World

பூமியையே 9 நாட்கள் உலுக்கிய மெகா சுனாமி

கிரீன்லாந்தில் டிக்சன் ஃப்யோர்டு பகுதியில் (Fjord) ஏற்பட்ட மிகப்பெரிய நிலச்சரிவு, ஒன்பது நாட்களுக்கு பூமியையே உலுக்கும் அளவிற்கு ஒரு பேரலை உருவாக வழிவகுத்தது.

இந்த நிகழ்வினால் ஏற்பட்ட நில அதிர்வு சிக்னல்கள், உலகம் முழுவதும் உள்ள சென்சார்களில், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பதிவாயின. இந்த சிக்னல்கள் எங்கிருந்து வருகின்றன என்பது குறித்து விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

இந்த நிலச்சரிவின் போது ஒரு பனிப்பாறை உருகி அதன்மேலிருந்த மலை சரிந்து விழுந்தால், 200 மீட்டர் அளவிற்கு பேரலை எழுந்தது.

குறுகலாக உள்ள ஃப்யோர்டு பகுதியில் இந்த அலை சிக்கிக்கொண்டு, ஒன்பது நாட்களுக்கு முன்னும் பின்னுமாக நகர்ந்து அதிர்வுகளை ஏற்படுத்தியது.

மெகா சுனாமியின் தோற்றம்

சர்வதேச விஞ்ஞானிகள் குழு மற்றும் டேனிஷ் கடற்படை இணைந்து இந்த நிகழ்வைப் பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டன. அந்த ஆராய்ச்சி முடிவுகள் “சயின்ஸ்” இதழில் வெளியிடப்பட்டன.

“கடந்த ஆண்டு இந்த சிக்னல்களை எனது சக பணியாளர்கள் கண்டறிந்த போது, ​​​​அது பூகம்பம் போல் தெரியவில்லை. அந்த நேரத்தில், நாங்கள் அதை ‘அடையாளம் தெரியாத நில அதிர்வு போல ஒன்று’ என்று குறிப்பிட்டோம்”, என்று இந்த விஞ்ஞானிகள் குழுவை சேர்ந்த ஒருவரும் லண்டன் பல்கலைக் கழக கல்லூரியை சேர்ந்தவருமான முனைவர் ஸ்டீபன் ஹிக்ஸ் நினைவு கூர்ந்தார்.

“ஒன்பது நாட்களுக்கு, ஒவ்வொரு 90 விநாடிகளுக்கு ஒருமுறை இது நிகழ்ந்தது”.

இந்த குழப்பமான சிக்னல் குறித்து விஞ்ஞானிகள் குழு இணைய தளத்தில் விவாதங்களை தொடங்கியது.

“அதே நேரத்தில், கிரீன்லாந்தில் களப்பணி செய்து கொண்டிருக்கும் டென்மார்க்கை சேர்ந்த எனது சக பணியாளர்கள், ஃப்யோர்டு பகுதியில் தொலைதூரத்தில் சுனாமி ஏற்பட்டு இருப்பது குறித்த அறிக்கைகளை பெற்றனர். அதற்கு பிறகு தான் அவர்களுடன் நாங்களும் அப்பணியில் இணைந்தோம்”, என்று முனைவர் ஹிக்ஸ் விளக்கினார்.

  • கிரீன்லாந்து, மெகா சுனாமி
படக்குறிப்பு,டேனிஷ் ராணுவம் பகிர்ந்த டிக்சன் ஃப்யோர்டு பகுதியின் நிலச் சரிவு குறித்த புகைப்படம்

இந்த குழு நில அதிர்வு குறித்த தரவுகளை பயன்படுத்தி இந்த சிக்னல்கள் கிழக்கு கிரீன்லாந்தில் உள்ள டிக்சன் ஃப்யோர்டு பகுதியில் இருந்து தான் வருகின்றன என்று கண்டறிந்தனர். இந்த சிக்னல்கள் தோன்றுவதற்கு முன்பு டேனிஷ் கடற்படையால் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் இந்த பகுதியின் செயற்கைக்கோள் படங்கள் போன்றவற்றை இந்த ஆராய்ச்சிக்கு விஞ்ஞானிகள் பயன்படுத்தினர்.

ஃப்யோர்டு பகுதியில் உள்ள ஒரு ஓடைக்கு மேல் தூசியாலான மேகம் சூழ்ந்திருப்பதை செயற்கைக்கோள் புகைப்படம் ஒன்று காட்டியது. இந்த நிகழ்விற்கு முன்னும் பின்னும் எடுக்கப்பட்ட புகைப்படங்களை ஒப்பிட்டுப் பார்த்ததில், ஒரு மலை சரிந்து பனிப்பாறையின் ஒரு பகுதி தண்ணீருக்குள் அடித்துச் சென்றது தெரியவந்தது.

25 எம்பயர் ஸ்டேட் கட்டடங்களுக்கு சமமான அளவிலான 25 மில்லியன் கன மீட்டர் பாறையானது தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இதனால் தான் 200 மீட்டர் உயரத்தில் “மெகா சுனாமி” ஏற்பட்டது.

இந்த நிகழ்விற்கு பின் எடுக்கப்பட்ட இப்பகுதியின் புகைப்படங்களில், எவ்வளவு உயரத்திற்கு அலை மேல் நோக்கி எழுந்துள்ளது என்பது குறித்து பனிப்பாறையில் ஏற்பட்ட குறியீடு மூலம் அறியலாம்.

  • கிரீன்லாந்து, மெகா சுனாமி

பட மூலாதாரம்,Copernicus Sentinel Data, 2023/ESA

படக்குறிப்பு,ஃப்யோர்டு பகுதியில் உள்ள ஒரு ஓடைக்கு மேல் தூசியாலான மேகம் சூழ்ந்திருப்பதை செயற்கைக்கோள் புகைப்படம் ஒன்று காட்டியது.
‘அலையால் அதன் ஆற்றலைச் சிதறடிக்க முடியவில்லை’

பொதுவாக நிலத்தடியில் ஏற்படும் நிலநடுக்கங்களால் பரந்த கடலில், அலை மேல் எழுந்து சுனாமி நிகழ்கின்றது. ஆனால் இப்பகுதி ஒரு குறுகிய நிலப்பரப்பு என்பதால் அந்த அலை சிக்கிக்கொண்டது.

“இந்த நிலச்சரிவு பரந்த கடலில் இருந்து 200 கிலோமீட்டர் உள்ளே நடந்தது. மேலும் ஃப்யோர்டு நில அமைப்பு மிகவும் சிக்கலானது. எனவே அலையால் அதன் ஆற்றலைச் சிதறடிக்க முடியவில்லை”, என்று முனைவர் ஹிக்ஸ் விளக்கினார்.

அலைகள் சிதறடிக்கப்படுவதற்கு பதிலாக, ஒன்பது நாட்களுக்கு முன்னும் பின்னுமாக நகர்ந்தது என்பதை விளக்க இந்த குழு ஒரு மாதிரியை உருவாக்கியது.

“நீண்ட காலமாக, இவ்வளவு பெரிய அளவில் நீர் எழுவதை நாங்கள் பார்த்ததில்லை” என்று முனைவர் ஹிக்ஸ் கூறினார்.

கிரீன்லாந்தில் வெப்பநிலை அதிகரித்துள்ளதால், மலையின் அடிவாரத்தில் உள்ள பனிப்பாறை உருகியதால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டிருப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்தனர்.

  • கிரீன்லாந்து, மெகா சுனாமி

பட மூலாதாரம்,Wieter Boone

படக்குறிப்பு,அதிர்ஷ்டவசமாக நிலச்சரிவு ஏற்பட்டபோது அந்த பகுதியில் யாரும் இல்லை.

“அந்த பனிப்பாறை தான் இந்த மலையைத் தாங்கிக் கொண்டிருந்தது. அது உருகி மெல்லியதாக மாறிய போது மலையை தாங்குவதை நிறுத்தியது. காலநிலை மாற்றம் இப்போது இந்த பகுதிகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை இந்த சம்பவம் உணர்த்துகின்றது”, என்று முனைவர் ஹிக்ஸ் கூறினார்.

இந்த நிகழ்வு ஒரு தொலைதூர பகுதியில் நடந்தது. ஃப்யோர்டு பகுதியைக் காண சில ஆர்க்டிக் பயணக் கப்பல்கள் வருவதுண்டு. அதிர்ஷ்டவசமாக இந்த நிலச்சரிவு ஏற்பட்ட போது இந்த பகுதியில் யாரும் இல்லை. ஆனால் இதுபோன்ற நிகழ்வுகள் ஆர்க்டிக் பகுதியில் அதிகரித்து வருவதாக டென்மார்க் மற்றும் கிரீன்லாந்திற்கான தேசிய புவியியல் ஆய்வுகளின் (GEUS) முன்னணி ஆராய்ச்சியாளரான முனைவர் கிறிஸ்டியன் ஸ்வென்னெவிக் கூறினார்.

“ராட்சத, சுனாமியை உண்டாக்கும் நிலச்சரிவுகள், குறிப்பாக கிரீன்லாந்தில் அதிகரிப்பதை நாம் பார்க்க முடிகின்றது”, என்று அவர் பிபிசி செய்திகளிடம் கூறினார்.

“இது போன்ற பாதிப்புகள் டிக்சன் ஃப்யோர்டு பகுதியில் மட்டும் நிகழவில்லை. இந்த நிகழ்வு இது போல முன் நடந்திடாத அளவில் ஏற்பட்டு இருப்பதால் இது குறித்து மேலும் ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றது”, என்றார்.

உலகெங்கிலும் புவியின் மேலோட்டை, காலநிலை மாற்றம் எவ்வாறு பாதிக்கின்றது என்பதை உணர்த்தும் முதல் நிகழ்வாக இந்த டிக்சன் ஃப்யோர்டு பகுதியின் நிலச் சரிவு இருக்கும் என்று முனைவர் ஹிக்ஸ் குறிப்பிட்டார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading