Sports

உலக கிண்ண போட்டிகளில் இந்தியாவுக்கு சாதகமாக ஆடுகளம்?

ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் முடிவதற்கு இன்னும் 3 போட்டிகள் மட்டுமே இருப்பதால், உச்சக்கட்ட பரபரப்பை ரசிகர்கள் மத்தியில் கிளப்பியுள்ளது.

இந்திய அணி லீக் ஆட்டங்களில் தொடர்ந்து 9 போட்டிகளில் வென்று அசைக்க முடியாத அணியாக வலம் வருகிறது. 15ம்தேதி(நாளை) மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் முதல் அரையிறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது இந்திய அணி.

இந்திய அணியின் அபாரமான ஃபார்ம், தொடர் வெற்றிகள் ஆகியவை உலகக் கோப்பையை வெல்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாக கிரிக்கெட் விமர்சகர்கள் நம்புகிறார்கள். அதற்கேற்ப உள்நாட்டில் போட்டி நடப்பது, மைதானம், காலநிலை, உள்ளூர் ரசிகர்கள் ஆதரவு போன்றவை இந்திய அணிக்கு தார்மீக ரீதியாக பக்கபலமாக இருந்து வருகின்றன.

இந்திய அணியின் தொடர் வெற்றிகள் குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் ஹசன் ராஜா சந்தேகத்தை ஐசிசி, பிசிசிஐ மீதும் எழுப்பியிருந்தார். இந்திய அணிக்காக பிரத்யேகப் பந்துகளை ஐசிசி, பிசிசிஐ வழங்குகிறது என்று சந்தேகத்தை கிளப்பியிருந்தார்.

ஆனால், இந்த குற்றச்சாட்டுக்கு பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம் சரியான பதிலடி கொடுத்து, எவ்வாறு பந்துகளை தேர்ந்தெடுக்கிறார்கள் என்று விளக்கமும் அளித்தார். ஐசிசி நடத்தும் போட்டிகளில் பந்துகளை ஒரு குறிப்பிட்ட அணிக்கு மட்டும் பிரத்யேகமாகத் தயாரிக்க வாய்ப்பே இல்லை, ஒருபோதும் நடக்காது என்று கிரிக்கெட் விமர்சகர்கள், வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால், ஆடுகளத்தை ஒரு குறிப்பிட்ட அணிக்கு ஏற்றது போல் மாற்ற முடியுமா என்பது கேள்வியாக இருக்கிறது. ஆடுகளத்தை எவ்வாறு வடிவமைக்கிறார்கள், எத்தனை வகையான ஆடுகளங்கள் இருக்கிறது என்பது குறித்து கிரிக்கெட் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இதற்கு முன் நடந்த உலகக் கோப்பைத் தொடரைப் போன்று இல்லாமல் இந்த உலகக் கோப்பைத் தொடரில் பல போட்டிகளில் 400 ரன்களுக்கு அணிகள் குவித்து வருகின்றன. சில ஆடுகளங்கள் பேட்டர்களுக்கு சாதகமாகவும், பந்துவீச்சாளர்களுக்கு ஒத்துழைத்தும் இருக்கின்றன.

ஆடுகளம் வடிவமைப்பில் குறிப்பிட்ட அணிக்கு ஏற்றது போல் எப்படிப்பட்ட ஆடுகளத்தையும் வடிவமைக்க முடியுமா என்பது குறித்து கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

ஐசிசி அறிவுறுத்தலா?

உலகக் கோப்பைத் தொடங்குவதற்கு முன் இந்திய ஆடுகள வடிவமைப்பாளர்களுக்கு ஐசிசி பிட்ச் ஆலோசகர் ஆன்டி அட்கின்சன் ஆலோசனை தெரிவித்தாக ஆங்கில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.

அதில் “ 2023 உலகக் கோப்பைத் தொடருக்காக ஆடுகளங்களை “பேட்டர் பிரண்ட்லி” அதாவது பேட்டர்களுக்கு சாதகமாக வடிவமையுங்கள். அதேநேரம் ஆடுகளம் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் வகையில் புற்கள் இருக்கட்டும்.

உலகக் கோப்பை நடக்கும் நேரத்தில் வடக்கு, கிழக்கு, மேற்கு மாநிலங்களில் பனிப்பொழிவு இருக்கும். அந்தப் பனிப்பொழிவில் ஆடுகளம் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காகவே புற்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.

பனிப்பொழிவு இருந்தால் சுழற்பந்துவீச்சாளர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். சுழற்பந்துவீச்சாளர்களை மட்டும் நம்பி இருக்க வேண்டாம் என்பதற்காகவே புற்களோடு சேர்ந்த ஆடுகளத்தை அமையுங்கள், நடுநிலையான ஆடுகளத்தை அமையுங்கள்” எனக் கேட்டுக்கொண்டதாக செய்திகள் வெளியானது.

  • இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

2011ம் ஆண்டு உலகக் கோப்பையில் ஒரு அணியின் சராசரி ரன் குவிப்பு 249 ஆக இருந்ததுதான் குறைந்தபட்சமாகும். 2015ம்ஆண்டு உலகக் கோப்பையில் சராசரி ரன் குவிப்பு 275 ஆகவும், 2019ம் ஆண்டில் ஒரு அணியின் சராசரி ரன் குவிப்பு 276 ஆகவும் இருந்தது. இந்த சராசரியைவிட அதிகமாக இருக்குமாறும், ரசிகர்கள் அதிக அளவு வர வேண்டும் என்பதற்காகவே இந்த உலகக் கோப்பையில் பேட்டர்களுக்குச் சாதகமாக ஆடுகளம் வடிவமைக்க ஐசிசி ஆலோசனைத் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

ஐ.சி.சி. என்ன செய்கிறது?

உலகக் கோப்பை போன்ற சர்வதேச போட்டித் தொடர் நடக்கும் முன் ஆடுகளத்தை ஐசிசி சார்பில் ஒரு குழு பார்வையிட்டு பின்புதான் அந்த ஆடுகளம் போட்டிக்கு தயாராகும். அது டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டியாக இருந்தாலும் இதே நடைமுறைதான் இருக்கும்.

அது மட்டுமல்லாமல் போட்டித் தொடர் நடந்து முடிந்தபின் ஆடுகளம் குறித்து ஐசிசி மேட்ச் ரெப்ரி களத்தை மதிப்பிட்டு தரவரிசை அளிப்பார். அதில் ஆடுகளத்தின் சிறப்பு, குறைபாடுகள், செய்ய வேண்டிய திருத்தங்கள், எதிர்காலத்தில் எப்படி வடிவமைக்க வேண்டும் என்பதை குறிப்பிட்டு தரமதிப்பு வழங்குவார்.

ஒருவேளை ஆடுகளம் மோசமாக பராரிக்கப்பட்டு, தரமற்ற வகையில் இருந்தால், அது குறித்து தொடர்புடைய நாட்டின் கிரிக்கெட் வாரியத்திடம் கேள்வி எழுப்பப்பட்டு, ஐசிசியின் தர நிர்ணயத்துக்கும் குறைவாக ஆடுகளம் பராமரிக்கப்பட்டது, தயாரிக்கப்பட்டது என்று விளக்கம் கோரப்படும்.

  • இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒருவேளை ஆடுகளம் தரமற்றதாக இருந்து, விளையாடுவதற்கு தரமற்றதாக இருந்தால், மோசமான ஆடுகளம், விளையாடத் தகுதியற்றது என்று ஐசிசி சார்பில் அறிவிக்கப்படும்.

ஆடுகளத்தின் தரத்தை உறுதி செய்ய ஐசிசி சார்பில் 6 விதமான அளவுகோல்கள் வைக்கப்பட்டுள்ளன. “ வெரி குட், குட், ஆவரேஜ்(சராசரி), பிலோ ஆவரேஜ்(சராசரிக்கும் குறைவு), பூர்(மோசம்), அன்பிட்(தகுதியற்றது) என்று பிரிக்கப்படும்.

செயற்கை ஆடுகளங்கள்

இப்போதுள்ள நவீன தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ‘ஹைபிரிட் பிட்ச்சுகள்’ பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஆடுகளத்தை பயன்படுத்தும் முன் இரு அணிகளிடம் ஒப்புதல் பெறப்பட்டபின்புதான் பயன்படுத்தப்படும். இந்த ஹைபிரிட் பிட்சுகள் என்பது செயற்கை புற்கள்(ஃபைபர்) மூலம் தயாரிக்கப்பட்டவை.

ஆடுகளங்களின் வகைகள் பற்றி தெரியுமா?

கிரிக்கெட் விளையாட்டைப் பொறுத்தவரை அனைத்து நாடுகளிலும் ஒரே மாதிரியான ஆடுகளங்கள் பயன்படுத்தப்படுவதில்லை. ஒவ்வொரு நாட்டின் மண்ணுக்கு ஏற்ற ஆடுகளங்கள் வடிவமைக்கப்படுகின்றன.

‘கிரீன் டாப்’, ‘க்ரீன் பிட்ச்’, ‘க்ரீன் சீமர்’, ‘க்ளே பிட்ச்’, ‘டஸ்டி பிட்ச்’, ‘ஸ்டிக்கி விக்கெட்’ என ஆடுகளங்களின் வகைகள் பிரிக்கப்படுகின்றன.

இதில் அதிகமான புற்கள் வளர்ந்த அல்லது ஈரப்பதம் மிகுந்த ஆடுகளங்கள் க்ரீன் டாப், க்ரீன் பிட்ச், அல்லது க்ரீன் சீமர் என்று பிரிக்கபப்டும். இந்த வகை ஆடுகளங்கள் பேட்டர்களைவிட பந்துவீச்சாளர்களுக்கு அதிகம் ஒத்துழைக்கும். புற்கள் ஆடுகளத்தில் இருப்பதால், பந்தை நன்றாக ஸ்விங்செய்ய முடியும். இதுபோன்ற ஆடுகளங்கள் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்தில் அதிகம் இருக்கும், கிளப் போட்டிகள், கவுன்டி போட்டிகளில் அதிகம் பயன்படுத்தப்படும்.

ஸ்டிக்கி விக்கெட்(விக்கெட் என்றால் ஆடுகளம்) என்பது சற்று ஈரப்பதத்துடன், சிறிது நேரத்தில் காயும் விதத்தில் இருக்கும். சூரிய ஒளிஆடுகளத்தில் பட்டதும் ஆடுகளத்தின் தன்மை மாறி, சுழற்பந்துவீச்சாளர்களுக்கும், ஸ்லோ பவுலர்களுக்கும் ஒத்துழைக்கும்.

‘டஸ்டி பிட்ச்’ என்பது, ஈரப்பதம் இல்லாமல் வறண்ட தன்மையுடன் இருக்கும், இந்த வகை ஆடுகளங்களில் சுழற்பந்துவீச்சு நன்றாக எடுபடும். இந்தியாவில் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் பெரும்பாலும் இதுபோன்ற ஆடுகளங்கள்தான் பயன்படுத்தப்படும். முதலிரு நாட்கள் பேட்டர்களுக்கும், அடுத்தடுத்த நாட்களில் சுழற்பந்துவீச்சாளர்கள் கை ஒங்கியிருக்குமாறு வடிவமைக்கப்படும்.

ஆனால், நவீன கால கிரிக்கெட்டில் ஆடுகளங்கள் மழை மற்றும் பனிப்பொழிவிலிருந்து பாதுகாக்கப்படுகிறது. இதுபோன்ற ஸ்டிக்கி பிட்சுகள் பெரும்பாலும் முதல்தரக் கிரிக்கெட்டில்கூட வருவதில்லை.

  • இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு போட்டியின் போது பேட்டிங் செய்யும் அணியின் கேப்டன் கேட்டுக்கொண்டால், ஆடுகளத்தில் ரோலர் பயன்படுத்தி அழுத்தம் கொடுக்க முடியும். ஒவ்வொரு இன்னிங்ஸ் தொடங்குவதற்கு முன்பும் இந்த ரோலர் பயன்பாடு என்பது 7 நிமிடங்களுக்குள் மட்டுமே இருக்க வேண்டும். டாஸ் முடிவு அறிந்தபின் போட்டி தொடங்க தாமதம் ஆனாலும், பேட்டிங் செய்யும் அணியின் கேப்டன் கேட்டுக்கொண்டால் ஆடுகளத்தில் 7 நிமிடங்களுக்கு மிகாமல் ரோலர் மூலம் அழுத்தம் தரலாம். ஆனால் போட்டி தொடங்கிவிட்டால், ரோலர் மூலம் ஆடுகளத்தில் அழுத்தம் தர முடியாது.

ஒரு ரோலருக்கு மேல் இருக்கும்பட்சத்தில் இரு ரோலர்களையும் பயன்படுத்தி ஆடுகளத்தில் அழுத்தம் கொடுக்கலாமா என்பதை பேட்டிங் செய்யும் கேப்டன் முடிவு செய்வார்.

ஆடுகளத்தில் ரோலர் பயன்படுத்துவது என்பது போட்டியின் முடிவில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியது. ஆடுகளத்தில் ரோலர் பயன்படுத்துவது சில நேரங்களில் பேட்டிங் செய்யும் அணிக்கும், சில நேரங்களில் பந்துவீசும் அணிக்கும் பலன் அளிக்கலாம்.

இதில் அதிக அழுத்தம் தரும் ரோலர்கள்(ஹெவி ரோலர்) பயன்படுத்தும் முறை முன்பு இருந்து, ஆனால் அது தடை செய்யப்பட்டுவிட்டது. இந்த ஹெவி ரோலர்கள் மூலம் ஆடுகளத்தில் அழுத்தம் கொடுத்தால் தட்டையாக மாறிவிடும், இதனால் டெஸ்ட் போட்டிகளில் முடிவு கிடைக்காமல் டிரா ஆவதற்கு வாய்ப்பு அதிகம், பேட்டர்களுக்கு சாதகமாக மாறிவிடும்.

இந்தியா vs நியூசிலாந்து

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் உள்ள ஆடுகளங்களும் ஒவ்வொரு விதமான தன்மையை வெளிப்படுத்துபவை. சென்னை, லக்னோ ஆடுகளங்களில் களிமண் பயன்படுத்தப்பட்டுள்ளது. கொல்கத்தா, மும்பையில் ஆடுகளங்கள் வேறு மாதிரியாக இருக்கும். அந்தந்த மாநிலங்களில் இருக்கும் இயற்கையான மண்ணுக்கு ஏற்ப ஆடுகளம் எதிர்வினையாற்றும்.

ஆடுகளத்தின் தன்மையை வைத்துதான் ஓர் அணியில் ப்ளேயிங் லெவன் வீரர்களையே தேர்ந்தெடுக்க முடியும். கடும் வெப்பமாக, ஆடுகளம் காய்ந்த தன்மையுடன், வறண்டதாக இருந்தால் பேட்டர்களுக்கு சாதகமாக இருக்கும், சுழற்பந்துவீச்சாளர்களை அதிகமாகச் சேர்க்கலாம்.

இதேபோல் ஒவ்வொரு மண்டலத்தில் இருக்கும் ஆடுகளங்களின் தன்மைக்கு ஏற்ப பேட்டர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் ஆதிக்கம் மேலோங்கி இருக்கும். ஆடுகளத்தின் தன்மை மாறுவதற்கு ஏற்ப போட்டியின் முடிவுகளும் மாறக்கூடும்.

ஒரு ஆடுகளம் மோசமான ஆடுகளம் என்று ஐசிசி முத்திரை குத்துவதற்கு முக்கிய அளவு கோலை வைத்துள்ளது. அதில் முக்கியமானது அந்த ஆடுகளம் பந்துவீச்சாளர்கள், பேட்டர்களுக்கு சமமான போட்டியை உருவாக்குவதாக இருக்க வேண்டும். அவ்வாறு பந்துவீச்சாளர்கள், பேட்டர்களுக்கு சமமான போட்டியை உருவாக்கவில்லை என்றால் அது மோசமான ஆடுகளமாகும்.

அதாவது ஆடுகளம் பேட்டர்களுக்கு அதிகளவு ஒத்துழைத்து, பந்துவீச்சாளர்கள் பந்துவீச்சு எடுபடாமல், விக்கெட் வீழ்த்த முடியாமல் சிரமப்பட்டால் அல்லது பந்துவீச்சாளர்களுக்கு அதிகமாக ஒத்துழைத்து, பேட்டர்கள் ரன்கள் சேர்க்க முடியாத வகையில் கடினமாக இருந்தால், அந்த வகை ஆடுகளம் மோசமானது என்று ஐசிசி வரையரை செய்துள்ளது.

அதுபோல, ஒரு ஆடுகளம் சுழற்பந்துவீச்சுக்கு அதிகமாக ஒத்துழைத்தாலும், சுழற்பந்துவீச்சை ஆடமுடியாத வகையில் பேட்டர்களுக்கு கடினமாக இருந்தாலும் அந்த வகை ஆடுகளம் மோசமானது என்று ஐசிசி அறிவித்துள்ளது.

  • ஆடுகளத்தை சார்பாக வடிவமைக்கலாமா?

ஆடுகளத்தை ஒரு அணிக்கு சார்பாக மாற்ற முடியுமா என்பது குறித்து பிசிசிஐ ஆடுகள மேற்பார்வையாளர் சமந்தர் சிங் சவுகான் ஆங்கில நாளேட்டுக்கு அளித்த பேட்டியில் “ என்ன மாதிரியான போட்டி நடக்கப்போகிறது அதாவது டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டியைப் பொறுத்து ஆடுகளம் தயார் செய்யலாம். டி20 போட்டிகளுக்கு ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமாக வடிவமைப்போம், மற்ற போட்டிகளுக்கு பிசிசிஐ அறிவுரைப்படி செயல்படுவோம்.

ஒரு மேற்பார்வையாளர் தங்களுடைய அணியின் பலம் என்னவென்று தெரிந்திருத்தல் அவசியம். ஆஸ்திரேலியாவில் ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும். அங்கு ஆடுகளத்தில் 8 முதல்10 செ.மீ வரை புற்கள் வளர்ந்திருக்கும். இந்தியாவில் சுழற்பந்துவீச்சுக்கு ஏற்றார்போல் ஆடுகளம் மாற்றப்படும்.

ஆடுகளம் அமைக்க பயன்படுத்தப்படும் கறுப்பு, சிவப்பு மண் தாக்கத்தை ஏற்படுத்தும். களி மண், மணல் எவ்வாறு கலக்கிறோம் என்பதைப் பொறுத்து ஆடுகளம் தன்மை மாறுபடும். அதிகளவு களி மண், குறைவாக மண் சேர்க்கப்பட்டிருந்தால் பந்து நன்றாக பவுன்ஸ்ஆகும், ஆஸ்திரேலியாவில் இதுபோன்ற ஆடுகளங்கள் அதிகம். ஆனால், சிவப்பு நிற மண்ணில் அதிக மணல் சேர்க்கப்படும்போது ஆடுகளம் விரைவாக உலர்ந்து, தூசி எழும்பும். அப்போது வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காமல், சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும்.” என்று தெரிவித்தார்.

ஆடுகளத்தை ஒரு சார்பாக வடிவமைக்கலாமா என்பது குறித்து விளையாட்டுத்துறையின் மூத்த பத்திரிகையாளர் ஆர் முத்துக்குமார் பிபிசி செய்திகளுக்கு அளித்த பேட்டியில் “ ஆடுகளத்தை ஒரு அணிக்கு சார்பாக வடிவமைக்க முடியும். உதாரணமாக கடந்த 1997-98 ஆஸ்திரேலிய டெஸ்ட் சீரிஸில் சென்னையில் நடந்த ஆட்டத்தில் இந்திய அணியில் சச்சின் டெண்டுல்கர் 155 ரன்கள் சேர்த்து அணியை வெல்ல வைத்தார்.

அந்த ஆடுகளம் ஆஸ்திரேலியாவின் ஷேன் வார்னுக்கு சாதகமாக இருக்கக்கூடாது என்பதற்காக அவர் பந்துவீசும் அரவுண்ட் ஸ்டிக் பகுதியிலிருந்து பேட்டர்களின் இடது கால்பகுதியில் பந்து பிட்ச் ஆகும் இடத்தை ஈரப்பதத்துடன் பார்த்துக் கொண்டார்கள். ஈரப்பதம் அதிகமாக இருந்தால், பந்து டர்ன் ஆகாது, சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்காது என்பதால் இவ்வாறு ஆடுகளம் மாற்றப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.

சமீபத்தில் 2021ம் ஆண்டில் இங்கிலாந்து –இந்தியா இடையிலான டெஸ்ட் தொடரில்கூட அகமதாபாத்தில் நடந்த டெஸ்ட் போட்டிகள் நடந்த ஆடுகளங்கள் அனைத்தும் இந்திய அணிக்குச் சார்பாக சுழற்பந்துவீச்சுக்கு மட்டும் ஒத்துழைக்கும் வகையில் அமைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அக்ஸர் படேல், அஸ்வின் மட்டுமே விக்கெட்டுகளை அள்ளினர். ஆக ஆடுகளத்தை ஒரு அணிக்கு சார்பாக மாற்ற முடியும்” எனத் தெரிவித்தார்.

இந்தியாவில் உள்ள ஆடுகளங்கள் தன்மை குறித்து முத்துக்குமார் பேசுகையில் “ இந்தியாவில் ஒவ்வொரு மைதானத்துக்கும் ஒரு தன்மை இருக்கிறது. களிமண் ஆடுகளம், செம்மண் ஆடுகளம் என வகைகள் இருக்கிறது. ஆடுகளங்கள், அந்தந்த மண்ணின் தன்மைக்கு ஏற்றார்போல், ஒரு அணியின் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக, பேட்டிங்கிற்கு சாதகமாக, வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாகக்கூட மாற்றலாம். ஆடுகளத்தை வறண்ட தன்மையுடன் பராமரித்தால் சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும், ஆடுகளத்தை ஈரப்பதத்துடன் வைத்திருந்தால் பந்து மெதுவாக வரும், புற்கள் வைத்திருந்தால் வேகப்பந்துவீச்சுக்கும், ஸ்விங் செய்யவும் ஏதுவாக இருக்கும்.

ஆகவே ஒரு அணியின் வலிமையைப் பொறுத்து ஆடுகளத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். ஐசிசி சார்பில் ஆடுகள மேற்பார்வையாளர்கள் வந்து ஆடுகளத்தை பரிசோதித்தால் ஆடுகளத்தை நடுநிலையுடன் பராமரிக்கலாம். ஆனால், உலகக் கோப்பையில் இது நடக்கிறதா எனத் தெரியவில்லை”எனத் தெரிவித்தார்.

  • இந்திய அணிக்கு சாதகமாக ஆடுகளங்கள் மாற்ற முடியுமா என்பது குறித்து முத்துக்குமார் பேசுகையில் “ ஒரு குறிப்பிட்ட அணிக்குச் சாதகமாக ஆடுகளத்தை மாற்றி அமைக்க முடியும். ஆனால், உலகக் கோப்பையில் இந்திய அணி பெற்ற வெற்றியை ஆடுகளத்தின் சார்போடு தொடர்புபடுத்தக்கூடாது.

ஆடுகளத்தை இந்திய அணிக்குச் சாதகமாக உருவாக்கப்படுகிறது என்ற வாதத்தை வைத்து இந்திய அணியின் ஒட்டுமொத்த திறமையை குறைத்து மதிப்பிடக் கூடாது. இப்போதுள்ள இந்திய அணி வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான ஆஸ்திரேலிய, நியூசிலாந்து ஆடுகளங்களில் கூட சிறப்பாக ஆடக்கூடியது. எந்த அணியையும் வீழ்த்தக்கூடிய வலிமையுடையது. ஆதலால், ஆடுகளத்தின் தன்மையை இந்திய அணியின் வெற்றியோடு நான் தொடர்புபடுத்தவில்லை.

ஆடுகளத்தை ஒரு அணிக்குச் சாதகமாக உருவாக்கலாம் என்ற வாதம் வேறு, இந்திய அணி தற்போது 9 வெற்றிகளுடன் அரையிறுதிக்கு சென்றுள்ள வாதம் வேறு” எனத் தெரிவித்தார்

 பிபிசி தமிழ்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading