World

நித்தியானந்தாவை புகழ்ந்த நீதிபதி!

தமிழகத்தில் நாகை, திருவாரூர் மாவட்டங்களில் உள்ள 4 மடங்களுக்கு மடாதிபதியாக நித்யானந்தா நியமிக்கப்பட்டதை எதிர்த்து, நாகை நீதிமன்றத்தில் உரிமையியல் வழக்கு தொடரப்பட்டது. இதில் பக்தர் ஒருவர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில், நான்கு மடங்களையும் நிர்வகிக்க, தக்காரை நியமித்து இந்து சமய அறநிலையத்துறை உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து, நித்யானந்தா சார்பில்  அதிகாரம் பெற்ற நித்யா, கோபிகா ஆனந்த் என்ற உமாதேவி உள்ளிட்டோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அந்த வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, “உமாதேவிக்கு வழங்கப்பட்டுள்ள பொது அதிகார பத்திரத்தின் மீது சந்தேகம் உள்ளதால், நித்யானந்தாவிடம் விசாரணை நடத்த வேண்டும். ஆகவே அவரை ஆஜராக சொல்லவும்” என மனுதாரர் தரப்பு சட்டத்தரணியிடம் கூறினார். இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு சட்டத்தரணி, “நித்யானந்தா இந்தியாவில் இல்லை. அவர் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியும் அல்ல” என்றார்.

உடனே நீதிபதி, “நித்யானந்தா  எங்கிருக்கிறார் என தெரிய வேண்டும். காணொளி காட்சி மூலம் அவரை ஆஜராக சொல்லலாம்” எனத் தெரிவித்தார். ஆனால், மனுதாரர் தரப்பில், “நித்யானந்தா ஆஜராக இயலாது” என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, “தக்கார் நியமனம் தொடர்பான அரசின் உத்தரவில் தலையிட முடியாது” எனக்கூறி நீதிபதி தண்டபாணி வழக்கை ஒத்திவைத்தார்.

இதேவேளை “நித்யானந்தாவின் ஆன்மிக உரைகள் சிறப்பானவை. அவரது ‘கதவைத் திற காற்று வரட்டும்’ என்ற தொடரில் ஆழ்ந்த அர்த்தங்கள் இருக்கும். காஞ்சி பெரியவர் கூறியது போல, சன்னியாசி, சன்னியாசியாக இருக்க வேண்டும் ” என நீதிபதி கருத்து தெரிவித்தார்.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading