‘கஞ்சா’ கடத்தல் விவகாரம்: உண்மையில் நடந்தது என்ன? – சுமந்திரன் எம்.பி. விளக்கம்

“யாழ். வடமராட்சி கிழக்கு, செம்பியன்பற்றுப் பகுதியில் சிவில் உடையில் துப்பாக்கியுடன் நின்றவர்களை அப்பகுதி இளைஞர்கள் இராணுவத்திடம் ஒப்படைத்தமையால் ஒப்படைத்த இளைஞர்கள் கஞ்சா கடத்தியதாக சிவில் உடையில் வந்தோர் தகவல் வெளியிட்டிருக்கின்றனர்.”

– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி – பளை பிரதேசத்தில் கேரளா கஞ்சாவை பொதி செய்து, களஞ்சியப்படுத்தும் இடத்தை சுற்றிவளைத்து கைதுசெய்த நபர்களை விடுவிக்குமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய அரசியல்வாதி ஒருவர், பொலிஸாருக்கு அழுத்தம் கொடுத்ததாக ஆங்கில வாரப் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

இது தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் எம்.பி. ஊடக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:-

“செம்பியன்பற்றுப் பகுதியில் சிவில் உடையில் துப்பாக்கியுடன் நின்றவர்களை அப்பகுதி இளைஞர்கள் இராணுவத்திடம் ஒப்படைத்தமையினால் ஒப்படைத்த இளைஞர்கள் கஞ்சா கடத்தியதாக சிவில் உடையில் வந்தோர் தகவல் வெளியிட்டிருக்கின்றனர்.

செம்பியன்பற்றுப் பகுதியில் கடந்த 4ஆம் திகதி ஒரு நிகழ்வுக்குச் செல்வதற்கு என்னால் ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. இதேநேரம் முதல் நாள் 3ஆம் திகதி மாலை அப்பகுதியில் சிலர் சிவில் உடையில் சந்தேகத்திற்கு இடமாக நீண்ட நேரமாக சிலர் நடமாடியுள்ளனர்.

அதனை அவதானித்த அப்பகுதியின் சில இளைஞர்கள் அவர்களை அணுகி விசாரித்தபோது தாங்கள் பொலிஸார் எனக் கூறியுள்ளனர்.

இதன்போது குறித்த இளைஞர்கள் பொலிஸார் எனக் கூறியவர்களிடம் அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரியுள்ளனர்.

அதன்போது சிவில் உடையில் நின்றோர் கைத்துப்பாக்கிகளைக் காண்பித்துள்ளனர்.

இதன் காரணமாக அந்த இளைஞர்கள் துப்பாக்கியைக் காண்பிக்காது அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரியுள்ளனர்.

இதனால் அங்கே சிவில் உடையில் நின்ற ஆயுததாரிகள் வாகனத்தில் அந்த இடத்தில் இருந்து நகர்ந்து சென்றதனால் சில இளைஞர்கள் அவர்களை மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்த அதேநேரம் அருகில் இருந்த இராணுவ முகாமூக்கும் தகவல் வழங்கியுள்ளனர்.

இதனையடுத்து இராணுவத்தினர் குறித்த வாகனத்தை விரட்டிப் பிடித்துள்ளனர்.

அவ்வாறு பிடித்தபோது சிவில் உடையில் ஆயுதங்களுடன் இருந்த அனைவரும் பொலிஸார் என இராணுவத்தினர் அடையாளம் கண்டுள்ளனர்.

இருப்பினும் பளைப் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் பளைப் பொலிஸாரும் அந்த இடத்திற்கு வந்திருந்தனர்.

அங்கே சிவில் உடையில் ஆயுதங்களுடன் இருந்த பொலிஸார், சீருடைப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட சிவில் உடைப் பொலிஸார் பின்தொடர்ந்து வந்த கிராம இளைஞர்கள் தம்மைத் தாக்கினார்கள் எனவும், தாம் விசேட போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பொலிஸார் எனவும் பளைப் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.

இதனால் பின்தொடர்ந்து சென்றவர்களிலும் 4 இளைஞர்களைப் பொலிசார் கைது செய்திருந்தனர்.

குறித்த விடயம் எனது கவனத்திற்குக் கொண்டுவந்த நிலையிலேயே நான் பிரதிப் பொலிஸ்மா அதிபரைத் தொடர்பு கொண்டு விடயத்தை விளக்கினேன்.

இந்த இடத்தில் குறித்த சம்பவத்துடன் பலர் தொடர்புபட்ட நிலையில் எவ்வாறு பொய்யான ஒரு தகவல் கொடுக்கப்பட்டது என்று தெரியவில்லை” – என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *