Local

உத்தியோகப்பூர்வமாக ஏற்கப்படவுள்ள வேட்பு மனுக்கள் – அதியுயர் பாதுகாப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் ,தேர்தல்கள் ஆணைக்குழுவால் இன்று வியாழக்கிழமை உத்தியோகப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.

இதன்படி, காலை 09.00 மணிக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

வேட்புமனுக்கள் தொடர்பான ஆட்சேபனைகளை இன்று காலை 11.00 மணி முதல் 11.30 வரை தெரிவிக்க முடியும்.

ஆட்சேபனைக்கான நேரம் நிறைவடைந்ததன் பின்னர் கட்சிகள் மற்றும் சுயாதீன வேட்பாளர்களுக்கான தேர்தல் சின்னங்கள் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்போது, ​​தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிக்கும் விசேட பாதுகாப்பை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்படும் வேளையில் அப்பகுதி அதியுயர் பாதுகாப்பு வலயமாக மாற்றப்பட்டு, அனுமதிக்கப்பட்ட நபர்கள் மற்றும் வாகனங்கள் மாத்திரமே அப்பகுதிக்குள் நுழைய முடியும்.

வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் வேளையில் சரண மாவத்தையைச் சுற்றியுள்ள அரச நிறுவனங்கள் மற்றும் வைத்தியசாலைகள் மூடப்படவுள்ளதால், பொது அலுவல்கள் மற்றும் வேறு கடமைகளுக்காக அப்பகுதிக்குள் பிரவேசிப்பதை தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

வேட்புமனுக்களை கையளிப்பதற்காக வேட்பாளருடன் இருவர் மாத்திரமே வருகைத்தர முடியும் எனவும் அவர்களுக்கு விசேட அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.

வேட்பாளரை ஏற்றிச் செல்லும் வாகனம் மாத்திரமே சரண மாவத்தைக்குள் நுழைய முடியும். வேட்பாளர் சரண மாவத்தையின் இறுதி வீதித் தடைக்கு அருகில் வாகனத்தை நிறுத்திவிட்டு தேர்தல் அலுவலகத்திற்கு நடந்து செல்ல வேண்டும்.

வேட்பாளர்களுடன் வரும் ஆதரவாளர்கள் தங்குவதற்கு சிறப்பு இடங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகன நெரிசல் காரணமாக பயண சிரமங்களை எதிர்நோக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள் 0718 591 741 அல்லது 0112 433 333 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்துவதனூடாக உதவியை பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனுக்கள் ஏற்கப்படும் நாளில் பாதுகாப்பிற்காக சுமார் 1500 பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

விசேட போக்குவரத்து திட்டம்

நெரிசலைக் குறைப்பதற்காக காலை 08 மணி முதல் பிற்பகல் 02 மணி வரை சிறப்புப் போக்குவரத்துத் திட்டம் அமுலில் காணப்படும்.

ஸ்ரீ ஜயவர்தனபுர வீதியில் ஆயுர்வேத சந்தியிலிருந்து ராஜகிரிய சந்தி வரையிலான வெளியேறும் பாதை முற்றாக மட்டுப்படுத்தப்படும்.

ஸ்ரீ ஜயவர்தனபுர வீதியை பொல்துவ சந்தியில் இருந்து டி.எஸ்.சேனநாயக்க சந்தி வரையில் அத்தியாவசிய தேவையின்றி பயன்படுத்துவதை தவிர்க்குமாறு வாகன சாரதிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Oruvan

Oruvan

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading