மரணத் தருவாயில் நம் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சுரக்கின்றனவா?

நரம்பியல் விஞ்ஞானி ஜிமோ போர்ஜிகினுக்கு அது ஆச்சரியமாக இருந்தது. ‘இறப்பது வாழ்க்கையின் இன்றியமையாத ஒரு பகுதி’ என்ற உண்மை ஒருபுறம் இருந்தாலும், இறக்கும் தருவாயில் செயலிழக்கும் மூளையைப் பற்றி நமக்கு ‘கிட்டத்தட்ட ஒன்றும் தெரியாது’ என்பதைத் தன்னால் நம்ப முடியவில்லை என்கிறார் அவர்.

இது 10 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட ஒரு விபத்து மூலம் தெளிவாகத் தெரிந்தது.

“நாங்கள் ஆய்வகத்தில் எலிகளை வைத்துப் பரிசோதனை செய்து கொண்டிருந்தோம். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவற்றின் நரம்பியல் சுரப்புகளை நாங்கள் ஆய்வு செய்தோம்,” என்று அவர் பிபிசி முண்டோ சேவையிடம் விவரித்தார்.

இதில், இரண்டு எலிகள் திடீரென உயிரிழந்தன. இந்த நிகழ்வு அவற்றின் மூளையின் மரணிக்கும் செயல்முறையை அவதானிக்க அவர்களுக்கு வழிவகுத்தது.

“அதில் ஒரு எலிக்கு செரோடோனின் என்ற ரசாயனம் பெருமளவில் சுரந்தது,” என்கிறார்.

அந்த எலி மாயத்தோற்றத்தில் (hallucinating) இருந்ததா? என்று நினைத்து அவர் ஆச்சரியப்பட்டார். “செரோடோனின் ‘ஹேலுசினேஷன்’ உடன் தொடர்புடைய ரசாயனம் ஆகும்,” என்று அவர் விளக்கினார்.

அந்த நரம்பிடைக் கடத்தியின் ( neurotransmitter) அதீதச் சுரப்பு அவரது ஆர்வத்தைத் தூண்டியது.

“மூளையின் இந்தச் செயல்முறை பற்றி கண்டிப்பாக ஒரு விளக்கம் இருக்க வேண்டும் என்று நம்பினேன். அந்த வார இறுதியில் இதுதொடர்பாக நான் நிறைய படிக்க ஆரம்பித்தேன். நான் தொடர்ந்து தேடினேன், இறுதியில் இறக்கும் செயல்முறை பற்றி நமக்கு அதிகம் தெரியவில்லை என்ற முடிவுக்கு வந்தேன்,” என்றார்.

அப்போதிருந்து, மிச்சிகன் பல்கலைக்கழகத்தில் நரம்பியல் மற்றும் மூலக்கூறு மற்றும் ஒருங்கிணைந்த உடலியல் இணைப் பேராசிரியராக இருக்கும் ஜிமோ போர்ஜிகின், இறக்கும் போது மனித மூளையில் என்ன நடக்கிறது என்பதைப் ஆய்வு செய்வதற்காக தன்னை அர்ப்பணித்தார்.

மேலும், அவர் கண்டறிந்தது அனுமானங்களுக்கு முரணானது என்பதை அவர் உணர்ந்தார்.

  • மரணத் தருவாயில் நம் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சுரக்கின்றனவா?
மரணம் என்றால் என்ன?

“யாருக்காவது மாரடைப்பு (cardiac arrest) ஏற்பட்டதை நீங்கள் நேரில் பார்த்ததுண்டா?” என்று அவர் என்னிடம் கேட்டார்.

“ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படும் போது சரிந்து விழுவது வெளிப்படையாக தெரியும் நிகழ்வு,” என்றார்.

“நீங்கள் அந்த நபரைப் பெயர் சொல்லி அழைக்கும் போது அவர் பதிலளிக்க மாட்டார், நீங்கள் அவரைத் தொட்டால் அசைவில்லாமல் இருப்பார், அவர் இறந்துவிட்டதைப் போலச் செயல்படுவார்,” என்றார்.

அந்த நோயாளி உயிருடன் இருக்கிறாரா என்பதை உறுதிபடுத்த மருத்துவ நிபுணர்கள் தேவை. அவர்கள் இறப்பை உறுதிப்படுத்த எலக்ட்ரோ கார்டியோகிராம் இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள்.

“ஆனால், நீண்ட காலமாக வழக்கத்தில் இருப்பது என்னவென்றால், யாருக்காவது மாரடைப்பு ஏற்பட்டால், மருத்துவர் அவர்களின் கைகளையோ கழுத்தையோ பரிசோதிப்பர், அவர்களுக்கு நாடித் துடிப்பு இல்லை என்றால், இதயம் ரத்தத்தை ‘பம்ப்’ செய்யவில்லை என்று அர்த்தம். பின்னர் இது மருத்துவ மரணம் என வரையறுக்கப்படுகிறது,” என்று விவரித்தார்.

“இந்தச் செயல்பாட்டின் போது இதயம் அதிக கவனத்தைப் பெற்றுள்ளது, எனவே தான் இந்தச் செயல்பாட்டை ‘பெருமூளை அடைப்பு’ ( cerebral arrest) என்று சொல்லாமல் ‘மாரடைப்பு’ (Cardiac arrest) என்று சொல்கின்றனர்,” என்கிறார்.

“ஒட்டுமொத்த மருத்துவம் மற்றும் விஞ்ஞான அறிவைப் பொருத்தவரை, மூளை செயலிழக்கிறது. ஏனெனில் அந்த நபரிடம் இருந்து எந்த எதிர்வினையும் வருவதில்லை. அந்த நபரால் உட்காரவோ பேசவோ முடியாது,” என்கிறார்.

மேலும், மூளை செயல்பட பெருமளவில் ஆக்ஸிஜன் தேவைப்படுகிறது. இதயம் ரத்தத்தை பம்ப் செய்யவில்லை என்றால், ஆக்ஸிஜன் மூளையை அடையாது.

போர்ஜிகின் கூற்றுப்படி, “அனைத்து வெளிப்படையான சமிக்ஞைகளும் மூளை செயலிழந்ததை சுட்டிக்காட்டுகின்றன.”

இருப்பினும், அவரது ஆராய்ச்சிக் குழுவின் கண்டுபிடிப்புகள் வேறு முடிவை பிரதிபலிக்கின்றன.

மரணத் தருவாயில் நம் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சுரக்கின்றனவா?

இறக்கும்போது மூளையில் என்ன நடக்கிறது?

எலிகளை வைத்து 2013-இல் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், விலங்குகளின் இதயம் செயல்படுவது நின்றுபோய், அவற்றின் மூளைகள் ஆக்ஸிஜன் பெறுவதை நிறுத்திய பிறகு, பல நரம்பிடைக்கடத்திகளின் (நியூரோடிரான்ஸ்மிட்டர் – neurotransmitter) தீவிரச் செயல்பாட்டைக் கண்டனர்.

“செரோடோனின் 60 மடங்கு அதிகரித்தது. நல்ல உணர்வைத் தூண்டும் ‘டோபமைன்’ 40 முதல் 60 மடங்கு அதிகரித்தது. விழிப்பூட்டும் திறன் கொண்ட நோர்பைன்ப்ரைன் ரசாயனமும் அதிகரித்தது. நரம்பிடை கடத்திகளின் இத்தகைய உயர் நிலைகளை, அந்த விலங்குகள் உயிருடன் இருக்கும்போது கூட நம்மால் பார்க்க முடியாது,” என்று அவர் கூறுகிறார்.

2015-இல், இந்த ஆய்வுக்குழு எலிகள் இறக்கும் போது அவற்றின் மூளை செயலிழப்பது குறித்த இரண்டாவது ஆய்வு முடிவுகளை வெளியிட்டனர்.

“இரண்டு ஆய்வின் போதும், இறக்கும் தருவாயில், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட விலங்குகளில் மூளையின் செயல்பாட்டில் தீவிரத்தன்மை இருந்தது,” என்கிறார்.

“அவற்றின் மூளை ஒரு அதிவேக செயல் நிலையில் இருந்தது,” என்கிறார்.

அதிவேக மூளை அலைகள்
மரணத் தருவாயில் நம் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சுரக்கின்றனவா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,காமா அலைகள் கவனம், நினைவாற்றல் மற்றும் சிக்கலைத் தீர்ப்பது உள்ளிட்ட பல்வேறு அறிவாற்றல் செயல்முறைகளுடன் தொடர்புடைய அதிவேக மூளை அலைகள்

2023-ஆம் ஆண்டில், அவர்கள் கோமாவில் இருந்தவர்கள், மற்றும் எலெக்ட்ரோ என்செபலோகிராபி மின்முனைகள் போன்ற உயிர் காக்கும் கருவிகள் உதவியுடன் உயிர் வாழ்ந்த நான்கு நோயாளிகளை ஆய்வு செய்தனர்.

“அவர்கள் வெவ்வேறு நோய்களால் கொஞ்சம் கொஞ்சமாக இறந்து கொண்டிருந்தனர்,” என்று விஞ்ஞானி கூறுகிறார்.

‘அவர்கள் பிழைப்பது சாத்தியமற்றது. உதவக்கூடிய எந்த ஒரு மருத்துவ நடைமுறைக்கும் அப்பாற்பட்டவர்கள்’ என்று மருத்துவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் முடிவுக்கு வந்தனர். இதன் விளைவாக, அவர்களை இந்த உலகில் இருந்து விடுவிக்க குடும்பத்தினரும் மருத்துவர்களும் முடிவு செய்தனர்.

உறவினர்களின் அனுமதியுடன், அந்த நோயாளிகளின் இயந்திர வென்டிலேட்டர்கள் அல்லது சுவாசக் கருவிகள் அகற்றப்பட்டன.

அவ்வாறு செய்யும்போது, அவர்களில் இரண்டு நோயாளிகளில், புலனுணர்வு செயல்பாடுகளுடன் (cognitive functions) தொடர்புடைய அதீத மூளைச் செயல்பாடுகள் பதிவு செய்யப்பட்டதை ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர்.

அவர்களின் மூளையில் காமா அலைகளும் கண்டறியப்பட்டன. காமா அலைகள் கவனம், நினைவாற்றல் மற்றும் சிக்கலைத் தீர்ப்பது உள்ளிட்ட பல்வேறு அறிவாற்றல் செயல்முறைகளுடன் தொடர்புடைய அதிவேக மூளை அலைகள் ஆகும்.

நரம்பியல் நிபுணரின் கூற்றுப்படி, நோயாளியின் வென்டிலேட்டர் துண்டிக்கப்படும் போது பொதுவான ஹைபோக்ஸியா (hypoxia) நிலை  ஏற்படுகிறது. இது ரத்தத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையை (Generalized hypoxia) விவரிக்கப் பயன்படும் சொல்.

இதயம் ரத்தத்தை பம்ப் செய்ய முடியாத போது ஏற்படும் நிலையில் ஹைபோக்ஸியா ஏற்படுகிறது. இது மாரடைப்புடன் தொடர்புடைய நிலை ஆகும்.

“மூளையைச் செயல்படுத்துவதில் ஹைபோக்ஸியா என்னும் நிலை பங்கு வகிக்கிறது என்று தோன்றுகிறது. மேலும், வென்டிலேட்டர்கள் அகற்றப்பட்ட சில நொடிகளில் நான்கு நோயாளிகளில் இருவரின் மூளை நொடியில் செயல்படத் தொடங்கியது,” என்கிறார்.

ஒட்டுமொத்த மூளையும் செயல்படுமா?
மரணத் தருவாயில் நம் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சுரக்கின்றனவா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மூளையின் ஃப்ரண்டல் லோப் இளஞ்சிவப்பு நிறத்திலும், பாரிட்டல் லோப் நீல நிறத்திலும், ஆக்ஸிபிடல் லோப் ஆரஞ்சு நிறத்திலும், டெம்போரல் லோப் மஞ்சள் நிறத்திலும் காட்டப்படுள்ளது

இந்த ஆய்வைச் செய்த விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, “இறக்கும் தருவாயில் மனிதர்களின் மூளையின் சில பாகங்கள் மட்டுமே செயல்படுகிறது. ஆனால் எலிகளைப் பொருத்தவரை மூளையில் பெருமளவு செயல்படுகிறது.”

அவை மூளையின் விழிப்புணர்வுடன் இருக்கும் செயல்பாடுகளுடன் தொடர்புடைய பகுதிகள்.

அவற்றில் ஒன்று டெம்போரோ பேரியட்டல் ஆக்ஸிபிடல் சந்திப்பு (TPO), இது தற்காலிக, பாரிட்டல் மற்றும் பாரிட்டல் லோப்கள் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் புள்ளியாகும். மேலும், இது ‘பின்புற கார்டிகல் வெப்ப மண்டலம்’ (posterior cortical hot zone) என்று குறிப்பிடப்படுகிறது.

“உங்கள் மூளையின் பின்பகுதி உணர்திறனைக் கட்டுப்படுத்துகிறது,” என்று அவர் தெளிவுபடுத்துகிறார். இது கனவுகள், காட்சி மாயைகள் மற்றும் விழிப்புணர்வு (consciousness) ஆகியவற்றுடன் தொடர்புடையது.

மொழி, பேசுதல் மற்றும் கேட்பது ஆகியவற்றுடன் தொடர்புடைய வெர்னிக்கே பகுதி (Wernicke area) தூண்டப்பட்டதையும் அவர்கள் கண்டறிந்தனர்.

“இருபுறமும் உள்ள ‘டெம்போரல் லோப்’ மிகவும் செயல்திறன் கொண்டு இயங்கியது என்பதையும் நாங்கள் கவனித்தோம்,” என்கிறார். நமது காதுகளுக்கு அருகில் இருக்கும் அந்தப் பகுதி நினைவகச் சேமிப்பு மற்றும் பிற அறிவாற்றல் செயல்முறைகளுக்கு முக்கியமானது.

மூளையின் வலது பக்கத்தில் உள்ள டெம்போரோபரியட்டல் சந்திப்பு (TPJ) ஒத்துணர்வு (empathy) பண்புடன் தொடர்புடையது என்பதை பேராசிரியர் போர்ஜிகின் சுட்டிக்காட்டுகிறார்.

“உண்மையில், மரணத் தருவாய் அனுபவங்களை (near-death experience) அனுபவித்தப் பல நோயாளிகள் மற்றும் மாரடைப்பில் இருந்து தப்பியவர்கள் தங்கள் அனுபவங்கள் தங்களை மேம்படுத்தி, அவர்களின் ஒத்துணர்வை (empathy) அதிகரித்துள்ளதாக தெரிவிக்கின்றனர்,” என்கிறார்.

போர்ஜிகின், ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நோயாளிகளில் ஒருவரைப் பற்றி பேசுகையில், “அவர் உயிர் பிழைத்திருந்தால், அவர் நிச்சயமாக இதே விஷயங்களைச் சொல்லி இருப்பார்,” என்று நம்புகிறார்.

  • மரணத் தருவாயில் நம் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சுரக்கின்றனவா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மரணத்தை நெருங்கிய அனுபவங்கள்

புத்துயிர் பெறும் மருத்துவ நுட்பங்களின் வளர்ச்சி காரணமாக மருத்துவ மரணம் அல்லது மரணத்தில் இருந்து தப்பிய பலர், மரணத் தருவாய் அனுபவங்களை (near-death experience) அனுபவித்ததாகத் தெரிவித்துள்ளனர்.

ஒரு சிலர் தங்கள் வாழ்க்கை எப்படித் தங்கள் கண்முன் விரைவாகக் கடந்து சென்றது, அல்லது சில நிகழ்வுகளை எப்படி நினைவில் நிறுத்தியது என்பதை விவரித்தார்கள். பிரகாசமான ஒளியைப் பார்த்ததாக நிறைய பேர் சொன்னார்கள். இன்னும் சிலர் தங்கள் உடலில் இருந்து தப்பித்து என்ன நடக்கிறது என்பதை பார்க்கச் சுற்றித் திரிந்ததாகச் சொல்கின்றனர்.

இறப்பதற்கு முன்பு சிலர் அனுபவித்த சக்திவாய்ந்த உணர்வுகளை, போர்ஜிகின் தனது ஆய்வுகளில் கண்ட அதிவேக மூளைச் செயல்பாட்டை அடிப்படையாகக் கொண்டு விளக்க முடியுமா?

“செய்ய முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் பதிலளிக்கிறார்.

அவர்களின் 2023 ஆய்வின்படி, குறைந்தது 20% அல்லது 25% பேர் மாரடைப்பில் இருந்து தப்பியவர்கள். அவர்கள் ஒரு ஒளியைக் கண்டதாகக் கூறினர். இது அவர்களின் பார்வை திறனுக்கான மூளைப்பகுதி ( visual cortex ) சுறுசுறுப்பாக இருந்ததைக் குறிக்கிறது.

“ஒரு வாகன விபத்தில் சிக்கிய பிறகு, அறுவை சிகிச்சை மூலம் உயிர் பிழைத்த சில நோயாளிகள் தங்கள் சிகிச்சையின் போது மருத்துவர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு இருந்ததாகக் கூறினர். அவர்கள் காப்பாற்றப்படும் போது அவர்களைச் சுற்றி நடந்தவற்றை கேட்டு கொண்டிருந்ததாக கூறினர்,” என்கிறார்.

“பேச்சு மற்றும் மொழியின் உணர்வுக்குக் காரணமான மூளையின் பகுதி, மற்றும் ஹாட் சோன் (later hot zone) எனப்படும் மண்டலம் ஆகிய இரண்டும் மிகவும் சுறுசுறுப்பாக இருந்துள்ளது,” என்று இறந்த இரண்டு நோயாளிகளைப் பற்றிப் பேராசிரியர் கூறினார்.

முரண்பாடான நம்பிக்கை
மரணத் தருவாயில் நம் மூளையில் மகிழ்ச்சியைத் தூண்டும் ஹார்மோன்கள் சுரக்கின்றனவா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,நவீன மருத்துவ உபகரணங்களின் தொழில்நுட்ப முன்னேற்றத்தால் எண்ணற்ற நோயாளிகளின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளன. உதாரணமாக, டிஃபிபிரிலேட்டர் மின் அதிர்வுகள் மூலம் இதயத் துடிப்பை மீட்கிறது

“மரணம் என்பது  இதயத்தை மையமாகக் கொண்டுள்ளதாக  நீண்ட காலமாக நம்பப்படுகிறது. எனவே, ஒரு நபருக்கு மாரடைப்பு ஏற்பட்டால் மூளை செயல்படுவதை நிறுத்துகிறது என்று நம்புகின்றனர்,” என போர்ஜிகின் கூறுகிறார்.

“இருப்பினும், இந்த நம்பிக்கை மரணத்திற்கு அருகில் சென்று உயிர்பிழைத்தவர்களின் அனுபவங்களுடன் ஒத்துப்போவதில்லை,” என்கிறார்.

அவரைப் பொறுத்தவரை, மாரடைப்பின் போது மூளை வேலை செய்வதற்கான எந்த வெளிப்படையான அறிகுறியும் இல்லை என்றாலும், அதை நிராகரிக்க முடியாது.

“ஒளியைப் பார்ப்பது, குரல்களைக் கேட்பது, உடலை விட்டு வெளியேறுவது, அல்லது நடுவானில் மிதப்பது போன்ற ஆழமான நகரும், தாக்கும் அனுபவங்களை ஒருவர் மனதில் கொண்டிருப்பது எப்படி?” இவை அனைத்தும் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதன் ஒரு பகுதியாகும்.

“இந்தச் செயல்பாடுகள் அனைத்தும் உடலுக்கு வெளியில் இருந்து தோன்றுபவை என்றும், இவை உடல் ரீதியானவை அல்ல என்றும் நினைப்பவர்கள் உள்ளனர், ஏனெனில் மருத்துவ வல்லுநர்கள் பலர் மூளை செயல்படவில்லை என்று நம்புகிறார்கள்,” என்கிறார்.

“ஆனால் நாங்கள் அதை நம்பவில்லை, 2013-இல், விலங்குகளை வைத்து நடத்திய முதல் ஆராய்ச்சியை நாங்கள் வெளியிட்ட போது, இந்த அகநிலை அனுபவங்கள் உடலுக்கு வெளியில் இருந்து வருகின்றன என்ற கருத்தை நிரூபிக்க முடியாது, அது சாத்தியமற்றது என்று நாங்கள் எழுதினோம்,” என்கிறார்.

இதன் காரணமாக, அவை மூளையில் தோன்றியவை என்று நம்பப்படுவது எதிர்மறையானதாகத் தோன்றினாலும், மூளை செயல்படுகிறது என்று உறுதியாக நம்பியதாகக் கூறுகிறார்.

“மரணத்திற்கு அருகாமையில் நிகழும் அனுபவங்கள் அனைத்தும் மரணத்துக்குப் பிறகு நடப்பவை அல்ல, ஆனால் இதயம் மற்றும் மூளையின் முக்கிய அறிகுறிகளை நிறுத்துவதற்கு முன்பு  மூளையின் செயல்பாட்டிலிருந்து உருவாகின்றன என்று நான் உறுதியாக நம்புகிறேன்,” என்கிறார்.

  • ஒரு புதிய புரிதல்

மனிதர்களைப் பற்றிய தனது ஆய்வு மிகவும் சிறியது என்றும், நாம் இறக்கும் போது மூளையில் என்ன நடக்கிறது என்பது குறித்து இன்னும் அதிக ஆராய்ச்சி தேவை என்றும் போர்ஜிகின் கருதுகிறார்.

இருப்பினும், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக இதில் கவனம் செலுத்திய பிறகு, ஒரு விஷயம் தெளிவாகி உள்ளது: “இதயம் நின்றுபோகும் போது, மூளையின் செயல்பாடுகள் மங்கும் (hypoactive) என்பதை விட அதிவேகமாக செயல்படும் (hyperactive) என்பதே சரி,” என்கிறார்.

“இதுபோன்ற நெருக்கடியான காலங்களில் மூளை எவ்வாறு செயல்படுகிறது என்பதைப் பற்றி நாம் மேலும் அறிய வேண்டும்,” என்கிறார். “உண்மையில், அவர் தனது ஆய்வில் கண்டறிந்தது மூளையின் உயிர்வாழும் செயல்முறையின் (survival mode) ஒரு பகுதி. அது ஆக்ஸிஜன் இல்லாத சூழல் உருவாகும்போது அதிகமாக செயல்படத் தொடங்குகிறது,” என்கிறார்.

ஆனால், மூளை தனக்கு ஆக்ஸிஜன் கிடைக்கவில்லை என்பதை உணரும்போது என்ன நடக்கும்?

“நாங்கள் அதைப் புரிந்து கொள்ள முயற்சிக்கிறோம்,  அதுபற்றி அதிக ஆராய்ச்சிகள் இன்னும் செய்யப்படவில்லை,” என்று அவர் பதிலளித்தார்.

உறக்க நிலையைப் பற்றி விளக்கிய அவர், “குறைந்த பட்சம் எலிகள் மற்றும் மனிதர்கள் உட்பட விலங்குகள், ஆக்ஸிஜன் பற்றாக்குறையைச் சமாளிக்க ஒரு எண்டோஜெனஸ் பொறிமுறையைக் (endogenous mechanism) கொண்டுள்ளன,” என்று தனது கோட்பாட்டை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

”இதயம் செயலிழக்கும் போது மூளை எதுவுமே செய்ய முடியாமல், அதுவும் செயலிழந்துவிடும் என்று இப்போது வரை நம்பப்படுகிறது. ஆனால், இது நமக்கு உறுதியாகத் தெரியாது,” என்று அவர் அழுத்தம் திருத்தமாகச் சொல்கிறார்.

உயிர் பிழைத்தல்

மூளை, தனது செயல்பாடுகளை எளிதில் நிறுத்தாது என்று போர்ஜிகின் நம்புகிறார். வழக்கமாக நெருக்கடிகளின் போது அது போராடுகிறது.

“ஆக்ஸிஜன் பற்றாக்குறையைத் தக்கவைக்க மூளை உறக்கநிலையை (Hibernation) ஏற்படுத்துகிறது. மூளைக்கு நெருக்கடிகளைச் சமாளிக்கும் திறன் உள்ளது என்று நம்புவதற்கான சிறந்த எடுத்துக்காட்டுகளில் தூக்கநிலையும் ஒன்று,” என்கிறார்.

“என் மூளை என்னிடம், பொருளாதார வீழ்ச்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டு, பெற்றோர்கள் வேலை இல்லாமல், வருமானம் இல்லாத நிலையில் இருக்கும் ஒரு குடும்பத்தைக் கற்பனை செய்து பார்க்கச் சொல்கிறது,” என்கிறார்.

“அவர்கள் என்ன நடவடிக்கைகள் எடுக்கிறார்கள்? அவர்கள் செலவைக் குறைத்து, தேவையில்லாத பொருட்களைப் பட்டியலில் இருந்து நீக்குகிறார்கள். அவர்கள் தங்களிடம் இருக்கும் பணத்தை அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள்,” என்கிறார்.

இந்தச் சூழலை மூளையோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், அந்த குடும்பத்துக்குப் பணத்தேவை எப்படியோ அப்படித்தான் மூளைக்கு ஆக்ஸிஜன் தேவை என்று அவர் நினைக்கிறார்.

“மூளையும் அதையே செய்கிறது என்று நான் நினைக்கிறேன். அதன் மிக முக்கியமான செயல்பாடு என்ன? நடனமாடவோ, பேசவோ, நகரவோ அனுமதிக்கும் ஒன்றல்ல. அந்த செயல்பாடுகள் அத்தியாவசியமானவை அல்ல. இன்றியமையாதது சுவாசிப்பது, இதயத்தை துடிக்க வைப்பது,” என்கிறார்.

அதனால்தான், ” ‘வரவிருக்கும் பிரச்னைக்கு நான் ஏதாவது செய்வது நல்லது’ என்று மூளை நினைக்கிறது. கூடுதலாக, இது உங்கள் உடலுக்குத் தேவையான ஆக்ஸிஜனின் அளவைக் குறைந்துப் பாதுகாக்க வேண்டிய சூழலிலும் உள்ளது,” என்கிறார்.

  • ஆய்வு செய்ய வேண்டிய கட்டாயம்

போர்ஜிகின் தனது ஆய்வில் கண்டது ஒரு மாபெரும் பனிப்பாறையின் நுனி மட்டுமே என்று கருதுகிறார். அதன் கீழே ஆய்வு செய்யப்பட வேன்டியவை ஏராளம் உள்ளன என்று நம்புகிறார்.

“தனது நிதி முன்னுரிமைகளை மறுவரையறை செய்ய வேண்டிய ஒரு குடும்பத்தின் உதாரணத்துடன் எனது கோட்பாட்டை நான் உங்களுக்கு விளக்கியபோது, மூளையும் அதையே செய்கிறது என்று நான் நம்புவதால் தான், நமக்குப் புரியாத ஹைபோக்ஸியாவைச் சமாளிப்பதற்கான உடல்சார்ந்த வழிமுறைகள் இருப்பதாக நான் நம்புகிறேன்,” என்கிறார்.

“இது மேற்பரப்பில் தெரியும் பெரிய பனிப்பாறைக்கு அடியில் உள்ள ஏதொ ஒன்றை பற்றியது,” என்கிறார்.

“மேற்பரப்பில், இந்த நம்பமுடியாத அகநிலை அனுபவத்தைக் எதிர்கொண்ட, இதயம் செயலிழக்கும் தருவாய்க்குச் சென்றுதிரும்பிய நபர்கள் உள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். மேலும், அந்த அனுபவம் மூளையின் அதீதச் செயல்பாட்டின் காரணமாக நிகழ்ந்தது என்பதை எங்கள் தரவு காட்டுகிறது,” என்கிறார்.

ஆனால், இறக்கும் தருவாயில் மூளை ஏன் இவ்வளவு தீவிரமான செயல்பாட்டைக் கொண்டுள்ளது?

“இறப்பைப் பற்றி, அந்த நிகழ்வைப் பற்றி மூளையை மையமாக வைத்து தெரிந்துக் கொள்ள அதிக முயற்சி செய்யவில்லை. நாம் அதைப் பற்றி ஆய்வு செய்ய வேண்டும், கண்டுபிடிக்க வேண்டும், புரிந்து கொள்ள வேண்டும். அது நடந்தால், கோடிக்கணக்கான மக்களின் மரணத்தை முன்கூட்டியே கண்டறியலாம்,” என்கிறார்.

பிபிசி தமிழ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *