World

பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களுக்கு தடை விதித்த பிரான்ஸ்

பலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்து நடத்தப்படும் அனைத்து ஆர்ப்பாட்டங்களுக்கும் பிரான்ஸ் தடை விதித்துள்ளது.

இதன்படி, விதிகளை மீறும் வெளிநாட்டவர்கள் நாடு கடத்தப்படுவார்கள் என பிரான்ஸ் உள்விவகார அமைச்சர் Gérald Darmanin தெரிவித்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் ஆயுதக்குழு இடையிலான போரினால் எழுந்த யூத எதிர்ப்பு அதிகரிப்பு காரணமாக ஐரோப்பிய அரசாங்கங்கள் அச்சமடைந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, தடையை மீறி பிரான்ஸின் பல்வேறு பகுதிகளில் பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, ஆர்ப்பாட்டக்காரர்கள் ”இஸ்ரேல் கொலைகாரன்” மற்றும் ”பலஸ்தீனம் வெல்லும்” போன்ற சுலோகங்கள் அடங்கிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்ததாக குறிப்பிடப்படுகிறது.

இந்த நிலையிலே, பொது ஒழுங்கை சீர்குலைக்கும் வகையில் செயற்படுவதாகக் கூறி பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டங்களுக்கு பிரான்ஸ் அரசாங்கம் தடைவிதித்துள்ளது.

இருப்பினும், பலஸ்தீன ஆதரவு குழுக்கள், கருத்து சுதந்திரத்தை அச்சுறுத்தும் அபாயம் காணப்படுவதாக கூறியுள்ளதுடன், பலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக தொடர்ந்தும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன.

இந்த நிலையில் பிரான்ஸ் மக்களை ஒற்றுமையாக இருக்குமாறு அந்த நாட்டு ஜனாதிபதி Emmanuel Macron அறிவித்துள்ளார்.

அத்துடன், சர்வதேச பிளவுகளுடன் தேசிய பிளவுகளை இணைக்க வேண்டாமெனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே, இஸ்ரேல் மீது ஹமாஸ் குழுவினர் கடந்த சனிக்கிழமை (07) நடத்திய தாக்குதலில் சுமார் 10 பிரான்ஸ் பிரஜைகள் கொல்லப்பட்டமை உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அத்துடன், ஹமாஸ் குழுவினால் பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்ட 17 பிரான்ஸ் பிரஜைகள் காணாமல் போயுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு காணாமல் போனவர்களில் நான்கு சிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பயங்கரவாதிகளை ஒழிப்பதன் மூலம் தன்னைத் தற்காத்துக் கொள்வதற்கு இஸ்ரேலுக்கு உரிமை உண்டு எனவும், பொதுமக்களின் உயிர்களை பாதுகாக்க வேண்டியது ஜனநாயக நாடுகளின் கடமை எனவும் பிரான்ஸ் ஜனாதிபதி Emmanuel Macron சுட்டிக்காட்டியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading