EastLocal

முஸ்லிம் சமூகம் மிக அவதானமாக நடந்துகொள்வது காலத்தின் தேவை! – கிழக்கின் முன்னாள் முதல்வர் நஸீர் வலியுறுத்து

“ஒரு சமூகம் தனது உரிமைகளைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டுமாயின் அது ஏனைய சமூகங்களின் உரிமைகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். மதிப்பளித்தல் என்பது ஜனநாயகக் கோட்பாடுகளை உள்ளடக்கியவையாகவே இருக்கவேண்டுமே தவிர அவற்றை மிஞ்சுபவையாக இருந்துவிடக்கூடாது. எனினும், மிஞ்சும் நிலைமையே தற்போதைய நம் நாட்டு அரசியலில் ஏற்பட்டுள்ளது. இந்த விடயத்தில் முஸ்லிம் சமூகம் அவதானமாக நடந்து கொள்ள வேண்டியது காலத்தின் தேவையாகும்.”

– இவ்வாறு தெரிவித்தார் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட்.

இன்றைய அரசியல் நிலைமைகள் தொடர்பான ஆதரவாளர்கள் சந்திப்பு அண்மையில் அவரது அலுவலகத்தில் நடைபெற்றபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்ததாவது:-

“தற்போதைய அரசியல் சூழ்நிலைகளில் முஸ்லிம் சமூகத்தின் தலைமைகள் உறுதியான நிலைப்பாடுகளைக் கருத்தில் கொண்டு செயற்பட்டு வருகின்றன. இது கடந்த காலங்களை விட நமக்குக் கிடைத்திருக்கும் நல்ல சந்தர்ப்பமாகவே நாம் பார்க்கவேண்டும். இந்நிலை, ஏற்படுவதற்கு காரணமாக இருந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரின் ஆளுமைகளையும் வழிநடத்தல்களையும் நாம் பாராட்டியாக வேண்டும்.

எனினும், ஜனநாயகத்தை நிலைநிறுத்த நாம் அர்ப்பணிப்புடன் செயற்படுவது, ஒருபக்க சார்பாக அமைந்துவிடக்கூடாது என்பதிலும் நாம் அவதானம் கொள்ளவேண்டியவர்களாக இருக்கின்றோம். இந்த விடயத்தில் எமது மக்கள் மிக அவதானமாக நடந்து கொள்ள வேண்டிய தேவையும் இருக்கின்றது.

சிறுபான்மைச் சமூகங்களைப் பொறுத்த வரையில் மிகவும் நம்பிக்கையோடு உருவாக்கிய நல்லாட்சி அரசு, மூன்றரை வருடகாலங்களில் இவ்வாறு நிலைகுலைந்து போகும் என அவர்கள் நினைத்திருக்கவில்லை. அந்த நம்பிக்கையைத் தகர்க்கும் வகையில் தற்போது அரங்கேறிவரும் விடயங்கள் நாளாந்தம் வியப்பையே அளிக்கின்றன.

ஜனநாயகம் குறித்த வரைவிலக்கணம் என்ன என்பதுபோல் கேள்விகளும் எழவே செய்கின்றன. ஆட்சியிலுள்ள ஓர் அரசு நாடாளுமன்றத்தை விட்டுச் சென்று வெளிநடப்பு செய்கின்ற அதிசயத்தை நாம் முதன் முதலாக இங்குதான் பார்க்கின்றோம்.

குறிப்பாக இந்த இழுபறி நிலைமைகள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் அதலபாதாளத்தில் வீழ்ந்துள்ளது. டொலர் ஒன்றின் பெறுமதி 180 ரூபாவைத் தாண்டிச் சென்று கொண்டிருக்கின்றது. இது 200 ரூபாவாக அதிகரிக்கவும் கூடும். இது மக்களின் வாழ்வில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி விடும். எனவே, தற்போதைய இழுபறி நிலைக்குத் தீர்வுகாண இரு தரப்பினருமே முன்வரவேண்டும்” – என்றார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading