Local

எங்களிடமும் குதிரைப்பேரம் பேசினர் – சரணடையவில்லை ! சவாலை முறியடிக்க பாடுபடுவோம்!!

” திங்கட்கிழமை (05) சவாலில் வெற்றிபெற்று மீண்டும் ரணில் அரசு உதயமாகுமானால் அதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய சிறுபான்மையின கட்சிகளே பிரதான காரணமாகும் .நாங்கள் தடம் மாறி இருந்தோமானால், இந்நேரம் நிலைமை தலைகீழாக மாறி இருக்கும்” என்று முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் இன்று தெரிவித்தார்.

” எங்கள் சிறுபான்மை கட்சிகளில் உள்ள எம்பீக்களை விலை கொடுத்து, பதவி கொடுத்து வாங்க எவ்வளவோ முயற்சிகள் நடந்தாலும் அவற்றை நாம் பொறுமையுடன் சமாளித்தோம்.  மிகப்பெரும் பேரங்களை பெரிய மனிதர்களே நேரடியாக பேசினார்கள். எனினும் நாம் விலை போகவில்லை”  என்றும் அவர் கூறினார்.

மட்டக்குளியில்  நடைபெற்ற, ஜனநாயக மக்கள் முன்னணியின்  கொழும்பு, கண்டி, களுத்துறை, கம்பஹா, கேகாலை, இரத்தினபுரி, மாத்தளை  மாவட்ட பேராளர் மற்றும் மக்கள் பிரதிநிதிகள்  கூட்டத்தில் உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இதுவரை கிடைத்துள்ள தகவலின்படி, மகிந்த அணிக்கு தாவியுள்ளவர்கள், ஐக்கிய தேசிய கட்சியை சார்ந்த எம்பீக்கள் ஆகும்.  ஐக்கிய தேசிய முன்னணியில் உள்ள சிறுபான்மை கட்சி எம்பீக்களுக்கும் பேரங்களை பேசி சலசலப்புகளை ஏற்படுத்த மாற்று அணி முயன்றாலும், தலைமைகளது நிர்வாகத்தால், அந்த முயற்சிகள் பிசுபிசுத்து போயுள்ளன.

மகிந்த ராஜபக்ச  தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பீடம் ஏறுவது என்பது வேறு. ஆனால்,  நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒரு ஆட்சியை கலைத்து, பிரதமரையும், அமைச்சர்களையும் பதவி நீக்கம் செய்து ஆட்சியை கைப்பற்றுவது முறைக்கேடான செயலாகும். இது இந்நாட்டு ஜனநாயகத்துக்கு ஏற்பட்டுள்ள சவாலாகும். இதற்கு நாம் துணை போக முடியாது என நாம் முடிவு செய்தோம்.

எமது பங்களிப்பு இல்லாவிட்டால், ஐக்கிய தேசிய கட்சி இன்ன மும் பலவீனமடைந்து இருக்கும். இதை ஐதேக தலைமைக்கு நாம் அறிவித்துள்ளோம். அவர்களும் இதை இன்று புரிந்துக்கொண்டுள்ளார்கள்.  எமது கூட்டு முயற்சி வெற்றி பெற்று நாம் அடுத்த வாரம் மீண்டும் ஆட்சியை கைப்பற்றுவோம் என் நான் திடமாக நம்புகிறேன். அந்த ஆட்சியில்  எமது இன்றைய பங்களிப்பின் தாக்கம் தெரிய வரும் – என்றார்.

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading