Local

போர் நீடித்தால் இலங்கைப் பொருளாதாரமும் பெரிதும் பாதிக்கப்படும்

 

இஸ்ரேல்-பாலஸ்தீன பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு மனித குலத்திற்கு ஏற்ற தத்துவ ஞானம் சார்ந்த அணுகு முறை தேவை என்று தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

இஸ்ரேலில் விவசாயத்தறையில் இலங்கையர்களுக்கு புதிதாக ஆயிரம் தொழில்வாய்ப்புகளுக்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. தற்போது இங்கு நிலவும் பாதுகாப்பு நிலையை கருத்திற்கொண்டு இந்த தொழில் வாய்ப்புகள் தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மனுஷநாணயக்கார குறிப்பிட்டார்.

நேற்று பாராளுமன்றத்தில் இடம்பெற்ற இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினைக்கு அமைதியான தீர்வு காண ஐக்கிய நாடுகள் சபை உடனடியாக தலையிடுமாறு கோரும் சபை ஒத்திவைப்பு விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

உலகை வழிநடத்தும் சர்வதேச அமைப்புகளான ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல நிறுவனங்கள், புத்திஜீவிகள் மற்றும் மதங்கள் இந்த இஸ்ரேல் – பலஸ்தீன பிரச்சினையை தீர்க்க முடியவில்லை. இது ஒருபுறம் சமூக-கலாச்சார நெருக்கடியாகவும் ,மறுபுறம் அரசியல்-பொருளாதார நெருக்கடியாகவும் இன்று மாறியுள்ளது.

நம்மில் சிலர் போர் வந்தால் மகிழ்ச்சி அடைகின்றனர். ஆனால் இதற்குள் என்ன நடக்கிறது? இஸ்ரேலின் வங்கிகள் உலகின் தங்க சந்தையில் ஏகபோக உரிமையை கொண்டுள்ளது. மேலும் தங்கத்தின் விலை எதிர்பார்க்காதவகையில் அதிகரித்துள்ளது.

இது உலகப் பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த விடயத்தில் அமெரிக்கா தலையிட்டால் என்ன நடக்கும்? டொலரின் மதிப்பு மேலும் அதிகரிக்கும். இதில் ஈரான் ஈடுபட்டால் என்ன நடக்கும என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

மத்திய கிழக்கு நாடுகள் இந்த பிரச்சினையில் தலையிட்டால் எமது நாட்டின் நிலை என்ன?

எமது நாட்டின் தேயிலைக்கு இங்கு பாரிய சந்தை வாய்ப்பு உண்டு. இதனை நாம் இழக்க நேரிடும். நேரடியாக காணக்கூடிய இம்மாதிரியான விடயங்களுடன் பல மறைமுகமான சிக்கல்களையும் நாம் சந்திக்கும் நிலை உண்டு என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

நாம் இவ்வேளையில் மனித நேயத்தைத்தான் வலியுறுத்த வேண்டும். மதம், ஜாதி, அரசியல் தத்துவம் எதுவாக இருந்தாலும் மனித நேயத்தின் பெயரால் அவர்களை சகோதர சகோதரிகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.

வேறுபாடுகளுடன் பன்முகத்தன்மையைப் பாராட்டவும் மதிக்கவும் நாம் பழகிக் கொள்ள வேண்டும். அண்மைக்கால வரலாற்றில், இலங்கையில் ஏற்பட்ட சில நெருக்கடிகளையும், உலகில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகளையும் இணைக்க சில தரப்பினர் முயற்சிக்கின்றனர்.

இந்தப் போர் நீடித்தால் உலகப் பொருளாதாரம் மட்டுமல்லாது இலங்கைப் பொருளாதாரமும் பெரிதும் பாதிக்கப்படும். மேலும், எங்களின் வருமானங்கள் மட்டுப்படுத்தப்பட்டதால், எங்களுக்கு தேவையான எரிபொருள் மற்றும் பல பொருட்களுக்காக வேறு வழியின்றி நெருக்கடியை எதிர்கொள்ளும் நிலை ஏற்படும். நமது நாட்டின் பொருளாதாரத்திற்கு, இஸ்ரேலை போன்றே, மத்திய கிழக்கு பிராந்திய நாடுகளின் பங்களிப்பும் முக்கியமானது.

இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் பணிபுரியும் இலங்கை தொழிலாளர்கள் பொருளாதாரத்திற்கு பெரும் பங்களிப்பை வழங்குகின்றனர்.

அரசாங்கம் என்ற ரீதியில் இந்த மக்களின் உயிர் மற்றும் பாதுகாப்பிற்கான பாரிய பொறுப்பு எமக்கு உண்டு. இந்தப் பிராந்தியத்தில் உள்ள எந்தவொரு ஊழியரும் நாடு திரும்ப விரும்பினால், அதற்குத் தேவையான அனைத்து வசதிகளையும் செய்துக்கொடுக்க சமகால அரசாங்கம் என்ற ரீதியில் நாம் தயாராகவுள்ளளோம் என்று அமைச்சர் மனுஷநாணயக்கார குறிப்பிட்டார்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading