Local

‘ முன்கூட்டியே எச்சரித்தோம், அரசு கண்டுகொள்ளவில்லை’

இலங்கையில் செயற்படும் மத தீவிரவாத அமைப்புகள் உடனடியாக தடை செய்யப்பட வேண்டும் என்று அகில இலங்கை இந்து குருமார் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

கண்டியில் இன்று திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அகில இலங்கை இந்து குருமார் சங்கத்தின் , மத்திய மாகாண கிளை தலைவரான பிரம்ம ஶ்ரீ நில்லம்பே ஹரிதேவ் பிரபாகர குருக்கள் மேற்படி வலியுறுத்தலை விடுத்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு,

நாட்டில் கடந்த 21 ஆம் திகதி மூன்று தேவாலயங்கள், மூன்று ஹோட்டல்கள் உட்பட 8 இடங்களில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு தாக்குதல்களால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த கொடூர தாக்குதலை இந்து மக்கள் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

கொல்லப்பட்ட உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பிரஜைகளின் ஆத்மா சாந்தியடைய வேண்டும் எனவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் எனவும் பிரார்த்திக்கின்றோம்.

சம்பவத்தின் பின்னர், நாட்டில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக தீவிரமாக செயற்பட்ட ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு படையினர், மதத் தலைவர்கள் உட்பட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

உள்நாட்டுப்போரால் முப்பது வருடங்கள் இலங்கைவாழ் மக்கள் பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டனர். எனினும், போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதையடுத்து கடந்த 9 ஆண்டுகளாக மிகவும் அமைதியான முறையில் எவ்வித அச்சமும் இன்றி வாழ்ந்தோம். ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.

முஸ்லிம் நாடுகளில் இருந்து உதவிகளை எதிர்ப்பார்க்கும் அரசாங்கம், அங்கிருந்து என்ன வருகின்றது? யார் வருகின்றார்கள் என்பது குறித்து கடந்த காலங்களில் கவனம் செலுத்தவில்லை. அபிவிருத்தி குறித்து சிந்தித்தவர்கள் பாதுகாப்பு பற்றி கவனம் செலுத்தவில்லை. அதன் பிரதிபலனைதான் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கின்றோம்.

ஐ.எஸ். ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு , அடிப்படைவாத அமைப்புகள் சம்பந்தமாக பொதுபலசேனா அமைப்பு மற்றும் இந்து அமைப்புகள் சுட்டிக்காட்டியிருந்தன. இவை குறித்து அரசாங்கம் கவனம் செலுத்தவில்லை. எமது கோரிக்கைகள் உதாசீனப்படுத்தப்பட்டன. அரசியல் இலாபத்தை மட்டுமே அரசாங்கம் அன்று கருதியதால் இன்று நாட்டு மக்கள் மீளாத் துயரத்துக்குள் சிக்கியுள்ளனர்.

எனவே, மதமாற்றத்தை உடன் நிறுத்த வேண்டும் என்பதுடன், கிழக்கு உட்பட நாட்டில் செயற்படும் அடிப்படைவாத அமைப்புகளை அரசாங்கம் உடனடியாக தடை செய்யவேண்டும். தீவிரவாத அமைப்புகள் முளையிலேயே கிள்ளியெறியப்படவேண்டும். புலிகளையே அழித்த படையினருக்கு 200 , 300 தீவிரவாதிகளை ஒழிப்பது கடினமாக இலக்காக இருக்காது.” என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading