World

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 198 பேர் பலி

காசா மீதான இஸ்ரேலிய தாக்குதல்களில் 198 பேர் கொல்லப்பட்டதுடன், 1,600 இற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர் என்று உள்ளூர் பாலஸ்தீனிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

பாலஸ்தீன போராளிகளின் முன்னோடியில்லாத தாக்குதலின் ஒரு பகுதியாக இருந்த “ஏவுகணை தாக்குதலுக்கு” பதிலடியாக காசா பகுதியில் இலக்குகளைத் தாக்கத் தொடங்கியதாக இஸ்ரேல் முன்னதாக அறிவித்திருந்தது.

இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காஸா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது ஏவுகணை ஏவப்பட்டதை அடுத்து, பாலஸ்தீன போராளிக் குழுவான ஹமாஸுடன் இஸ்ரேல் ‘போரில் ஈடுபட்டுள்ளது’ என அறிவித்தார்.

இஸ்ரேல் – பாலஸ்தீனப் போராட்ட வரலாற்றில் முதன்முறையாக பாலஸ்தீன போராளிகள் இஸ்ரேல் மீது பாரிய வான், கடல் மற்றும் தரைவழித் தாக்குதலை நடத்தினர்.

“நாங்கள் போரில் ஈடுபட்டுள்ளோம்” என்று இஸ்ரேலிய தலைவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இஸ்ரேல் மற்றும் அதன் மக்கள் மீது ஹமாஸ் “கொலையான ஆச்சரியத் தாக்குதலை” நடத்தியதாக அவர் கூறியிருந்தார்.

இன்று காலை நடந்த தாக்குதலில் குறைந்தது 42 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டதாக இஸ்ரேலிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த 740 இஸ்ரேலியர்கள் வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேசமயம், காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய பதிலடித் தாக்குதலில் 198 பேர் கொல்லப்பட்டதாகவும், 1,610 பேர் காயமடைந்ததாகவும் காசா சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேல் மீது சரமாரியாக ஏவுகனை வீசப்பட்டதைத் தொடர்ந்து, பாராகிளைடர்களைப் பயன்படுத்தி தரை, கடல் மற்றும் வான் வழியாக இஸ்ரேலுக்குள் நுழைந்த காசா போராளிகளை எதிர்த்துப் போராடுவதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.

ஹமாஸ் போராளிகள் தெருக்களில் திருடப்பட்ட இஸ்ரேலிய இராணுவ வாகனங்களை அணிவகுத்துச் செல்லும் காணொளிகளால் சமூக ஊடகங்கள் நிரம்பியுள்ளன.

ஊடுருவல்காரர்களுடன் தொடர்ந்து போரிட்டு வருவதால், உயிரிழப்புகள் அல்லது கடத்தல்கள் பற்றிய விவரங்களை தெரிவிக்க இராணுவம் மறுத்துவிட்டது.

“இது பாராகிளைடர்கள் மூலமாகவும், கடல் வழியாகவும், தரை வழியாகவும் நடந்த ஒருங்கிணைந்த தரைவழித் தாக்குதல்” என்று இராணுவ செய்தித் தொடர்பாளர் ரிச்சர்ட் ஹெக்ட் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

இன்று நடந்த தாக்குதலுக்குப் பிறகு பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேலியர்களுக்கும் இடையிலான மோதலை குறைக்குமாறு சவூதி அரேபியா அழைப்பு விடுத்துள்ளது.

பிரித்தானிய வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ், காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் மீது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களை சனிக்கிழமை கண்டித்துள்ளார்.

“இஸ்ரேலிய குடிமக்கள் மீது ஹமாஸ் நடத்திய கொடூரமான தாக்குதல்களை பிரித்தானியா சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறது. தன்னை தற்காத்துக் கொள்ளும் இஸ்ரேலின் உரிமையை பிரித்தானியா எப்போதும் ஆதரிக்கும்” என்று அவர் சமூக ஊடகங்களில் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த தாக்குதல்களால் தான் அதிர்ச்சி அடைந்துள்ளேன் என பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.

“இஸ்ரேலுக்கு தன்னைத்தானே தற்காத்துக்கொள்ள முழு உரிமை உண்டு. நாங்கள் இஸ்ரேலிய அதிகாரிகளுடன் தொடர்பில் இருக்கிறோம், இஸ்ரேலில் உள்ள பிரித்தானிய பிரஜைகள் பயண ஆலோசனையைப் பின்பற்ற வேண்டும்” என்று அவர் X தளத்தில் கூறியுள்ளார்.

“இஸ்ரேலுக்கு எதிரான காசாவில் இருந்து நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களை உறுதியாகக் கண்டிக்கிறது” என்று ஜேர்மனி அறிவித்துள்ளது.

காசாவில் இருந்து சரமாரியாக ஏவுகனைகள் வீசப்பட்டதையடுத்து, உக்ரைன் சனிக்கிழமை இஸ்ரேலுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தியது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading