Local

வடக்கு – கிழக்கைக் கட்டுப்படுத்தவே இராணுவத்தை வைத்திருக்கிறது அரசு! – ரெலோவும் கண்டனம்

“வடக்கு, கிழக்கு மாகாணத்தில் நிலைகொண்டுள்ள இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் என்று கடந்த பத்து வருடங்களாக முன்வைக்கப்பட்டு வரும் கோரிக்கையைப் புறந்தள்ளி, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன கருத்து வெளியிட்டிருக்கின்றார். இது அவரின் கருத்து என்பதை விட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசின் சார்பில் வெளியிடப்பட்டிருக்கும் நிலைப்பாடு என்று கொள்ளப்படுவதே பொருத்தமானது.”

– இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ் ஈழ மக்கள் விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகம் ந.சிறிகாந்தா.

வடக்கு மாகாணத்தில் நிலைகொண்டுள்ள இராணுவத்தினரை அகற்றுவது சாத்தியமில்லை என்றும், இராணுவத்தால் பாதுகாப்பு இல்லை என்று உணர்வோரை வேறு இடங்களுக்கு மாற்றுவதே தீர்வாக அமையும் என்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தன ஆங்கில ஊடகம் ஒன்றுக்குக் கருத்துத் தெரிவித்திருந்தார்.

அது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே சிறிகாந்தா மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் உள்ளதாவது:-

“நாட்டின் பாதுகாப்புக்கு வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவத்தின் உயர்மட்ட தலைமை ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தெரிவித்துள்ள நிலையிலும் இந்தப் பிரதேசத்தில் ஒரு இலட்சத்துக்கு மேற்பட்ட இராணுவத்தினர் தொடர்ந்து நிலைகொண்டிருக்கின்றார்கள் என்பதும், கொழும்புக்கு வெளியே அமைந்திருக்கும் இராணுவக் களத் தலைமையகங்களில் 7இல், வடக்கில் நான்கும், கிழக்கில் ஒன்றுமாக மொத்தம் 5 தலைமையகங்கள் வடக்கு, கிழக்குப் பிரதேசத்தில் அமைந்திருக்கின்றன என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மைகளாகும்.

இதற்கான ஒரேயொரு காரணம் எதுவெனில், வடக்கு, கிழக்கு மாகாணங்களை இலங்கை அரசு தொடர்ந்து தனது பூரண கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டுமானால், கட்டாயமாக இத்தகைய இராணுவப்பிடிக்குள் இப் பிராந்தியம் இருந்தே ஆக வேண்டும் என அது நம்புவதே ஆகும் என்று திட்டவட்டமாக அடித்துக்கூற முடியும்.

வேறு விதமாகச் சொல்வதானால் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல் அபிலாஷைகளை திருப்திப்படுத்தக்கூடிய அரசியல் தீர்வு ஒன்று வழங்கப்படாத வரையில் தமிழர் தரப்பில் இருந்து ஆயுதப் போராட்டம் ஒன்று மீண்டும் வெடிக்கக்கூடும் எனச் சிங்களப் பேரினவாதிகளின் தரப்பில் நிலவிக்கொண்டிருக்கும் ஏகமனதான கருத்தொற்றுமையின் பிரதிபலிப்பே அது என்று கூறித்தான் ஆகவேண்டும்.

போர் முடிவடைத்து 10 வருடங்கள் முடிவடையும் நிலையிலும் கூட, தமது நீண்ட கால அரசியல் அபிலாஷைகளைத் துணிச்சலோடு இறுகப் பற்றி நிற்கும் தமிழ் மக்களின் சுதந்திர வேட்கையை, கடந்த கால அரசுகளைப் போலவே, ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசும் அச்சம் கலந்த எச்சரிக்கை உணர்வோடு கையாண்டு கொண்டிருக்கின்றது என்பதே கசப்பான உண்மையாகும்.

இத்தனைக்கும் இந்த அரசு வீழ்ந்து விடாமல் வடக்கு, கிழக்குப் பிராந்தியத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இரண்டெருவரைத் தவிர மிகுதி அனைவரையும் தனது அணியில் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தயவுடன் கூடிய ஆதரவுதான், அதனைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்றது என்பது அதை விட, மிகக் கசப்பான உண்மையாகும்.

பிரதமர் ரணிலைப் போலவே இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்த்தனவும் முன்னாள் ஜனாதிபதி காலஞ்சென்ற ஜே.ஆர். ஜயவர்த்தனவின் மருமகன் எண்பதையும் இந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பிடாமல் இருக்க முடியவில்லை. அந்த அதி உத்தமரின் வழியில் அரசியலுக்கு வந்தவர்கள் அவரின் பாணியில் பேச முயற்சிப்பது ஒன்றும் ஆச்சரியத்திற்கு உரியதல்ல.

போரில் விடுதலைப்புலிகள் இயக்கத்தைத் தோற்கடித்ததாக இப்போதும் மார்தட்டிக்கொண்டிருக்கும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் அவருடைய கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்களும் கூட பேசத் துணியாத அப்பட்டமான பேரினவாதக் கருத்துக்களை ருவன் விஜேவர்த்தன போன்ற இளைய அரசியல்வாதிகள் தயக்கம் இன்றிக் கக்குகின்றார்கள்.

இந்தச் சந்தர்ப்பத்தில் நாடு முழுவதும் பரந்துபட்ட அளவில் இராணுவத்தின் பிரசன்னத்தை சமநிலைப்படுத்தி, அதன் ஊடாக வடக்கு, கிழக்கில் நிலவிக்கொண்டிருக்கும் இராணுவமயச் சூழ்நிலையின் இறுக்கத்தையும் நெருக்குதலையும் தளர்த்துவதற்குக் கூட இந்த அரசு தயாரில்லை என்றால் அதைச் சாதிப்பதற்கு என்ன வழி என்பதைக் கட்டாயமாகத் தமிழ் மக்கள் சிந்தித்தே தீரவேண்டும்.

திறப்பை எங்கள் கைகளில் வைத்துக்கொண்டு பூட்டப்பட்டிருக்கும் கதவில் தொங்கிக் கொண்டிருக்கும் பூட்டைப் பார்த்து ஏங்குவதில் அர்த்தமில்லை. எம் இனத்தின் ஒட்டுமொத்த பிரச்சினைக்கும் கூட இது பொருத்தமானதாகும்” – என்றுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading