LTL Holdings நிறுவனம் ஆரம்ப பொது பங்கு வழங்கல் அறிவிப்புடன் கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் அறிமுகமாகவுள்ளது
40 வருட கால அனுபவத்தைக் கொண்ட, இலங்கையின் பன்முகப்படுத்தப்பட்ட, ஒன்றிணைக்கப்பட்ட வலுத்துறையில் முன்னணி நிறுவனமாகிய LTL Holdings Limited, ஆரம்ப பொது பங்கு வழங்கல் குறித்து அறிவித்துள்ளதுடன், கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடதுள்ளது. மேலும், இப்பட்டியலிடலானது, கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் முன்னெடுக்கப்படவுள்ள மாபெரும் ஆரம்ப பொது பங்கு வழங்கலாக அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆரம்ப பொது பங்கு வழங்கலினூடாக, பங்கொன்றுக்கு ரூ. 14.50 வீதம் 1,379,310,400 புதிய சாதாரண வாக்குரிமை பங்குகள் வெளியிடப்படவுள்ளதுடன், அதன் ஆரம்ப மொத்த மதிப்பு ரூ. 16 பில்லியனாக அமைந்திருக்கும். ஆரம்ப பொது பங்கு வழங்கலினூடாக இந்தப் பெறுமதியை ரூ. 20 பில்லியனாக உயர்த்துவதற்கும், பொது மக்களுக்கு LTL நிறுவனத்தின் 22.3% உரிமையாண்மையை பெற்றுக் கொடுப்பதற்கும்
எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஆரம்ப பொது பங்கு வழங்கல் 2024 செப்டெம்பர் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதுடன், பங்கு கொள்முதலுக்கான விண்ணப்பங்கள் தற்போது ஏற்றுக் கொள்ளப்படுகின்றன.
ஆரம்ப பொது பங்கு வழங்கலிலிருந்து பெறப்பட்ட தொகையில், ரூ. 13.5 பில்லியன், கெரவலபிட்டிய பகுதியில் (சஹாஸ்தனாவி லிமிடெட்) 350 MW இணைந்த சுழற்சி வலுப் பிறப்பாக்கல் ஆலையை நிர்மாணிப்பதற்கான முதலீடாக பயன்படுத்தப்படும். இது, இலங்கையில் திரவ இயற்கை எரிவாயுவில் (LNG) இயங்கும் இரண்டாவது வலுப்பிறப்பாக்கல் நிலையமாக இது அமைந்திருக்கும். மேலும் மிகுதி தொகை ரூ. 6.0 பில்லியன், சியம்பலாண்டுவ சூரிய மின் வலுப் பிறப்பாக்கல் (ரிவிதனாவி பிரைவட் லிமிடெட்) திட்டத்தின் 50% பங்குகளில் முதலீடு செய்வதற்கு ஒதுக்கப்படும்.
LTL நிறுவனம் பல்வேறு துறைகளில் இயங்குகின்றது, இதில் மின் உற்பத்தி, மின் உற்பத்தி ஆலை கட்டுமான பொறியியல் சேவைகள் (பொறியியல், கொள்முதல் மற்றும் நிர்மாணம்) மற்றும் O&M (செயற்பாடுகள் மற்றும் பராமரிப்பு) சேவைகள், வலு விநியோக சாதனங்களின் உற்பத்தி மற்றும் பார பொறியியல் சேவைகள் போன்றன அவற்றில் அடங்கும். மேலும், புதுப்பிக்கப்படக் கூடிய எரிசக்தி, மின் உற்பத்தி துறைகளிலான முதலீடுகளில் உறுதியான நோக்கத்தை கொண்டுள்ளதுடன், நிறுவனத்தின் வளர்ச்சி மூலோபாயத்தில், இந்த ஆரம்ப பொது பங்கு வழங்கல், மிகமுக்கியமான மைல்கல்லை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது. இதன் மூலம், LTL நிறுவனம், இலங்கையின் வலுத்துறையில் முன்னணி செயற்பாட்டாளராக தன்னை மீளுறுதி செய்யவும் முன்வந்துள்ளது.
இலங்கை, பங்களாதேஷ் மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளில் 894 MW மின் உற்பத்தி ஆற்றலை கொண்டுள்ளதுடன், 450 MW க்கு அதிகமான திறன் கொண்ட மின் உற்பத்தி ஆலைகளை நிறுவத் திட்டமிட்டுள்ள நிலையில், இலங்கையில் 1,000 MW க்கு அதிகமான மின் உற்பத்தி திறனை கொண்ட முதலாவது சுயாதீன வலு உற்பத்தியாளராக LTL நிறுவனம் திகழவுள்ளதுடன், கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்படவுள்ள மாபெரும் சுயாதீன வலு உற்பத்தியாளராகவும் LTL நிறுவனம் அமைந்திருக்கும்.
மேலும், மின்பிறப்பாக்கி (Transormers) உற்பத்தி மற்றும் நாகத்தோய்வு (Galvanizing) செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்களவு சந்தை நிலையை LTL நிறுவனம் கொண்டுள்ளதுடன், 30 க்கு மேற்பட்ட நாடுகளில் உறுதியான ஏற்றுமதி பிரசன்னத்தை கொண்டுள்ளது. இதில், தெற்காசியா மற்றும் ஆபிரிக்கா ஆகிய நாடுகளும் அடங்கும். LTL நிறுவனம், தனது இந்திய துணை நிறுவனத்துடன், Switchgear உற்பத்தியிலும் ஈடுபட்டுள்ளது. இந்திய உள்ளக சந்தை, இதர ஆசிய, மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்க நாடுகளுக்கு அவசியமான மின் வலுப் பிறப்பாக்கலுடன் அவசியமான சானதங்களாக இவை அமைந்துள்ளன.
நிறுவனத்தின் எதிர்கால திட்டங்களில் மின் உற்பத்தி ஆலை நிர்மாணித்திட்டங்கள், உற்பத்தி துறைகளின் சர்வதேச சந்தைகளுக்கான விரிவாக்கம் மற்றும் LNG உட்கட்டமைப்பு வசதிகள் தொடர்பாக காணப்படும் வாய்ப்புகளை இனங்காணல் போன்றன அடங்கியுள்ளன.
நிறுவனத்தின் தற்போதைய பங்குதாரர்களில் இலங்கை மின்சார சபை (CEB), வெஸ்ட் கோஸ்ட் பவர் (பிரைவட்) லிமிடெட், டெக்புரோ இன்வெஸ்ட்மன்ட் லிமிடெட் மற்றும் பெரதெவ் லிமிடெட் போன்றன அடங்கியுள்ளதுடன், LTL நிறுவனத்தின் பணிப்பாளர் சபையில் பல்வேறு துறைகளில் அனுபவம் வாய்ந்த அங்கத்தவர்கள் காணப்படுகின்றனர்.
LTL நிறுவனத்தின் செயற்பாடுகளில் உறுதியான நிதிப் பெறுபேறுகள் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம் ஆகியன செல்வாக்கு செலுத்துகின்றன. 2024 மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில், LTL நிறுவனத்தினால் ரூ. 59.8 பில்லியன் மொத்த வருமானம் பதிவு செய்யப்பட்டிருந்ததுடன், இதில் ரூ. 5.8 பில்லியன். வரிக்கு பிந்திய இலாபமாக பதிவாகியிருந்தது. இதில் 70% ஆன வருமானம் வெளிநாட்டு நாணயத்துடன் தொடர்புடையதாக அமைந்துள்ளமை சிறப்பம்சம். 2024 மார்ச் 31 ஆம் திகதியன்று, LTL நிறுவனத்தின் மொத்த குழும சொத்துகள் மற்றும் குழும பங்கு மதிப்பு ஆகியன ரூ. 133.6 பில்லியன். மற்றும் ரூ. 74.4 பில்லியனாக காணப்பட்டன. LTL நிறுவனத்தினால், நிதியாண்டு 2020 முதல் 2024 வரையான 5 ஆண்டு காலப்பகுதியில், 5 ஆண்டு சராசரி, வரிக்கு பிந்திய இலாபமாக (PAT) 35%, மற்றும் 5 ஆண்டு சராசரி பங்கின் மீதான வருமதி (ROE) 27% பதிவாகியிருந்தது. மேலும், கெரவலபிட்டிய 350MW சொபதனாவி மின் ஆலையின் செயற்பாட்டின் தொடக்கதுடன், நிறுவனத்தின் நிதிசார் செயற்பாடுகள் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. வலுத்துறையில் முழுமையாக ஒன்றிணைக்கப்பட்ட செயற்பாட்டாளர் எனும் வகையில், அதிகரித்துச் செல்லும் வலுப் போக்கை மூலதனமாக்ககூடிய வலுவான நிலையில் LTL நிறுவனம் காணப்படுகின்றது.
ஆரம்ப பொது பங்கு வழங்கலை NDB முதலீட்டு வங்கி லிமிடெட் மற்றும் CT CLSA கெப்பிட்டல் (பிரைவட்) லிமிடெட் ஆகியன இணைந்து நிர்வகிக்கின்றன. இந்த வழங்கலுக்கான சட்டத்தரணிகளாக F J & G De Saram திகழ்வதுடன், வழங்கலுக்கான பதிவாளர்களாக SSP Corporate Services (Private) Limited திகழ்கின்றது. ஹற்றன் நஷனல் வங்கி பிஎல்சி (HNB PLC) மற்றும் சம்பத் வங்கி பிஎல்சி (Sampath Bank PLC) ஆகியன இந்த வழங்கலின் வங்கியாளர்களாக அமைந்துள்ளன.
ஆரம்ப பொது பங்கு வழங்கலில் முதலீடு செய்வது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு www.ltl.lk/ipo/ பார்க்கவும்.