Sports

சுருண்டது இந்தியா! பழி தீர்த்தது நியூஸிலாந்து!!

நியூஸிலாந்து வீரர்களின் துல்லிய பந்து வீச்சில் நிலைகுலைந்த இந்திய அணி 93 ஓட்டங்களுக்குள் சுருண்ட அதேவேளை நியூஸிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.

ஹமில்டனில் நேற்று நடைபெற்ற 4ஆவது ஒரு நாள் போட்டியில் நாணயச்சுழற்சியில் வென்ற நியூஸிலாந்து அணித் தலைவர் கேன் வில்லியம்சன், இந்திய அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தார்.

இதன்படி தொடக்க வீரர்களாகக் களமிறங்கிய இந்திய அணிக்கு நியூஸிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் டிரென்ட் போல்ட், கிராண்ட்ஹோம் கடும் அச்சுறுத்தல் அளித்தனர்.

ரோகித் சர்மா (7), கர் தவான் (13) இருவரையும் போல்ட் விரைவில் வெளியேற்றினார். இதையடுத்து அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகியோர் ஓட்டம் எதுவும் எடுக்காமல் கிராண்ட்ஹோம் ஓவரில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன்பின்னர் இளம் வீரர் சுப்மான் கில் 9 , கேதர் ஜாதவ் ஒரு ஓட்டமும் எடுத்த நிலையில், போல்ட்டிடம் விக்கெட்டை இழந்தனர்.

தொடர்ந்து விறுவிறுப்பாக 4 பந்துகளை பவுண்டரிக்கு விரட்டிய ஹர்திக் பாண்டியா, 16 ஓட்டங்களுடன் நடையைக் கட்டினார். புவனேஸ்வர் குமார் 1, குல்தீப் யாதவ் 15, அகமது 5 ஓட்டங்களில் ஆட்டமிழக்க 30.5 ஓவர்கள் மட்டுமே தாக்குப் பிடித்த இந்தியா, 92 ஓட்டங்களில் சுருண்டது.

நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். கிராண்ட் ஹோம் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து 93 ஓட்டங்கள் என்ற எளிய இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. தொடக்க வீரர் குப்தில் 14 ஓட்டங்கள் மட்டுமே எடுத்த நிலையில், அவரது விக்கெட்டை புவனேஸ்வர் குமார் கைப்பற்றினார்.

அதன்பின்னர் அணித்தலைவர் வில்லியம்சனையும் (11) விரைவில் பெவிலியனுக்கு அனுப்பினார்.

ஆனால், 3ஆவது விக்கெட்டுக்கு இணைந்த, நிக்கோல்ஸ் – டெய்லர் ஜோடி நிலைத்து நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றது.

நிக்கோல்ஸ் 30, டெய்லர் 37 ஓட்டங்களும் சேர்க்க, 14.4 ஓவர்களில் இலக்கை எட்டியது நியூஸிலாந்து. இதனால், 8 விக்கெட் வித்தியாசத்தில் நியூஸிலாந்து வெற்றி பெற்றது.

5 விக்கெட்டுகளைக் கைப்பற்றி இந்திய அணியை மிரட்டிய டிரென்ட் போல்ட், ஆட்ட நாயகன் விருது பெற்றார்.

இறுதிப் போட்டி வெலிங்டனில் எதிர்வரும் 3ஆம் திகதி நடைபெறவுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading