Local

மஹிந்த அணியின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தினார் ஜேர்மன் தூதுவர்!

மேற்குலக நாடுகளின் தூதுவர்களுடன் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று இரகசியப் பேச்சுக்களை நடத்தியுள்ளது.

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரொட் இதனை தனது ‘ருவிட்டர்’ பதிவில் உறுதிப்படுத்தியுள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன், 15 நாடுகளின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திரிகள் சந்திப்பு நடத்தியதை அடுத்து, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, தனது ‘ருவிட்டர்’ தளத்தில், ஐ.தே.க., கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள், வெளிநாட்டு இராஜதந்திரிகளைச் சந்திப்பதை விட்டுவிட்டு தமது மக்களைச் சந்திப்பது நல்லது என்று கருத்து வெளியிட்டிருந்தார்.

இதற்கு கனேடியத் தூதுவர், “உங்களின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்று கேளுங்கள்” எனப் பதிலடி கொடுத்திருந்தார்.

இதைத் தொடர்ந்து இலங்கையின் உள்விவகாரங்களில் கனடா உள்ளிட்ட சர்வதேச சமூகத்தினர் மூக்கை நுழைப்பதாக மஹிந்த தரப்பினால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

இந்தநிலையில், இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஜோர்ன் ரொட், நேற்று தனது ‘ருவிட்டர்’ பக்கத்தில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் சர்வ்தேச இராஜதந்திரிகளுடன் நடத்திய பேச்சுக்கள் தொடர்பாக தகவல் வெளியிட்டுள்ளார்.

“கனேடியத் தூதுவர் மற்றும் இராஜதந்திர சமூகத்தின் மீது ஏன் இந்த நியாயமற்ற விமர்சனம்? கடந்த செவ்வாய்க்கிழமை கனேடியத் தூதுவர் மற்றும் நாள் உள்ளிட்ட, கிட்டத்தட்ட ஒரு டசின் தூதுவர்கள், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நான்கு முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் ஆகியோரை அவர்களின் கோரிக்கைக்கு அமைய சந்தித்தோம்.

அவர்களின் கோரிக்கைக்கு அமைய, இரகசியத்தன்மையை மதித்தோம்.

அதன் பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தலைமையிலான சந்திப்புக்கு அழைக்கப்பட்டோம். இலங்கை ஜனாதிபதி, சபாநாயகர், ஏனைய பங்காளர்களுடனும் வெளிநாட்டு இராஜதந்திர சமூகத்தினர் சந்தித்துள்ளனர்.

எல்லாத் தரப்புகளினதும் கருத்துக்களை கேட்பது எமது பணியின் ஒரு அங்கம்” என்றும் ஜேர்மன் தூதுவர் கூறியுள்ளார்.

இதையடுத்து, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உயர்மட்டம், மேற்குலக இராஜதந்திரிகளுடன் இரகசியப் பேச்சுக்களை நடத்தியதும், அந்தச் சந்திப்பு குறித்த இரகசியம் பேண முற்பட்டுள்ளதும் அம்பலமாகியுள்ளது.

சர்வதேச தலையீடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை வெளியிட்டுக் கொண்டு, மஹிந்த தரப்பு, சர்வதேச இராஜதந்திரிகளுடன் இரகசியமாக பேச்சுக்களை நடத்தியிருப்பது, கடுமையான விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading