாம் சுற்றிலிருந்து வெளியேற்றப்பட்டனர்.

2-ம் கட்ட வாக்கு எண்ணிக்கையின் போதும் அனுர முதலிடத்தில் இருந்ததால் அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இலங்கையின் 9-வது ஜனாதிபதியாக அனுரா குமார திசாநாயக்க இன்று பதவி ஏற்றார்.

20 ஆண்டுகளாக இலங்கை அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக விளங்கிய ராஜபக்ச குடும்பத்துக்கு, இந்தத் தேர்தலில் மக்கள் மரண அடி கொடுத்துள்ளனர்.

தேர்தலில் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்ச மகன் நாமல், நான்காம் இடத்தையே பிடிக்க முடிந்தது.

AKD எனும் அனுர திசநாயக

இலங்கை அதிபர் தேர்தலில் வாகை சூடியுள்ள அனுர குமார திசநாயகேவுக்கு வயது – 56. AKD என செல்லமாக அழைக்கப்படும் இவர், ஜனதா விமுக்தி பெரமுனா (ஜே.வி.பி.) கட்சியின் தலைவர்.

ஜனதா விமுக்தி பெரமுனா, மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் சித்தாந்த அடிப்படையில் செயல்படும் கம்யூனிஸ்ட் கட்சி ஆகும்.

அரசுக்கு எதிராக ஆயுதம் ஏந்திய கிளர்ச்சிகளில் இரண்டு முறை ஈடுபட்ட இந்தக் கட்சி, அண்மைக்காலமாக தேர்தல் அரசியலில் ஈடுபட்டு வந்தது.

இந்த கட்சியின் தலைவரான அனுர குமார திசநாயக, 1968-ம் ஆண்டு, அனுராதபுரம் மாவட்டத்தில் கூலித்தொழிலாளிக்கு மகனாக பிறந்தவர். 2000-ம் ஆண்டு முதல் எம்.பி.,யாக இருக்கிறார்.

சந்திரிகா குமாரதுங்கா அரசில், 2004-ம் ஆண்டு முதல் 2005 வரை அமைச்சர் பதவி வகித்தார்.

2005-ல் சந்திரிகா அரசில் இருந்து பிற ஜே.வி.பி., அமைச்சர்களுடன் ராஜினாமா செய்தார்.

கடந்த 2019-ம் ஆண்டு நடந்த அதிபர் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி என்ற கூட்டமைப்பை தோற்றுவித்தார்.

அதன் வேட்பாளராக, அப்போது நடந்த அதிபர் தேர்தலிலும் போட்டியிட்டார்.

அந்தத் தேர்தலில் அவருக்கு 3 சதவீதம் ஓட்டுக்களே கிடைத்தன. இப்போது, தேர்தலில் வென்று அதிபர் ஆகி விட்டார்.

திசநாயகவின் ஜேவிபி கட்சி, அடிப்படையில் இந்தியாவுக்கு எதிரான, அதே சமயம் சீன ஆதரவு கோட்பாட்டை கொண்ட கட்சியாகும்.

1987 ஆண்டில் போடப்பட்ட, இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்தது.

இதனால், திசநாயக ஜனாதிபதியான பிறகு இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பாரா? சீனா பக்கம் சாய்வாரா? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் மீளாத நிலையில் இருப்பதால், இப்போதைக்கு அவர் அண்டை நாடான இந்தியாவை பகைத்துக் கொள்ள மாட்டார் என அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

நன்றி;  மு.மாடக்கண்ணு.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading