World

உயரத்தை அதிகரிக்க கால் நீட்டிப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பெண்

    • ச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் மருத்துவ விவரங்கள் உள்ளன, இது வாசகர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தக் கூடும்.
        • எலைன் ஃபூவின் கால்களில் ஆங்காங்கே காணப்படும் தடிமனான ஊதா நிற வடுக்கள் தவறான கால்-நீட்டிப்பு அறுவை சிகிச்சையின் கொடிய வலியை நினைவூட்டுகின்றன.

          எலைன் ஃபூவின் இருண்ட காலம் 2016இல் தொடங்கியது. 49 வயதான அவருக்கு 2016 இல் இருந்து இதுவரை ஐந்து அறுவை சிகிச்சைகள் மற்றும் மூன்று எலும்பு மாற்று அறுவை சிகிச்சைகள் நடந்திருக்கின்றன. அதுவரை அவர் சேமித்து வைத்திருந்த அத்தனை பணமும் காலியானது. அவரது அறுவை சிகிச்சை நிபுணருக்கு எதிராக சட்டப்பூர்வ நடவடிக்கை எடுத்தார். ஜூலை மாதம் தீர்க்கப்பட்ட அந்த வழக்கில் எலைனின் நிலைக்கு மருத்துவர் பொறுப்பேற்க முடியாது என்று கூறப்பட்டது.

          ஒரு கட்டத்தில், எலைனின் கால் எலும்புகளில் பொருத்தப்பட்டிருந்த உலோக கம்பி உடைந்தது. மற்றொரு சந்தர்ப்பத்தில், அவர் திடீரென கால்கள் “உள்ளிருந்து தீக்காயம் பட்டது” போல் உணர்ந்ததாக கூறுகிறார்.

          “எனது பயணம் நெருப்பில் நிற்பது போன்ற வலிகள் நிறைந்தது. ஆனாலும் நான் உயிர் பிழைத்தேன்” என்று அவர் விவரித்தார்.

          அவரது மருத்துவர் சிகிச்சையில் தான் எந்த அலட்சியமும் காட்டவில்லை என்று தொடர்ந்து கூறி வந்தார். அறுவை சிகிச்சைக்கு முன்னரே சில சிக்கல்கள் பற்றி எலைனிடம் எச்சரித்ததாக அவர் கூறினார். மற்ற சிக்கல்கள் எலைனின் சொந்த செயல்களால் ஏற்பட்டதாகவும் குற்றம்சாட்டினார்.

          தன் தோற்றத்தை வெறுத்த எலைன்

          எலைன் சிறு வயதில் தன் உயரத்தை வெறுத்தார்.

          “12 வயதில், நான் பெரும்பாலான பெண்களை விட உயரமாக இருந்தேன்,” என்று அவர் விவரித்தார்.

          “14 வயதான போது நான் திடீரென்று எல்லோரையும் விட உயரம் குறைந்தவராக இருப்பது போல் உணர்ந்தேன். காலப்போக்கில் அது ஒரு ஆவேசமாக மாறியது. உயரமாக இருப்பது சிறந்தது. உயரமானவர் தான் அழகானவர். உயரமானவர்களுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக நான் உணர்ந்தேன்.”

          வயது அதிகரிக்க அதிகரிக்க என் தோற்றத்தை பற்றிய மன உளைச்சல் அதிகமாக இருந்தது.

          எலைன் தனக்கு உடல் டிஸ்மார்பியா (dysmorphia) இருப்பதாக நம்புகிறார், இது ஒரு மனம் தொடர்பான பிரச்னை. இந்த நிலை ஏற்பட்டிருக்கும் நபர்கள், மற்றவர்களை ஒப்பிட்டு அவர்களின் தோற்றத்தில் ஒரு குறைபாட்டை கொண்டிருப்பது போல் நினைத்துக் கொள்வார்கள்.

          இந்த மனநிலையின் தாக்கம் வாழ்க்கையில் பேரழிவை ஏற்படுத்தும்.

          தனது 25 வயதில், எலைன் ஒரு சீன மருத்துவமனையைப் பற்றிய ஒரு கட்டுரையைப் பார்த்தார், அங்கு மக்கள் தங்கள் கால் எலும்புகளை நீளமாக்க அறுவை சிகிச்சை செய்துகொள்வதை பற்றி அறிந்தார்.

          அந்த கட்டுரையில், சிகிச்சையில் பயன்படுத்தப்படும் கால் கூண்டுகள் (leg cages) மற்றும் நோய் தொற்றுகள் பற்றிய கொடூரமான விவரங்கள் இருந்தன.

          அது பார்க்கும் போது திகிலூட்டும் உணர்வை கொடுத்தாலும், எலைனைக் கவர்ந்துவிட்டது.

          “இது தேவையா என்று மக்கள் கேள்வி எழுப்புவார்கள் என எனக்குத் தெரியும்,” ஆனால் நீங்கள் உடல் டிஸ்மார்பியாவை எதிர்கொள்ளும் போது, ​​நீங்கள் ஏன் மிகவும் மோசமாக உணர்கிறீர்கள் என்பதற்கு பகுத்தறிவு விளக்கம் கொடுக்க இயலாது. அதை சரி செய்ய தான் மனம் நினைக்கும்” என்றார்.

        என் அழகான நாட்களை தொலைத்துவிட்டேன்! : கால் நீட்டிப்பு அறுவை சிகிச்சை செய்த பெண் பகிரும் கொடிய அனுபவம்

        பட மூலாதாரம்,Elaine Foo/Supplied

        படக்குறிப்பு,அறுவை சிகிச்சை முடிந்து சுயநினைவுக்கு திரும்பிய போது, மிகவும் உற்சாகமாக இருந்தது
        லண்டன் மருத்துவமனையில் கால் நீட்டிப்பு சிகிச்சை

        பதினாறு ஆண்டுகளுக்குப் பிறகு, எலைன் லண்டனில் ஒரு தனியார் கிளினிக்கை கண்டறிந்தார்.

        இது எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரான ஜீன்-மார்க் குய்செட் என்பவரால் நடத்தப்பட்டது. மூட்டு நீட்டிப்பு நிபுணரான அவர் “Guichet Nail” என்ற நீளமான சாதனத்தை உருவாக்கினார். அவரே உருவாக்கிய இந்த உலோக கம்பியை கால் நீட்டிப்பு சிகிச்சைக்கு பயன்படுத்தினார்.

        “இது உண்மையில் ஒரு மகிழ்ச்சியான விஷயம், ஏனென்றால் நான் கால் நீட்டிப்பு அறுவை சிகிச்சையை லண்டனில் செய்து கொண்டு, வீட்டில் இருந்தபடியே குணமடைய முடியும்,” என்று தான் நினைத்ததை அவர் நினைவு கூர்ந்தார்.

        “டாக்டர் குய்செட் தவறு நடக்கக் கூடிய விஷயங்களைப் பற்றி வெளிப்படையாக பேசினார். நரம்பு காயங்கள், ரத்தக் கட்டிகள் ஆகியவை ஏற்படலாம். எலும்புகள் மீண்டும் ஒன்றாக இணையாமல் கூட போகலாம் என்று விளக்கினார்”

        “ஆனால் நான் சிகிச்சை பற்றி ஆராய்ச்சி செய்தேன், மிகவும் விலையுயர்ந்த மருத்துவரிடம் செல்கிறேன். எனவே அதற்கேற்ற மருத்துவ சேவையை கொடுப்பார்கள். தவறு நடக்காது என்று எதிர்பார்த்தேன். 5 அடி 2 அங்குலம் (1.57 மீ) முதல் 5 அடி 5 அங்குலம் (1.65 மீ) ஆக என் உயரம் அதிகரிக்கும் வகையில் என் கால்கள் நீட்டிக்கப்பட வேண்டும் என்பதே எனது கனவு.

        ஜூலை 25 அன்று, சுமார் £50,000 (ரூ. 53,55,027) செலவில், அவர் அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரது வாழ்க்கையை மாற்றப்போகும் ஒரு செயல்முறைக்கு தயாரானார்.

        கால்-நீட்டிப்பு நடைமுறைகள் ஒப்பீட்டளவில் அரிதானவை, ஆனால் உலகம் முழுவதும் உள்ள தனியார் கிளினிக்குகளில் செய்யப்படுகின்றன.

        இது எங்கு மேற்கொள்ளப்படுகிறது என்பதைப் பொறுத்து, சிகிச்சை கட்டணம் மாறுபடும் . (£15,000 முதல் £150,000) வரை செலவாகும்.

      வலியில் கதறிய எலைன்
      என் அழகான நாட்களை தொலைத்துவிட்டேன்! : கால் நீட்டிப்பு அறுவை சிகிச்சை செய்த பெண் பகிரும் கொடிய அனுபவம்

      பட மூலாதாரம்,Elaine Foo/Supplied

      படக்குறிப்பு,எலைனின் இடது காலில் உள்ள கம்பி அவரது தொடை எலும்பு வழியாக உடைந்து வெளியே வந்தது

      “அறுவை சிகிச்சை முடிந்து சுயநினைவுக்கு திருப்பிய போது, மிகவும் உற்சாகமாக இருந்தது, ஏனென்றால் எதுவுமே நடக்கவில்லை என்பது போல உணர்ந்தேன். வலி இல்லை.

      ஆனால் 90 நிமிடங்கள் கழித்து, வலி தொடங்கியது. யாரோ என் கால்களில் நெருப்பு மூட்டுவது போல் உணர்ந்தேன். உள்ளிருந்து நெருப்பில் வறுத்தெடுப்பது போல இருந்தது. அன்று இரவு தொடங்கி காலை 6 மணி வரை வலியில் கதறினேன். அதன் பின்னர் தூங்கிவிட்டேன்.”

      இந்த நடைமுறையில், பொதுவாக வலி இருக்கும்.

      ஏனெனில், அறுவை சிகிச்சையின் போது, ​​கால் எலும்புகள் இரண்டாக பிளக்கப்பட்டு, உள்ளே உலோக கம்பி பொருத்தப்பட்டுள்ளது.

      உலோக கம்பிகள் அவற்றின் நீளத்தை அதிகரிக்கவும், எலும்பின் இரண்டு பகுதிகளை இழுக்கவும் படிப்படியாக நீட்டிக்கப்படுகிறது.

      இந்த செயல்முறை மூலம் நோயாளியின் உயரம் அதிகரிக்கப்பட வேண்டும். சிகிச்சையின் போது உடைந்த எலும்புகள் படிப்படியாக மீண்டும் ஒன்றிணைந்து, இடையில் உள்ள இடைவெளியை நிரப்ப வேண்டும்.

      இந்த செயல்பாடு சிக்கலானது, இது ஒரு நீண்ட செயல்முறையின் ஆரம்பம் மட்டுமே.

      “கால் நீட்டிக்கப்பட்டதை கண் கூட பார்க்க சுமார் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் எடுக்கும், அதன் பின்னர் உங்கள் ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதற்கு குறைந்தபட்சம் நான்கு மாதங்கள் ஆகலாம்” என்று பிரிட்டிஷ் எலும்பியல் சங்கத்தின் முன்னாள் தலைவரான பேராசிரியர் ஹாமிஷ் சிம்ப்சன் எச்சரிக்கிறார்.

      “பெரும்பாலான மக்களுக்கு, முற்றிலுமாக இயல்பு நிலைக்கு திரும்ப ஒரு வருடம் எடுக்கும்.”

      கொடிய இரவின் நினைவுகள்

      என் அழகான நாட்களை தொலைத்துவிட்டேன்! : கால் நீட்டிப்பு அறுவை சிகிச்சை செய்த பெண் பகிரும் கொடிய அனுபவம்

      பட மூலாதாரம்,Elaine Foo/Supplied

      அறுவை சிகிச்சை முடிந்ததும், எலைனின் கால் நீட்டிப்பு செயல்முறை எலும்புகளுக்கு நடுவே தொடங்கியது. ஒரு நாளைக்கு பல முறை வலியை உணர்ந்தார். எலும்புகளுக்கு நடுவே பொருத்தப்பட்டுள்ள கம்பி, ஆணிகள் தளர்வாக கால்களை அடிக்கடி சுழற்றினார்.

      இவ்வாறு கால்களை சுழற்றுவதால், கம்பிகள் தளர்வாகி, எலும்புகள் இணைந்து, கால்களை வளர வைக்கிறது. ஆனால் இரண்டு வாரங்களுக்குப் பிறகு, கொடிய வலி ஏற்பட்டதாக அவர் கூறுகிறார்.

      “எனது இடது காலில் மிகவும் கொடூரமான வலியை உணர்ந்தேன். ஒரு இரவு, நான் படுக்கையில் இருந்தபோது, ​​`கிட் கேட் க்ரஞ்ச்’ போன்ற சத்தம் கேட்டது, அதைத் தொடர்ந்து கடுமையான வலி ஏற்பட்டது.

      எலைன் ஸ்கேன் செய்ய சென்றார், ஸ்கேன் முடிவுகள் அவரது அச்சத்தை உறுதிப்படுத்தியது.

      அவரது இடது காலில் இருந்த கம்பி அவரது தொடை எலும்பு (மனித உடலின் வலிமையான எலும்பு) வழியாக உடைந்து வெளியே வந்துவிட்டது.

      அவர் மனமுடைந்துப் போனார். ஆனால் டாக்டர் குய்செட் தனக்கு உறுதியளித்ததாக அவர் விவரித்தார்.

      “நீங்கள் கவலைப்பட வேண்டாம் என்று அவர் என்னிடம் கூறினார். அது குணமடையும் வரை காத்திருங்கள், அது குணமானதும், நாங்கள் மீண்டும் செயல்முறையைத் தொடங்குவோம்.” என்றார்

      அவர்கள் எலைனின் வலது காலை நீளமாக்கும் செயல்முறையை தொடர்வார்கள், அதே நேரத்தில் அவரது இடது காலின் பிரச்னைகளை சரிசெய்ய மற்றொரு அறுவை சிகிச்சையைத் திட்டமிடுவார்கள் – அதன்மூலம் இறுதியில் வலது காலின் அதே அளவுக்கு இடது காலும் நீட்டிக்கப்படும்.

      கூடுதல் அறுவை சிகிச்சைக்கு ஆயிரக்கணக்கான பவுண்டுகள் செலவாகும் என்று தன்னிடம் கூறப்பட்டதாக எலைன் கூறுகிறார்.

      செப்டம்பரில், அவரது வலது கால் அதன் 7 செமீ இலக்கை அடைந்தது.

      ஆனால் மீண்டும் ஏதோ பிரச்னை இருப்பது போல் தோன்றியது.

      அவரது வலது மற்றும் இடது காலுக்கு இடையே உள்ள முரண்பாடு பிரச்னைகளை ஏற்படுத்தியது, அவரது முதுகுத்தண்டு வளைந்து அவருக்கு அதிக வலியை ஏற்படுத்தியது.

      ஆறு வாரங்களுக்குப் பிறகு, அவரது வலது காலின் ஸ்கேன் முடிவுகள் எலும்பு வளர்ச்சி அடையவில்லை என்பதைக் காட்டியது.

      அவருடைய உலோகக் கம்பி ஊடுருவலால் அவரது தொடை எலும்பு இரண்டு எலும்புத் துண்டுகளாக மாறியிருந்தது.

      எலைன் உதவிக்காக டாக்டர் குய்செட்டிடம் சென்றார். அவர் மிலனில் அவர் பணிபுரிந்த ஒரு கிளினிக்கில் மற்றொரு அறுவை சிகிச்சையைத் திட்டமிட்டார்.

      ஏப்ரல் 2017 இல், அவர்கள் எலைனின் இடது காலை நீட்டிக்கும் செயல்முறையை மீண்டும் தொடங்கினர், அதே நேரத்தில் எலும்பு மஜ்ஜையை வலது காலில் செலுத்தினர் – அது எலும்பு வளர்ச்சியைத் தூண்டும் என்றனர்.

    மீண்டும் அறுவை சிகிச்சைகள்

    அறுவை சிகிச்சைக்குப் பிறகு, எலைன் மோசமான ஒரு செய்தியை கேட்டார்.

    “டாக்டர் குய்செட் அந்த கம்பியை வெளியே எடுக்கும்போது உடைந்து விட்டதாக என்னிடம் கூறினார்” என்று விவரித்தார்.

    “அவர் மற்றொரு நோயாளியிடமிருந்து எடுத்த ஒரு கம்பியை வைத்திருந்தார், அதை பொருத்த முடியும் என்று சொன்னார்.” இதற்கு இன்னும் அதிக பணம் செலவாகும் என்றும் அவர் கூறுகிறார்.

    மூன்று நாட்களுக்குப் பிறகு, நகர முடியவில்லை, ஆனால் வீட்டில் இருக்க ஆசைப்பட்ட எலைன் லண்டனுக்குத் திரும்பினார்.

    டாக்டர் குய்செட் உடனான பேச்சுவார்த்தை மிகவும் மோசமாகி வாக்குவாதம் ஏற்பட்டு, மருத்துவர்-நோயாளி உறவு முறிந்துவிட்டதாகவும் எலைன் கூறுகிறார்.

    என் அழகான நாட்களை தொலைத்துவிட்டேன்! : கால் நீட்டிப்பு அறுவை சிகிச்சை செய்த பெண் பகிரும் கொடிய அனுபவம்

    பட மூலாதாரம்,Elaine Foo/Supplied

    படக்குறிப்பு,எலைனின் வலது கால் எலும்பு வளரவேயில்லை என்பதால் மேலும் சிகிச்சை தேவைப்பட்டது
    வெளி உலக தொடர்புகளை துண்டித்த எலைன்

    வேறு எங்கு சென்று இதனை சரி செய்வது என்று அவருக்குத் தெரியவில்லை, ஜூலை 2017 க்குள் என்.எச்.எஸ்- இல் ஒரு சிறப்பு எலும்பியல் அறுவை சிகிச்சை நிபுணரைப் பார்க்க முடிந்தது.

    “இது நீண்ட சிகிச்சை முறைகளை கொண்டிருக்கும்” என்று நிபுணர் என்னிடம் கூறினார்.

    “முழுமையாக குணமடைவதற்கு முன்பு நான் குறைந்தது ஐந்து வருட சிகிச்சைக்கு என்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டியிருந்தது,” என்று அவர் விளக்கினார்.

    ஆரம்ப அறுவை சிகிச்சைக்கு எட்டு வருடங்கள் ஆன நிலையில், எலைன் இன்னமும் தனது மன மற்றும் உடல் வடுவிலிருந்து மீண்டு வருவதாக கூறுகிறார்.

    அவரால் இயல்பாக இயங்க முடியவில்லை. அவருக்கு PTSD என்னும் மன நோய் பாதிப்பு இருந்தது.

    “2017 முதல் 2020 வரை நான் உலகத்தின் தொடர்புகளில் இருந்து என்னை துண்டித்து கொண்டேன். நான் தனிமையில் இருந்தேன், வேலையில்லாமல் இருந்தேன், பணமற்று, மாற்றுத் திறனாளியாகவும் இருந்தேன்.” என்கிறார் அவர்.

    சமீபத்தில் அவர் மீண்டு வர ஆரம்பித்தார்.

    குற்றச்சாட்டுகளை மறுத்த அறுவை சிகிச்சை நிபுணர்

    நான்காண்டு கால சட்டப் போராட்டம் இறுதியாக ஜூலையில் தீர்க்கப்பட்டது, டாக்டர் குய்செட் எலைன் ஒரு “கணிசமான” தொகையை செலுத்த ஒப்புக் கொண்டார் – ஆனால் நடந்த எல்லாவற்றுக்கும் அவர் பொறுப்பேற்கவில்லை.

    அறுவை சிகிச்சை நிபுணர் குய்செட்டின் வழக்கறிஞர், நீதிமன்றத்தில் டாக்டர் குய்செட்டின் அலட்சியத்தால் இது நடந்தது என்பதை மறுத்தார்:

    “டாக்டர் குய்செட் அலட்சியம் காட்டவில்லை. எலும்பு முறிவு மற்றும் எலும்பு சேர தாமதமானது ஆகியவை துரதிர்ஷ்டவசமாக ஏற்பட்ட சிக்கல்கள் ஆகும், இப்படி நடக்கக் கூடும் என்று அறுவை சிகிச்சைக்கு முன் ஃபூவுக்கு எச்சரிக்கப்பட்டது. மேலும் அவர் மன அழுத்தத்திற்கு உட்கொள்ளும் மருந்துகளின் பயன்பாடு பக்க விளைவுகளை ஏற்படுத்தி சிகிச்சையை குலைத்தது.

    குய்செட்டின் ஆலோசனையைப் பின்பற்ற ஃபூ மறுத்துவிட்டார். அவர் அடிக்கடி பிசியோதெரபி செய்து கொள்வதை புறக்கணித்துவிட்டார்” என்றும் அவர் நீதிமன்றத்தில் கூறினார்.

    எலைன் இந்த கூற்றுகள் அனைத்தையும் மறுத்தார். மன அழுத்த மருந்துகளுக்கும் இந்த சிக்கல்களுக்கும் சம்பந்தமில்லை என்று வாதாடினார். தனக்கு என்ன நேர்ந்தது என்பதற்கு மருத்துவரே பொறுப்பு என்றும் அவர் கூறுகிறார்.

    எலைன் அதிக பணம் செலுத்தி சிகிச்சை எடுப்பதால் தான் பாதுகாப்பாக இருப்போம் என்று கருதினார். ஆனால் அவர் தன் வாழ்நாள் சேமிப்பை சிகிச்சைக்காக இழந்து விட்டார்.

    “என் வாழ்க்கையின் சிறந்த ஆண்டுகளை நான் இழந்துவிட்டேன். என் அழகான நாட்கள் தொலைந்து விட்டது. நான் வருத்தப்படுவதை, குற்றவுணர்ச்சி அடைவதை கேட்க மக்கள் விரும்புகிறார்கள். யாராவது என்னிடம் வந்து, உங்களுக்கு இப்படியெல்லாம் நடக்கும் என்று முன்பே தெரிந்திருந்தால் நீங்கள் அதைச் செய்திருப்பீர்களா? என்று கேட்டால், நான் உறுதியாகச் சொல்வேன், ‘இல்லை, மிக்க நன்றி’.”

    பிபிசி தமிழ்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading