Local

சஜித் வெற்றி பெற்றால் என்ன நடக்கும்?

 

சஜித் பிரேமதாஸ ஒரு பலவீனமான தலைவர் என்ற கருத்து அரசியல் வட்டாரங்களில் மிகவும் பிரபல்யமானது.

ஆழமாக சிந்தித்துப் பேசாமல், கருத்துகளை மேம்போக்காக அடித்து விடுபவர் என்று பெயரெடுத்திருக்கிறார். அவரது ஜனாதிபதி தேர்தல் பரப்புரைகளே அதற்குச் சான்று.

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் மகன் என்பதை ஒரு முக்கிய தகுதியாக அவர் முன்னிறுத்துகிறார்.
‘வாரிசு அரசியல்’ பெரிதாக ஒன்றையுமே கொண்டுவராது.

யாரும் யாருடைய வாரிசாகவும் இருந்துவிட்டுப் போகட்டும். ஆனால், அதைவிட தலைமைத்துவப் பண்புகளும் ஆளுமையும் மிக முக்கியமானவை. நாட்டை ஆள, சஜித்தின் ஆளுமை போதாது என்பதே பலரது கணிப்பு.

பிரேமதாஸவுக்கு வீடமைப்பு, (குறைபாடுகள் நிறைந்த) வறுமை ஒழிப்புத் திட்டம் (ஜனசவிய), ஒடுக்கப்பட்டவராக இருந்து அதிகாரக் கட்டமைப்பில் மேலெழுந்தது போன்ற சில நல்ல பக்கங்கள் இருப்பது போலவே, மிகவும் கசப்பான கறைபடிந்த வரலாறும் இருக்கிறது.

இது இவ்வாறிருக்க, பூகோள அரசியல்
சக்திகள் (Geo-political Forces), பலவீனமான தலைவர் ஒருவரையே விரும்புகின்றன.
சஜித்தை வெற்றிபெறச் செய்தால், அவரை இலகுவாகக் ‘கையாளலாம்’ என அவை கணக்குப் போடுகின்றன. பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ள இலங்கைக்கு இது மிக ஆபத்தானது.

சஜித்தோடுதான் தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள் பல கைகோர்த்திருக்கின்றன. இதற்கு தங்களது இருப்பைத் தக்க வைப்பது, சுயநல அரசியல், பூகோள அரசியல் அழுத்தங்கள் என்று பல காரணங்கள் உள்ளன.

மக்களது காதில் சும்மா பூச்சுற்ற முடியாது என்பதை இம்முறை இந்தக் கட்சித் தலைவர்கள் மிகத் தெளிவாக உணர்ந்துள்ளனர். அதனால்தான் அவர்களது உரைகளில் உப்புச் சப்பில்லை; நிலைப்பாடுகளில் தெளிவில்லை.
அவற்றில் அரசியல் சாரத்தை வடித்துத்தான் எடுக்க வேண்டியிருக்கிறது.
அடிப்படைகளை வேண்டுமென்றே மறந்து, சும்மா கம்பு சுத்துகிறார்கள்.

இன்னொன்று, சஜித்துடன் கைகோர்த்திருக்கும் பாட்டலி சம்பிக்க ரணவக்க பற்றிய விடயம். இவர் குறித்து நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

சிங்கள பௌத்த தேசியவாதத்தின் தந்தையாக அநகாரிக தர்மபாலவைக் குறிப்பிடுவர். அதன் நவீன அல்லது இந்தக் காலத்து முகம்தான் சம்பிக்க.

சம்பிக்க கெட்டிக்காரர். ஆனால், மிக மோசமான பேரினவாத அழுக்கை மனதில் புதைத்து வைத்திருப்பவர். எண்ணிக்கைச் சிறுபான்மை மக்களின் மீதான கருத்தியல் வன்மம் கொண்டவர். தேர்தல் தேவைக்காக அதை அடக்கி வாசிக்கிறார் என்பதுதான் உண்மை நிலவரம்.

சிங்கள அபியோகய (சிங்கள சவால்), கொட்டி வினிவிதீம (புலிகள் பற்றிய உள்நோக்கு), நெகநெஹிர சிங்கள உருமய (கிழக்கின் சிங்கள மரபுரிமை), அல்ஜிஹாத் அல்காயிதா உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதியவர்.

இலங்கையில் இஸ்லாமிய வெறுப்பு, நிறுவனமயப்படுவதற்கான கருத்தியல் தளத்தையும் செயற்பாட்டுத் தளத்தையும் வலுப்படுத்தி வளர்த்தெடுத்து வருபவர்.

சம்பிக்கவின் அடுத்த இலக்கு ஜனாதிபதி கதிரையில் அமர்வதுதான். ‘ஜனதா மிதுரோ’ என்று தொடங்கி, இன்னொரு கட்டத்தில் ‘ஜாதிக ஹெல உறுமய’ கட்சியை உருவாக்கியவர்களுள் இவர் முதன்மையானவர்.

பின்னர் இந்தக் கட்சிக்கு பல தடவை பெயர் மாற்றினார். ஒரு கட்டத்தில் ’43 பலகாய’ (இலவசக் கல்வி தொடங்கிய ஆண்டும் அதனால் பயனடைந்த தலைமுறையும்) என்று இயங்கினார்.

இப்போது புதிய கட்சிப் பெயரோடு வந்திருக்கிறார். தேர்தலுக்கு முன் சுகததாஸ ஸ்டேடியத்தில் சுமார் 5000 பேரை ஒன்றுகூட்டி, தனது கட்சி மாநாட்டை நடத்திக் காட்டினார். தன்னை ஒரு பெரும் சக்தி என்று காட்டும் ‘பிம்ப அரசியல்’ முனைப்பு அது.

பலவீனமடைந்து குழம்பிப் போன இலங்கை அரசியல் குட்டையில், மீன்பிடிக்க வந்திருப்பவர்தான் இந்த சம்பிக்க.
இவருக்கென்று பலமான வாக்கு வங்கி கிடையாது. அதனால், மாறி மாறி பல கட்சிகளோடு இணைந்துதான் தேர்தலை எதிர்கொள்கிறார்.

சஜித்தின் ஐக்கிய மக்கள் சக்தி (SJB) சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி இவர். ஒருகட்டத்தில் சஜித்திடமிருந்து விலகி, சுயாதீனமாக செயற்படப் போவதாக அறிவித்தார்.

ரணிலோடு சேர்ந்து, அவருக்குப் பின் அந்த வாக்கு வங்கியைக் கைப்பற்றுவது இவரது எண்ணமாக இருந்தது. ஆனால், அது அவருக்குக் கைகூடவில்லை.

அடுத்த கட்டமாக மஹிந்த ராஜபக்சவுக்கு தூதனுப்பினார். மொட்டின் வேட்பாளராக மாற ரகசியப் பேச்சுவார்த்தை நடத்தினார். அதுவும் அவருக்கு சாத்தியப்படவில்லை.

இப்போது மீண்டும் சஜித்துடன் இணைந்திருக்கிறார். சஜித்துக்கும் சிங்களத் தேசியவாத வாக்குகளைப் பெறும் முகமொன்று தேவை. இல்லாவிட்டால், பெரும்பான்மை மக்கள் நிராகரித்து விடுவார்கள் என்ற பயம் அவருக்கு. அதனால்தான் இருவருக்கும் பரஸ்பரம் நன்மை பயக்கும் ‘Win-Win formula’ வாக இந்தத் தேர்தல் கூட்டு அமைந்திருக்கிறது.

களுத்துறை மாவட்டம் புளத்சிங்களவில் பிறந்த மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியலாளரான சம்பிக்க, இப்போது தருணம் பார்த்துக் காத்திருக்கிறார்.
‘ஓடு மீன் ஓட, உறுமீன் வருமளவு காத்திருக்கும் கொக்குதான்’ இந்தச் சம்பிக்க.

‘அண்ணன் எப்போ போவான்? திண்ணை எப்போ காலியாகும்?’ – இதுதான் அவரது இப்போதைய மனக் கணக்கு.

இந்த சந்தர்ப்பத்தில், ஞானசார தேரர் சஜித்துக்கு ஆதரவு தெரிவித்திருப்பதையும் பொருத்திப் பார்க்க வேண்டும்.

ஆக, சஜித் வென்றால் இவர்களது அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்கொண்டு செல்வதற்கான வாயில்கள் திறக்கும். நீறுபூத்த நெருப்பாக இருக்கும் இனவாதம் என்ற ஆயுதத்தை அவர்கள் மீண்டும் கையில் எடுப்பார்கள்.

பலவீனமான சஜித்தை அடுத்தடுத்த தேர்தல்களில் தன்னால் மேவ முடியும் என்பதுதான் சம்பிக்கவின் தந்திரோபாய நகர்வினதும் அணிச்சேர்க்கையினதும் உள்ளரசியல்.

இது வெல்லுமா தோற்குமா என்பது வேறு விடயம். ஆனால், சஜித்தின் வாக்கு வங்கியிலும் வெற்றியிலும், தான் ‘குதிரை ஓடலாம்’ என்று கணிக்கிறார் சம்பிக்க.

 

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading