Local

நடுத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர்கள்!

பிரித்தானியாவுக்குச் சொந்தமான தீவு ஒன்றில், சுமார் மூன்று ஆண்டுகளாக சிறைவைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களைக் குறித்த பதறவைக்கும் செய்தி ஒன்று வெளியானது நினைவிருக்கலாம்.

கனடாவுக்குச் செல்லும் முயற்சியில் தோல்வி
2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம், கனடாவுக்குச் செல்லும் நோக்கில் புறப்பட்ட இலங்கைத் தமிழர்கள் பயணித்த படகொன்று நடுக்கடலில் சிக்கித் தவிக்க, பிரித்தானிய கடற்படை அவர்களை மீட்டுள்ளது.

ஆனால், அவர்கள் பிரித்தானியாவுக்குக் கொண்டு செல்லப்படாமல், பிரித்தானியாவின் கடல் கடந்த பிரதேசமான Diego Garcia என்னும் தீவுக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.

சுமார் மூன்று ஆண்டுகளாக அவர்கள் அனைவரும் அந்த தீவிலேயே அடைபட்டுள்ளார்கள்.

பாலியல் மற்றும் உடல் ரீதியான தாக்குதல்கள்
அந்த மக்கள் இலங்கையில் சந்தித்த துன்புறுத்தல்களுக்குத் தப்பித்தான் படகில் புறப்பட்டார்கள். ஆனால், இலங்கையிலிருந்து வெளியேறியும் துன்புறுத்தல்களிலிருந்து அவர்கள் தப்பமுடியவில்லை.

குறைவான இடத்தில், ஒரே கூடாரத்துக்குள் பலர் தங்க வைக்கப்பட்டிருக்க, ஆண்கள் சிலர் தாக்குதல்களுக்கும், பெண்கள் பாலியல் வன்முறைகளுக்கும் ஆளாகியுள்ளார்கள்.

சிறு பிள்ளைகளுக்கு சரியான பாதுகாப்பின்றி, அவர்களும் அவர்களைக் குறித்து அவர்கள் பெற்றோரும் அச்சத்துடனேயே வாழ்ந்துவருகிறார்கள்.

உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி
இதற்கிடையில், இப்படி எங்கேயோ ஒரு தீவில் வந்து சிக்கிக்கொண்டு அனுபவிக்கும் கஷ்டங்களை சகிக்க முடியாமல், அவர்களில் 22 பேர் தங்கள் உயிரைத் தாங்களே மாய்த்துக்கொள்ள முயற்சி செய்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், நடுக்கடலில் Diego Garcia தீவில் அடைக்கப்பட்டுள்ள இலங்கைத் தமிழர்களான புகலிடக்கோரிக்கையாளர்களை பிரித்தானியாவுக்கு அழைத்துவர, உள்துறைச் செயலரான Yvette Cooperக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகிறது.

ஏற்கனவே, பிரித்தானிய இந்தியப் பெருங்கடல் பிரதேசமான Diego Garciaவின் ஆணையரான Paul Candler என்பவர், அந்தத் தீவில் சிக்கித் தவிக்கும் சிலரையாவது பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ளுமாறு வெளியுறவுச் செயலரான David Lammyக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார்.

ஆனால், 22 பேர் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி மேற்கொண்டதைத் தொடர்ந்து, மீண்டும் வியாழக்கிழமையன்று அவர் வெளியுறவு அலுவலக அமைச்சரான Stephen Doughtyக்கு, இந்த அவசார நிலையை விளக்கி ஒரு கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், நிலைமை மோசமடைவதால், தீவில் தங்கவைக்கப்பட்டுள்ள 64 பேரையுமே பிரித்தானியாவுக்கு அழைத்துக்கொள்ளுமாறு வலியுறுத்தியுள்ளார் Diego Garciaவின் ஆணையரான Paul Candler.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading