Cinema

A R ரஹ்மான் சாதனை!

 

சி.னிமா உலகில் தனது அளப்பரிய பங்களிப்புக்காக, நம்ம ஊர் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், 7-வது முறையாக தேசிய விருது பெற்றுள்ளார். இந்தியாவில் இசை அமைப்பாளர் ஒருவர் ஏழாம் முறையாக தேசிய விருது வாங்குவது, இதுவே முதன் முறை.

தேசிய திரைப்பட விருதுகள் ஆண்டுதோறும் மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகின்றன. 2022-ம் ஆண்டுக்கான 70-வது தேசிய திரைப்பட விருதுகள், நேற்று அறிவிக்கப்பட்டன.

இந்திய அளவில் சிறந்த நடிகருக்கான விருது ‘காந்தாரா’ படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டிக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை அவர் இயக்கி நடித்திருந்தார்.

சிறந்த படமாக ‘ஆட்டம்’ என்ற மலையாள படமும் சிறந்த பொழுதுபோக்கு படமாக ‘காந்தாரா’வும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

சிறந்த நடிகைக்கான விருது ‘திருச்சிற்றம்பலம்’ படத்தில் நடித்த நித்யா மேனனுக்கும், ‘கட்ச் எக்ஸ்பிரஸ்’ என்ற குஜராத்தி படத்தில் நடித்துள்ள மானசி பரேக்கிற்கும் பகிர்ந்து வழங்கப்படுகிறது.

பொன்னியின் செல்வனுக்கு 4 விருதுகள்

மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன்-1’ படம் 4 விருதுகளைப் பெற்றுள்ளது. சிறந்த தமிழ் திரைப்படத்துக்கான விருதைப்பெற்றுள்ள இந்தப்படம், மேலும் மூன்று விருதுகளையும் வாங்கியுள்ளது.

சிறந்த பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மான், ஒளிப்பதிவுக்காக ரவிவர்மன், ஒலி வடிவமைப்புக்காக ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி ஆகியோருக்கு விருதுகள் கிடைத்துள்ளன.

ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இது 7-வது தேசிய விருது ஆகும். தேசிய விருதுகளை அதிகம் வென்ற இசையமைப்பாளர் என்ற பெருமையை நம்ம ஊர் இசைப்புயல் வாங்கி, தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார்.

சிறந்த இசை அமைப்பாளர் (பாடல்கள்) விருதை பிரம்மாஸ்திரா படத்துக்காக பிரீத்தம் பெறுகிறார். சிறந்த சண்டை பயிற்சியாளர் விருது, ‘கே.ஜி.எஃப்’ படத்துக்காக அன்பறிவ் சகோதரர்களுக்கும் சிறந்த நடனத்துக்கான விருது, ‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ‘மேகம் கருக்காதா’ என்ற பாடலுக்காக, நடன இயக்குநர்கள் ஜானி- சதீஷ் ஆகியோருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்னணி பாடகிக்கான விருது, மலையாளத்தில் வெளியான ‘சவுதி வெள்ளக்கா’ படத்துக்காக, பாம்பே ஜெயஸ்ரீக்கும், சிறந்த பாடகருக்கான விருது ‘பிரம்மாஸ்திரா’ என்ற இந்திப் படத்தில் பாடிய அர்ஜித் சிங்குக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரஹ்மான் கடந்து வந்த பாதை

ஏ.ஆர்.ரஹ்மான், ஆரம்பகாலத்தில், விளம்பர படங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் இசை அமைத்து வந்தார். அதன் வழியே மணிரத்னம் அறிமுகம் கிடைத்தது. அவர், தனது ‘ரோஜா’ படம் மூலம் ரஹ்மானை இசை அமைப்பாளராக அறிமுகம் செய்தார்.

1992-ம் ஆண்டு வெளியான ‘ரோஜா’ பெரும் வெற்றியைப் பெற்றது. அந்த ஆண்டில், ’ரோஜா’ மூலம் ரஹ்மானுக்கு முதன்முறையாக சிறந்த இசையமைப்பாளர் என்ற தேசிய விருது கிட்டியது.

96-ம் ஆண்டில் ’ரிலீஸ்’ ஆன ‘மின்சார கனவு’ படத்துக்காக இரண்டாம் முறை தேசிய விருது தேடி வந்தது.

2001-ம் ஆண்டில் அமிர்கான் நடித்த ‘லகான்’ இந்தி படத்தின் மூலம் 3-ம் தடவை தேசிய விருது, பெற்றார், ரஹ்மான்.

’கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்துக்காக 4-ம் முறையும், ‘காற்று வெளியிடை’ படத்துக்காக 5-ம் முறையும், ‘ஸ்ரீதேவி நடித்த ‘மாம்’ இந்தி படத்துக்காக 5-ம் முறையும் தேசிய விருது கிடைத்தது.

இப்போது ‘பொன்னியின் செல்வன்‘ படத்துக்காக 7-ம் முறையாக தேசிய விருது பெற்று, சாதனை படைத்துள்ளார், இசைப்புயல்.

இவருக்கு அடுத்தபடியாக அதிகம் தேசிய விருது வாங்கியவர், இளையராஜா. அவருக்கு 5 முறை தேசிய விருது கிடைத்துள்ளது.

இந்தி இசையமைப்பாளர் விஷால் பரத்வாஜ், நான்கு முறை தேசிய விருது பெற்றுள்ளார்..

ஏ.ஆர்.ரஹ்மான் வாங்கிய 7 விருதுகளில் 4 விருதுகள், மணிரத்னம் படத்துக்காக (ரோஜா, கன்னத்தில் முத்தமிட்டால், காற்று வெளியிடை, பொன்னியின் செல்வன்) வாங்கியவை என்பது, ரொம்பவும் ‘ஸ்பெஷல்’.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading