FeaturesLocalUp Country

மலையக தியாகி சிவனு லெட்சுமணன்

உண்மை என்றுமே மரணிக்காது. என்றாவது ஒரு நாள் தனக்கே உரிய பாணியில் அது வீறுகொண்டெழும். அப்போது போலிகளெல்லாம் புறமுதுகு காட்டி தலைதெறிக்க ஓடும்.  அந்த கண்கொள்ளா காட்சியே கால மாற்றமென விளிக்கப்படுகின்றது.

அதேபோல்தான் மக்களையும் எந்நாளும் ஏமாற்றி அடக்கி ஆள முடியாது.  என்றாவது ஒருநாள் அநீதிக்கு எதிராக பொங்கியெழுந்து –  நீதிக்காகவும், உரிமைக்காகவும்  ஓரணியில் திரண்டு விண்ணதிர கோஷம்  எழுப்புவார்கள். இதுவே சமூக மாற்றத்துக்கான ஆரம்பப் புள்ளியாக பார்க்கப்படுகின்றது.

இதன்படி எமது மலை மண்ணிலும் மக்கள் எழுச்சிக்கான அறிகுறிகள் பிரகாசமாகத் தென்படுகின்றன. வெகு விரைவிலேயே அது வெற்றிநடைபோடும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.  அது சமூக விடுதலைக்கான பயணமாகவும் அமையலாம்.

இன்று மட்டுமல்ல  இதற்கு முன்னரும் மலையக மக்களின் விடுதலைக்காக – விடிவுக்காக போராடுவதற்கு பலரும் முன்வந்தார்கள்.  ஆனால், சிற்றின்ப அரசியலுக்காக, மலையகத் தலைமைகளால் திட்டமிட்ட அடிப்படையில் போராளிகள் திசைதிருப்பட்டனர்.

ஏன்…!  மலையக மக்களின் உரிமைகளுக்காக போராடி உயர்நீத்தவர்களைக்கூட இன்று எவரும் நினைவு கூருவதில்லை. மலையகப் போராளிகளில் ஓரிருவரைக்கூட பெரும்பாலானவர்களுக்கு தெரியாது.

இன்று காணி உரிமை தொடர்பில் பிரமாண்டமான அறிவிப்புகள் விடுக்கப்பட்டுவருகின்றன. ஆனால், காணி உரிமைக்காக போராடி வீரமரணடைந்த சிவனு லெட்சுமணனை உங்களில் எத்தனைப் பேருக்கு தெரியும்?

தேயிலை நிலங்கள் சுவீகரிப்பு – 1977

1977 ஆம் ஆண்டில் மலைநாட்டில் தேயிலை நிலங்களை சுவீகரித்து,  சிங்களக் குடியேற்றங்களை அரங்கேற்றுவதற்கு அப்போதைய ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சி பிள்ளையார் சுழிபோட்டது.

1974 ஆம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சம் உட்பட மேலும் சில காரணங்களால் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் ஆட்சிமீது நாட்டு மக்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் 1977 ஆம் ஆண்டு ஜுலை 21 ஆம் திகதி பொதுத்தேர்தலுக்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனவே, தேர்தலுக்கு முன்னர் காணிகளை சுவீகரிப்பதில் சுதந்திரக்கட்சி அரசு,  கங்கணம் கட்டி செயற்பட்டது.  இதற்கமையவே 1977 இல் மஸ்கெலிய தேர்தல் தொகுதியில் சுமார் 7 ஆயிரம் ஏக்கர் காணி சுவீகரிப்பதற்கு திட்டமிடப்பட்டது. அளவீட்டுப் பணியும் ஆரம்பமானது.

குறித்த பகுதியில் புதிய குடியேற்றங்கள் உருவாகினால் 10 ஆயிரம் குடும்பங்களுக்கு வேலைபறிபோகும் அபாயம் ஏற்பட்டது. எனவே, இதற்கு எதிராக தொழிலாளர்கள் கிளர்ந்தெழுந்தனர். மக்களை ஓரணியில் திரட்டி போராட்டத்துக்கான தலைமைத்துவத்தை தொழிலாளர் தேசிய சங்கம் வழங்கியது.

ஆனாலும், இது விடயத்தில் முன்வைத்த காலை பின்வாங்குவதற்கு சு.க. அரசு, ஆரம்பத்தில் மறுத்தது. தொழிலாளர்களின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் காணி சுவீகரிப்பு வேட்டையில் தீவிரமாக  இறங்கினர் காணி சீர்திருத்த ஆணைக்குழு அதிகாரிகள். நுவரெலியா மாவட்டத்தில் பிரதான தோட்டங்கள்மீது அவர்களின் பார்வை திரும்பியது.

இதனால், மே முதலாம்  திகதி முதல் நுவரெலிய மாவட்டத்தில் பல இடங்களிலும் தொழிலாளர் புரட்சி வெடித்தது.  தொழிற்சங்கங்களும் பக்கபலமாக  இருந்தன.

விரைவில் பொதுத்தேர்தல் நடக்கவிருப்பதால் இப்பிரச்சினையானது சுதந்திரக்கட்சி அரசுக்கு பெரும் நெருக்கடியை கொடுத்தது. வேறுவழியின்றி, தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு அடிபணிந்து மே 11 ஆம் திகதி தொழிற்சங்கங்களை அழைத்து பேச்சு நடத்துவதற்கு சு.க. அரசு தீர்மானித்திருந்தது.

சிவனு லெட்சுமண்

குறித்த சந்திப்பில் தொழில் ஆணையாளர், காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் அதிகாரிகள், தொழில்சங்கப் பிரதிநிதிகள் என முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.  தேயிலைக் காணிகளை சுவீகரிப்பதைக் கைவிடுவதற்கு அரசாங்கம் பச்சைக்கொடி காட்டியது.

சந்திப்பு முடிவடைந்ததும், மகிழ்ச்சிகரமான செய்தியை தொழிலாளர்களுக்கு அறிவிப்பதற்காக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் புறப்பட்டனர்.

அரச பிரதிநிதிகளுடன் சந்திப்பு நடைபெறும் தினத்தில், காணி சுவீகரிப்பு கைவிடப்படும் என்ற செய்தியை காணி சுவீகரிப்பு அதிகாரிகள் அறிந்து வைத்திருக்காததால், வழமைபோல் மே 11 ஆம் திகதி காலை பத்தனை, டெவன் தோட்டத்தில் காணியை சுவீகரிக்கச் சென்றனர்.

இதற்கு தொழிலாளர்கள் இடமளிக்கவில்லை. தொடர்ந்தும் போராட்டத்தில் குதித்தனர். இதையடுத்து பொலிஸார் களமிறக்கப்பட்டனர்.

டெவன் தோட்டத்தில் ஏதோ குழப்பம், தொழிலாளர்களுக்கு பிரச்சினை என்பதை அறிந்த வட்டகொடை தோட்ட மக்கள், பத்தனையை  நோக்கி நடையைக்கட்டினர்.  சம்பவ இடத்துக்கு வந்து தொழிலாளர் பலத்துக்கு வலுசேர்த்தனர் . இதையடுத்து பொலிஸாருக்கும், மக்களுக்குமிடையில் சொற்போர் மூண்டது.

மோதல் உச்சம்தொட, தொழிலாளர்கள்மீது சூடு நடத்துவதற்கு பத்தனை பொலிஸார் முற்பட்டனர். அதை கண்ணுற்ற லெட்சுமணன், முன்னே பாய்ந்து – தொழிலாளர்களை நோக்கி பாய்ந்த துப்பாக்கி சன்னங்களை தனது மார்பங்களில் தாங்கி, மலையக தியாகிகள் வரலாற்றில் சங்கமித்தார்.

தொழிற்சங்க அரசியல்

லட்சுமணின் மரணமானது மலையகமெங்கும் சோக மேகங்களை சூழ வைத்தது. சக தொழிலாளர்களும் உணர்ச்சிப்பொங்கி வீதிகளில் இறங்கி, நீதி கேட்டனர்.  பதற்றம் உச்சம் தொட்டது. ஏதேனும்  அசம்பாவிதம் ஏற்பட்டுவிடும்   என்பதால் தொழிற்சங்கத் தலைவர்கள் தலையிட்டு, மக்களை அமைதிப்படுத்தினர். ஆனால், ஹட்டனுக்கு வெளியிலும் பல தோட்டங்களில் ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்தன.

சிவனு லெட்சுமணனுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக வெளி தோட்டங்களிலிருந்தும் தொழிலாளர்கள் அலைகடலென திரண்டுவந்தனர்.  வெறியர்கள்  சிலர் இடையூறு விளைவித்தாலும் – எதற்கும் அஞ்சாது  துணிவுடன் வந்து அகவணக்கம் செலுத்திவிட்டு புறப்பட்டனர்.

சிவனு லெட்சுமணனின் இறுதி ஊர்வலத்தை தொழிலாளர் தேசிய சங்கமே முன்னின்று நடத்தியது என அதன் உறுப்பினர்கள் தெரிவித்தனர்.  அமரர். தொண்டமானும் ஒத்துழைப்பு வழங்கினார்.லட்சுமணின் பூதவுடலை ஹட்டனிலுள்ள இ.தொ.காவின்  அலுவலகத்தில் அஞ்சலிக்காக வைப்பதற்கு அனுமதி வழங்கினார்.

தென்னிலங்கையிலுள்ள தொழிற்சங்கத் தலைவர்களுக்கும், வடக்கு, கிழக்கிலுள்ள அரசியல் வாதிகளும் தோட்டத்தொழிலாளர்களுக்கு நீதிகோரி குரல்எழுப்பினர்.

” அன்று மக்களுக்காக தலைவர்கள் ஒன்றுபட்டனர். ஆனால், இன்று குறுகிய அரசியலுக்காக பிரிந்து நின்று செயற்படுகின்றனர். தொண்டமானை விமர்சிக்கின்றனர்.” என்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர்.

” ஆனால், உண்மை அதுவல்ல. ‘ தேர்தல் காலமென்பதாலேயே இ.தொ.கா. அவ்வாறு செயற்பட்டது. சடலத்தில்கூட தொண்டமானும், ஐக்கிய தேசியக்கட்சியின் காமினி திஸாநாயக்கவும் அன்று அரசியல் நடத்தினர். கல்லறை கட்டுவதற்காக பண வசூலிப்பு வேட்டையில் இறங்கினர். இறுதியில் எதுவும் நடக்கவில்லை.” என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மலையக மாணவர்களின் எழுச்சியும்

இயக்கங்களின் உருவாக்கமும்

1977 ஆம் ஆண்டு மே 11 ஆம் திகதி நடைபெற்ற சம்பவம் தொடர்பில் கருத்து வெளியிட்ட மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், சமூக – மனித உரிமை செயற்பாட்டாளருமான அ. லோரன்ஸ் கூறியவை வருமாறு,

” 1970 ஆம் ஆண்டுக்கு பிறகு மலையக தமிழர், மலையக தேசியம் என்ற உணர்வு எம் மக்கள் மனங்களில் வேரூன்றத் தொடங்கியது. அதன்பின்னர் எம்மவர்களை ஒடுக்குவதற்கான செயற்பாடு நேரடியாகவும்,  மறைமுகமாகவும் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இதன் ஓர் அங்கமாகவே லெட்சுமணின்  மரணத்தை பார்க்கின்றோம்.

இது எங்கண் மண்,  காணி உரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என்பதில் உறுதியாக நின்றார். அதுமட்டுமல்ல, லெட்சுமணன் கொல்லப்பட்டதற்கு எதிராக மலையகத்தில் முதன்முறையாக மாணவர்கள் வீதிக்கு இறங்கி போராடினர். ஹட்டன், ஹைலன்ஸ், தலவாக்கலை பகுதியிலுள்ள பாடசாலை மாணவர்கள், பொலிஸாரின் எதிர்ப்பையும்மீற களம்கண்டனர். மலையக வெகுஜன அமைப்பு உள்ளிட்ட சிவில் அமைப்புகளும் போராடின.

அதன்பின்னர் மலையகத்தில் புதிய அமைப்புகளும் உருவாகின.”  என்றார்.

மே – 11 ஆம்  திகதி அணிதிரள்வோம்!

” மலையக மண்ணுக்காக உயிர்தியாகம் செய்த தியாகிகளை நாம் ஓவ்வொருவரும் கட்டாயம் நினைவுகூரவேண்டும். எனவே, மே மாதம் 11 ஆம் திகதி நினைவஞ்சலி கூட்டங்களை தோட்டவாரியாக நடத்துங்கள். மலையக தியாகிகள் சம்பந்தமாக இன்றைய தலைமுறைக்கு தெளிவுபடுத்துங்கள்.” என்று மலையக உரிமைக்கு குரல் அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

எழுத்து எஸ். பிரதா  – வட்டகொடை

தகவல்மூலம் –

அ.லோரன்ஸ் – மலையக மக்கள் முன்னணி.

அருட்தந்தை – மா. சத்திவேல் – மலையக சமூக ஆய்வு மையம்.

கம்பளை – இராமச்சந்திரன் ( சமூக செயற்பாட்டாளர்)

நன்றி – ‘ உரிமைப் போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகள்’

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading