World

உலகின் முதல் கார்பன் நெகடிவ் எனும் சாதனையைப் படைத்த பூட்டான்!

உலகின் முதல் கார்பன் நெகட்டிவ் நாடு: உலகுக்கு வழிகாட்டும் பூடான்
உலக நாடுகள் அனைத்தும் பொருளாதார ஏற்றமே முக்கியம் என்று ஓடிக்கொண்டு இருக்கின்றன. இந்தப் போக்குக்கு பூடான் மட்டும் விதிவிலக்கு. கடந்த 50 ஆண்டுகளாக பூடான் அரசாங்கம், மக்களின் மகிழ்ச்சியும் சுற்றுச்சூழல் பாதுகாப்புமே முக்கியம் எனச் செயலாற்றிவருகிறது.

பூடான் அரசு மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) அளவிடுவதற்குப் பதிலாக, மொத்தத் தேசிய மகிழ்ச்சியில் (GNH) கவனம் செலுத்தியது; சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்துப் பல முன்னெடுப்புகளையும் தொடர்சியாக செயல்படுத்தியது. இன்று உலகின் முதல் ‘கார்பன் நெகட்டிவ் நாடு’ எனும் சாதனையைப் படைத்து, உலகுக்கே வழிகாட்டியாக பூடான் மாறியிருக்கிறது.

கார்பன் நெகட்டிவ்

‘கார்பன் நெகட்டிவ்’ நாடு என்றால், அந்த நாடு தான் உற்பத்தி செய்வதை விட அதிகமாகக் கரியமில வாயுவை உறிஞ்சுகிறது என்று அர்த்தம்.

2017இன் தரவுகளின்படி பூடானில் உமிழப்படும் கரியமில வாயுவின் அளவு சுமார் 22 லட்சம் டன். ஆனால், பூடான் நாட்டின் அடர்ந்த காடுகள் இதனை விட மூன்று மடங்கு கூடுதல் கரியமில வாயுவை உறிஞ்சும் திறனைக் கொண்டிருக்கின்றன.

‘கார்பன் நெகட்டிவ்’ நாடு என அது இன்று அறியப்பட்டாலும், தண்ணீர் பிரச்சனை, வறுமை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளைக் கடந்தே தற்போது இந்தச் சாதனையை பூடான் படைத்துள்ளது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

பூடானின் அமைப்பு

இந்தியாவிற்கும், சீனாவிற்கும் இடையே, கிழக்கு இமயமலையில் அமைந்து இருக்கும் ஒரு சிறிய நாடு இது. இதன் மக்கள்தொகை சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம்.

உலகின் பசுமையான நாடெனக் கருதப்படும் பூடானின் நிலப்பரப்பு 47,000 சதுர கி.மீ; அதாவது, தமிழ்நாட்டின் நிலப்பரப்பில் சரியாக மூன்றில் ஒரு பங்கு.

பூடானின் நிலப்பரப்பில் சுமார் 70% அடர்ந்த காடுகள். பூடானில் சமவெளி எதுவும் கிடையாது. மலைகளும், பள்ளத்தாக்குகளும், அதில் அடர்த்தியான காடுகளும் நிறைந்த நாடு அது.

நான்குபுறமும் நிலத்தால் சூழப்பட்டு இருக்கும் பூடான், தனது எல்லைகளை வடக்கில் சீனாவுடனும், தெற்கு, கிழக்கு, மேற்கில் இந்தியாவுடனும் பகிர்ந்து கொள்கிறது.

கரியமில வாயுவை அதிகம் உமிழும் நாடுகள்

உலகின் பெரும்பாலான நாடுகள் தாம் உறிஞ்சக்கூடியதை விட அதிகமான அளவில் கரியமில வாயுவை வெளியிடுகின்றன. 2020இன் மதிப்பீட்டின்படி, அதிக அளவில் கரியமில வாயுவை அதிகமாக வெளியிடும் நாடுகளின் பட்டியலில் சீனா (உலகளாவிய உமிழ்வுகளில் 31%) முதலிடத்தில் உள்ளது. அதற்கு அடுத்தபடியாக, அமெரிக்கா (14%), இந்தியா (7%), ரஷ்யா (5%), ஜப்பான் (3%) ஆகிய நாடுகள் உள்ளன.

பூடான் எப்படிச் சாதித்தது?

பூடானின் அரசியலமைப்பு அதன் நிலப்பரப்பில் குறைந்தது 60 சதவீதம் காடுகளால் நிறைந்திருக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறது. பூடானின் நிலப்பரப்பில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகள் பாதுகாக்கப்பட்ட தேசிய காடுகள், இயற்கை இருப்புக்கள், காட்டுயிர் பாதுகாப்பு பகுதிகளாக உள்ளன.

பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள், காடுகளைப் பாதுகாக்கவும், வேட்டையாடுதலைத் தடுக்கவும் உதவுகின்றனர். முக்கியமாக, பூடான் அரசின் ‘தூய்மையான பூடான்’ அல்லது ‘பசுமை பூடான்’ போன்ற தேசிய வளப் பாதுகாப்பு திட்டங்கள் மிகுந்த வீரியத்துடன் செயல்படுத்தப்படுகின்றன.

தற்போது, உலக அளவில் தண்ணீர் பிரச்சனை, உணவு பிரச்சனை, காற்று மாசுபாடு, தண்ணீர் மாசுபாடு உள்ளிட்ட பிரச்சனைகளை எதிர்கொள்ளாத நாடாக பூடான் உள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading