FeaturesLocal

மிஸ்வாக் மர குச்சிகளை ‘சொர்க்கத்தின் கிளைகள்’ என ஏன் இஸ்லாம் கொண்டாடுகிறது?

டாக்டர் சசித்ரா தாமோதரன்

ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எகிப்திய பாபிலோனிய, கிரேக்க நாகரிகங்களில் மட்டும் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்ட இந்த மிஸ்வாக் குச்சிகளை, 1986-ம் ஆண்டு முதல் பல் சுகாதாரத்திற்கென்று சிறப்புப் பரிந்துரை செய்து, உலகெங்கும் இதன் பெருமையை பரவச் செய்துள்ளது உலக சுகாதார அமைப்பு.

“சற்று உற்றுப் பாருங்கள்..!”

டூத் பிரஷ் கொண்டு பல் துலக்குகிறோமே, இந்த டூத் பிரஷ் முன்னெல்லாம் மரத்தில் காய்த்தது என்றால் நம்பமுடிகிறதா?
ஆம்… Tooth brush tree என்ற பெயரிலேயே ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அரேபியாவின் மிஸ்வாக் மரங்களின் கிளைகள் மற்றும் அதன் குச்சிகளைத் தான் ‘உலகின் முதல் டூத் பிரஷ்கள்’ என்கிறார்கள்.

“ஆலும் வேலும் பல்லுக்குறுதி” என்பது எப்படி நமது பாரம்பரியமோ, அப்படி Salvadora persica எனும் தாவரப்பெயர் கொண்ட மிஸ்வாக் அரேபியர்களின் பாரம்பரியமாகும்.

மனதை சுத்தப்படுத்தி, இறைவனைத் தொழுவதற்கு முன்பாக மிஸ்வாக் கொண்டு வாயையும் சுத்தப்படுத்திக் கொள்வது இறைவனுக்கு மகிழ்ச்சியைத் தரும் என்று இந்த மரங்களைப் பற்றி குறிப்பிட்டிருக்கிறார் இறைத்தூதர் நபிகள் நாயகம்.
பெர்சியாவில் தோன்றிய இந்த மிஸ்வாக் மரத்தை அரேபியர்கள் அராக், பீலு, சிவாக் என்ற பெயர்களில் அழைப்பது போலவே, நாம் இதனை குன்னி மரம் மற்றும் உகா மரம் என்று குறிப்பிட்ட குறிப்புகள் இருக்கின்றன.

ஏறத்தாழ ஏழாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக, மனிதனின் பற்கள் மற்றும் ஈறுகளை சுத்தப்படுத்த உதவும் இந்த மிஸ்வாக், ஒரு சிறு மர வகையைச் சேர்ந்த தாவரமாகும். இந்த மரத்தின் சிறுகிளைகளை ஒடித்து, பென்சில் அளவிற்கு வெட்டி, முனைகளை மென்று சிறு ப்ரஷ் போல ஆனதும் அதை பல்துலக்கப் பயன்படுத்துகின்றனர் இஸ்லாமியர்கள்.

உண்மையில் பல்துலக்க மட்டுமன்றி, பற்சிதைவு, ஈறுகள் வீக்கம், பற்களின் மீது படியும் திட்டுகள் (plaques) ஆகியவற்றையும் தடுக்கும் இந்த மிஸ்வாக், பற்களின் ஆரோக்கியத்தை முழுமையாகப் பாதுகாக்கிறது என்று கூறும் பல் மருத்துவர்கள், அதற்கான அறிவியலையும் எடுத்துரைக்கிறார்கள்.

மிஸ்வாக்கின் துவர்ப்பு சுவைக்கும், பிரத்தியேக மணத்திற்கும் காரணம் அதிலிருக்கும் Salvadorine, Pinene, Carvacrol, Thymol போன்ற ஆல்கலாய்டுகளும், அத்தியாவசிய எண்ணெய்களும் என்கிறார்கள். இவை மூச்சுக்குப் புத்துணர்ச்சி அளிப்பதுடன், நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரித்து, நுண்ணுயிரிகளால் ஏற்படும் பற்சிதைவையும், வாய் துர்நாற்றத்தையும் கட்டுப்படுத்துகின்றனவாம்.
மேலும் மிஸ்வாக்கின் சோடியம் க்ளோரைட், சோடியம் பைகார்பனேட், கால்சியம் ஆக்சைட் ஆகிய உப்புகள் பற்களுக்கு வெண்மையைத் தருவதுடன், பற்களின் எனாமலுக்கு வலிமை சேர்க்கும் என்பதாலேயே புகையிலை, காபி, டீ ஆகியவற்றினால் ஏற்படும் பற்களின் பழுப்பு நிறக் கறைகளுக்கு மிஸ்வாக் பெரிதும் பயன்படுத்துகிறார்களாம்.

மிஸ்வாக் குச்சிகளை மெல்லும்போது, அது, பாக்டீரியாக்கள், வைரஸ்கள் மற்றும் பூஞ்சகளை (Streptococcus, Porphyromonas, Candida) அழிப்பதுடன், அதிலுள்ள Resin என்ற பிசின், பற்களின் எனாமல் மீது படிந்து பற்சிதைவிலிருந்தும் பாதுகாப்பளிக்கிறது.

அனைத்திற்கும் மேலாக, இந்த குச்சிகள் அவற்றின் உவர்ப்பினாலும், தாவரச்சத்துகளாலும் உமிழ்நீர் சுரப்பியைத் தூண்டி, பசியையும், செரிமானத்தையும் அதிகரித்து, ஆரோக்கியத்தையும் கூட்டுகிறது என்று கூறும் இயற்கை மருத்துவ அறிவியல், மிஸ்வாக் குச்சிகள் மட்டுமன்றி, அதன் வேர்கள், இலைகள், மரப்பட்டை, பூக்கள் என அனைத்துமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை என்கிறது.

இந்தக் காரணங்களால் தான், ஏழாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே எகிப்திய பாபிலோனிய, கிரேக்க நாகரிகங்களில் மட்டும் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்ட இந்த மிஸ்வாக் குச்சிகளை, 1986-ம் ஆண்டு முதல் பல் சுகாதாரத்திற்கென்று சிறப்புப் பரிந்துரை செய்து, உலகெங்கும் இதன் பெருமையை பரவச் செய்துள்ளது உலக சுகாதார அமைப்பு.

எளிதில் கிடைக்கக்கூடிய இந்த மிஸ்வாக் குச்சிகள், இவ்வளவு நன்மைகளை உடலுக்குத் தருவதுடன், மனதிற்கும் புத்துணர்ச்சியைத் தருகின்றன என்பதால்தானோ என்னவோ மிஸ்வாக்கை ‘சொர்க்கத்தின் கிளைகள்’ என்று கொண்டாடுகிறது இஸ்லாம். அதிலும், “Siwak purifies the mouth and mind… It pleases the Allah… Let Peace be upon Him” என்று நபிகள் நாயகம் முன்மொழிய, ஐக்கிய அரபி நாடுகள், எகிப்து, இந்தியா, பாகிஸ்தான், மலேசியா ஆகிய நாடுகளில் வசிக்கும் இஸ்லாமியர்களின் முக்கியமான, மதிப்புமிக்க தொழுகைப் பொருளாகவும் கருதப்படுகிறது மிஸ்வாக்.

இஸ்லாமியர்கள் ஒருநாளில் குறைந்தது ஐந்து முறையேனும் மிஸ்வாக் குச்சிகளைப் பயன்படுத்த வேண்டும் என்று கூறும் அவர்களின் ஹதீத் குறிப்புகள், தூங்குமுன், விழித்தெழுந்தவுடன், தொழுகைக்கு முன், மதச் சம்பந்தமான நிகழ்வுகளில் கலந்து கொள்ளும்முன், விருந்துக்கு முன், பயணங்கள் மேற்கொள்ளும் முன்பும் பின்பும் என கட்டாயமாக மிஸ்வாக்கைப் பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிடுகிறது.
இதனாலேயே பல சமயங்களில், அரபு நாடுகளில் பலர் தங்கள் அலுவலகத்திலேயே மிஸ்வாக் குச்சிகளை மென்றபடி பணிபுரிவதை இப்போதும் காணலாம். இந்த சிறிய மெஸ்வாக் குச்சிகளை அவர்கள் உபயோகித்த பின் அவற்றை சுத்தமான நீரில் அல்லது ரோஸ் வாட்டரில் போட்டு வைப்பது நல்லது என்றும், அதேபோல மூன்றிலிருந்து ஐந்து நாட்களுக்கு ஒருமுறை, நுனியை அரை இஞ்ச் அளவு வெட்டிய பின் மீண்டும் அவற்றை எப்போதும் போல பயன்படுத்தலாம் என்றும் இதைப் பயன்படுத்தும் வழிமுறைகளைக் கூறுகின்றனர்.

என்றாலும், இது போன்ற குச்சிகளை பயன்படுத்தும்போது பற்களின் உட்புறங்களை சரியாக துலக்க முடியாதென்பதால் நோய்த்தொற்றையும், வெகு சிலரில் Gingival recession என்ற முன்பற்களின் தேய்மானத்தையும் இவை ஏற்படுத்தக் கூடும் என்றும் எச்சரிக்கிறது International Journal of BioPharma Research.

என்றாலும் பல்லுக்கு உறுதிதரும் இயற்கையான ஆலும், வேலும் குச்சிகளை நாம் பயன்படுத்துவது எப்படி குறைந்துவிட்டதோ அதேபோலவே மிஸ்வாக் குச்சிகளின் பயன்பாடும் அரபு நாடுகளில் குறைந்து வருகிறது.

இயற்கை தருகின்ற நலன்கள் அனைத்தையும் தனிமனிதன் மறந்தாலும், பன்னாட்டு நிறுவனங்கள் அவற்றை வியாபாரப்படுத்த தவறுவதில்லை என்பது மிஸ்வாக்கிலும் நடந்துள்ளது. “உங்களுக்கு தனித்தனியாக டூத் பேஸ்ட், டூத் பிரஷ், மவுத் வாஷ் தேவையில்லை. இயற்கை டூத் பிரஷ்ஷான ஒரே ஒரு மிஸ்வாக் குச்சி போதுமானது” என்ற விளம்பரங்களுடன், மேற்கத்திய நாடுகளில் மிஸ்வாக் குச்சிகளை சந்தைப்படுத்தும் வியாபாரிகள், இங்கிலாந்தில் ஒரு குச்சி 4 பவுண்டுகள் வரையும், இந்தியாவில் பத்துப் பனிரெண்டு குச்சிகளை நானூறு ரூபாய் வரையும் விற்கின்றனர்.

இயற்கையான மெஸ்வாக் குச்சியை விரும்பாதவர்களுக்கு, மிஸ்வாக்கின் சுவையை டூத் பேஸ்ட்களிலும் புகுத்திய வியாபார நிறுவனங்கள், இப்போது உலகெங்கும் மிஸ்வாக்கை பிரபலப்படுத்தி வருகின்றன. “இயற்கையை சற்று உற்றுப் பாருங்கள்… அது இன்னும் பல ஆழமான புரிதல்களை ஏற்படுத்தும்!” என்ற வரிகளுக்கேற்ப,எங்கே சுற்றினாலும் கடைசியில் இயற்கைக்குத்தான் திரும்ப வேண்டும் என்பது மிஸ்வாக்கில் மறுபடியும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

இந்தப் புரிதலுடன், காலை எழுந்தவுடன், ரசாயனங்கள் நிறைந்த டூத் பேஸ்ட் கொண்டு வாயைக் கெடுத்துக் கொள்ளாமல், இயற்கை அளித்துள்ள இனிய, எளிய, அனைவருக்குமான மிஸ்வாக்கோ, வேப்பங்குச்சியோ கொண்டு புன்னகையில் கொஞ்சம் புத்தொளியை சேர்ப்போம்!

என்றென்றும் இயற்கை

நன்றி:- விகடன்

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading